Sunday, October 28, 2012

கழிப்பறையா? கோவிலா?


சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கடற்கரைக் காமராஜர் சாலை, தியாகராயர் நகர் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலைகள், சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை, உயர்நீதிமன்ற பிராட்வே சாலை .... இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா? ஆனால்,
சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும். அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும், அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங் களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை. மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். உங்கள் ஊர்களி லேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோத மானவை. எந்தவித நில உரிமையும் இல்லாதவை. ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில், பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இடத்தில் ஆக்கிர மித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது. அப்போது சில கோவில் கள் அகற்றப்பட்டன. அதன்விளைவாக சாலைகள் விரிவாயின. போக்குவரத்து சீரானது.
அதனைத் தொடர்ந்து சில ஆண்டு களில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட் டது. மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. ஆனால், அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.
மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான். ஆனால், மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை, நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை. பொது ஒழுக்கத் தையும் பேணுவதில்லை.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.
அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல. இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும். நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன. அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது "நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன.
கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார்.
இந்த உரையை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.அதைப் பார்த்தபோது அவர் திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது. பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின்செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.
இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.
வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது. அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.
எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா? நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?
இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை? புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?  நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும், 6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது. இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.
அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில், வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர். தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும், 3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர் களாகவும் இருக்கின்றனர்.
இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது. இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்பட வேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
-இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு. ஆனால், எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா? கோவில்களைக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.
ஆனால், சாலையோரங்களில், சந்துபொந்து களில், வெட்டவெளிப்பொட்டல்களில் மலம்-_ சிறுநீர் கழிப்பதை நிறுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல்நோட்டைத்தூக்கியதுண்டா? கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்த துண்டா? அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத் துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப் பதுதான் உண்டா? சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித் துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும் போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள், எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நடத்தியதுதான் உண்டா? நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!
அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா? மனித அறிவை மழுங்கடித்து  பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?
* நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;பக்கத்தில கோவில் எங்க இருக்கு ன்னு யாராவது கேக்குறாங்களா?அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இதுமாதிரிதானே!
* இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப் படுத்த முனைந்தார். அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரி கள் கூறினார்கள்.சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி. அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன. அங்குமட்டுமல்ல,இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை. மோடி இடித்தால் குட்டிச்சுவர்; மற்றவர் இடித்தால் கோவிலோ?


* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது. இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை. ஆனால், 63.2 விழுக்காட்டினர் தொலைப் பேசியும், 53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர்.
- மணிமகன்-

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...