பிறப்பு நாள் : 02-07-1923
உடன் பிறப்பு : மூத்த சகோதரி ஒருவர் சவுந்திரம்
தந்தை : க.வீ. கருப்பண்ணன்
தாய் : ரங்கம்மாள்
படிப்பு : 4- ஆம் வகுப்பு வரை மேலூர் கந்தசாமிக் கண்டர் துவக்கப்பள்ளி, 8-ஆம் வகுப்பு வரை குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளி, 10- ஆம் வகுப்பு வரை திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளி, இன்டர்மீடியேட் வரை திருச்சி தேசியக் கல்லூரி
திருமணம் : 03-06-1946 வாழ்விணையர் சுந்தராம்பாள் தமிழ் அறிஞர் உலக ஊழியர் தலைமையில்
குழந்தைகள் : தமிழரசி - வாழ்விணையர் விவேகானந்தன் திருமணம் பொத்தனூரில் தந்தை பெரியார் தலைமையில். தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர். மலர்க்கொடி - வாழ்விணையர் திருவாரூர் சோ. ரவீந்திரன் திருமணம் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி தலைமையில் மானமிகு அன்பில் தர்மலிங்கம் மற்றும் அறிஞர் பலர் பெரியார் மாளிகை திருச்சியில் கலந்து கொண்டனர்.
பொத்தனூர் பேரூராட்சியில் 1957 முதல் 1976 வரை துணைத் தலைவராகவும், தலைவராகவும் பொறுப்பு. எங்கள் காலத்தில் சாதிப் பெயரைக் குறிக்கும் கடைகளுக்கோ, உணவு விடுதிகளுக்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதற்காக விடுதலை நாளேட்டில் பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டது. ஏன் உங்கள் பஞ்சாயத்தைக் கலைக்கக்கூடாது என்று அரசிடமிருந்து தாக்கீது வந்தது.
கட்சிப் பணி : 1944 - இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றப் பட்ட நீதிக்கட்சி மாநாட்டில் திருச்சி கல்லூரியில் இருந்து சென்று கலந்து கொண்டேன்.
: 1944 - டிசம்பரில் பொத்தனூரில் திராவிடர் கழக கிளை துவங்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாட்டைப் போல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தந்தை பெரியார், நாவலர் நெடுஞ்செழியன், டார்பிடோ சனார்த்தனம், தவமணிராசன், கவிஞர் கருணாநந்தம், சி.பி. சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொறுப்புகள் : பொத்தனூர் நகர தி.க. தலைவர் நாமக்கல் மாவட்ட தி.க. தலைவர், சேலம் மாவட்ட தி.க. தலைவர், நாமக்கல் பிரிந்த பின் நாமக்கல் மாவட்ட தி.க. தலைவர், சேலம் மண்டல தி.க. தலைவர், ஈரோடு மண்டல தி.க. தலைவர், 1964 - இல் நீடாமங்கலத்தில் நடந்த முதல் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டில் அமைக்கப்பட்ட மாநில திராவிடர் மாணவர் கழகத்திற்கு திருச்சி மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன்.
: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தில் உறுப்பினராக, துணைத் தலைவராக, தற்போது தலைவராக பொறுப்பில் உள்ளேன்.
மாநாடுகள் : 1945 - இல் திருச்சியில் நடைபெற்ற வட மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாட்டை வரவேற்புக் குழு தலைவராக இருந்து நடத்தினேன். மானமிகு டார்பிடோ ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார், தவமணிராசன், மு.கருணாநிதி, ஈ.வெ.கி. சம்பத், டி.கே.சீனிவாசன், சிறுவன் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். : 1957 -இல் வேலூர் காவேரிப் பாலத்தின் அருகில் ஆற்று மணலில் நாமக்கல் கரூர் வட்ட தி.க. மாநாடு. நாமக்கல் வட்ட தி.க.தலைவர் நானும், கரூர் வட்ட தி.க.தலைவர் தவிட்டுப்பாளையம் வெங்க டாசலமும் சேர்ந்து நடத்தினோம். தந்தை பெரியார், குத்தூசி குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
: நாமக்கல் திராவிடர் கழக இளைஞர் மாநாடு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடத்தினோம்.
: சேலத்தில் மாவட்ட, மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆத்தூர், மேட்டூர், ஓமலூரில் கழக மாநாடுகள் நடத்தப்பட்டன.
கழகத்தில் 1944-இல் சேர்ந்தது முதல் தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், போராட்டங்கள் எல்லாவற்றி லும் கலந்து கொண்டுள்ளேன். பிள்ளை யார் உடைப்பு, ராமன்பட எரிப்பு, தேசப்பட எரிப்பு, இராவணலீலா, மனுதர்ம எரிப்பு, இரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்பு, மண்டல் குழு பரிந்துரையை அமுலாக்கக் கோரி அஞ்சலகம் முன் மறியல், உச்சநீதிமன்ற ஆணை எதிர்ப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டேன். இவைகளில் சிலவற்றில் மணிக் கணக்கிலும், நாள் கணக்கிலும், சிறை சென்றாலும், 01-02-1976 முதல் 23-01-1977 வரை சுமார் ஓராண்டு சேலம் சிறையில் மிசா கைதியாக இருந்துள்ளேன். ( 19-07-2012 அன்று பொத்தனூரில் க.ச. அய்யாவுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி. ஈரோடு மண்டலச் செயலாளர் தோழர் த.சண்முகம் அவர்களும் உடன் இருந்தார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் இயக்கத்தோடு, ஒன்றிப் பழகிய அன்றிலாய், வாழ்ந்த க.ச. அய்யாவிடமிருந்து பல செய்திகளைத் தெரிந்து கொண்டோம்.
ப.காளிமுத்து: அய்யா, உங்களுக்கு திராவிடர் இயக்க உணர்வு எப்படி வந்தது?
க.சண்முகம்: நான் குளித்தலை உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த போது என் பள்ளிக்கு எதிரிலேயே மாநாடு ஒன்று நடந்தது. தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரி, கே.எம்.பாலசுப்பிரமணியம், சுல்தான்பட்டாதி ஆகியோர் அந்த மாநாட்டில் உரையாற் றினார்கள். இவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்ட நாளிலிருந்து இன்று வரை அதே உணர்வுடன் இருக் கிறேன். குளித்தலைதான் என்னைத் திராவிடர் இக்கத் திற்கு அழைத்துச் சென்ற இடம்.
ப.கா: அதன் பின்னர் திருச்சிக்கு வந்து என்ன செய்தீர்கள்?
க.ச.: திருச்சியில் நான் தங்கியிருந்த அறைக் குப் பக்கத்தில் கூத்தப்பார் என்ற ஊரைச் சேர்ந்த பரமசிவம் என்ற நண்பர் குடிஅரசு இதழ்களை வாங்கி வந்து கொடுத்து என்னைப் படிக்கச் செய்தார். அவரோடு சேர்ந்து மாலையில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் போனேன். நம்முடைய இயக்கத் தலைவர்களின் அறிவார்ந்த பேச்சும் அணுகுமுறையும் என்னை அவர்கள் பால் ஈர்த்தன.
ப.கா: குடிஅரசு, திராவிடநாடு இதழ்களின் அருமைப்பாட்டைப் பற்றிச் சொல்லுங்களேன்.
க.ச. : குடிஅரசு, திராவிட நாடு ஒவ் வொன்றிலும் இரண்டு இதழ்கள் வாங் குவேன். ஒன்று படிப்பதற்கு, இன்னொன்று பைண்டு செய்து பாதுகாத்து வைப்பதற்கு. நான் பைண்டு செய்து வைத்திருந்த இதழ்களையெல்லாம் புலவர் இமயவரம்பன் அவர்கள், சென்னையில் உள்ள பெரியார் திடல் நூலகத்திற்கு வேண்டும் என்று எடுத்துச் சென்றுவிட்டார். இவை இரண்டு இதழ்களும் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இதழ்கள்.
ப.கா : இன்டர்மீடியட் வகுப்பை எப் போது முடித்தீர்கள்?
க.ச : என்னைக் கட்சிக்காரன் என்று அடையாளம் கண்டு இன்டர்மீடியட் செல்லமுடியாதவாறு செய்துவிட்டார்கள். பார்ப்பன ஆசிரியர்கள். பின்னர் அடுத்து வந்த செப்டம்பரில் தேர்வெழுதி 1946 இல் வெற்றி பெற்றேன்.
ப.கா : 1944 சேலம் மாநாட்டில் கலந்து கொண்டீர்களா?
க.ச. : திருச்சி பொன்மலை அப்போது நம்முடைய கோட்டையாக இருந்தது. பொன்மலைத் தோழர்களோடு நான் நெருங்கிப் பழகினேன். அவர்கள்தான் என்னைச் சேலம் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சேலம் கல்லூரியில் படித்த எங்கள் ஊர் நண்பர்களின் அறையில் தங்கியிருந்தேன். அந்த மாநாட்டில்தான் திராவிடர் கழகம் என்று அய்யா பெயர் மாற்றம் செய்தார். நம்முடைய வரலாற்றில் அந்த மாநாடு ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது.
ப.கா.: தந்தை பெரியாரை நேருக்கு நேராக எப்போது சந்தித்தீர்கள்?
க.ச. : 17-12-1944 இல் பொத்தனூரில் கூட்டம் போட வேண்டும் என்று ஈரோட்டில் தங்கியிருந்த அய்யாவைச் சந்தித்துக் கேட்டோம். அய்யாவும் ஒப்புக் கொண்டார். கோவை ஜி.டி. நாயுடுவிடம் நாவலர் நெடுஞ்செழியன் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் வருவதாக ஏற்பாடு. அய்யாவுக்கு வழிச் செலவுத் தொகை அய்ந்து ரூபாய். நாவலர் கோவையிலிருந்து வரவேண்டும். அதனால் அவருக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம். கோவையில் இருந்து ரயில் மூலம் புகலூர் வந்து, அங்கிருந்து குதிரை வண்டியில் தவிட்டுப்பாளையம் வந்து சேர்ந்து, அங் கிருந்து பரிசல் மூலமாகக் காவிரியைக் கடந்து இக்கரைக்கு நாவலரையும் மற்றவர்களையும் அழைத்து வந்தோம்.
அன்று மாலை 4 மணியளவில் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் அய்யா மாண வர்களிடையே உரையாற்றினார். தமிழ் மறவர் பொன்னம்பலனார் இங்கே பணியாற்றினார். அவருடைய ஏற்பாடு இது. அவர் எனக்கு ஆசிரியர். அந்தப் பள்ளியில் அய்யா மூன்று மணி நேரம் பேசினார்.
இரவு பொத்தனூரில் பொதுக்கூட்டம், அய்யா பேசினார். இந்த நிகழ்ச்சிகளின் போதுதான் அய்யாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
ப.கா. : கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி
க.ச. : கல்லூரியில் படிக்கும்போதே நம் இயக்க இதழ்களுக்கெல்லாம் நான் தான் பொத்தனூர் முகவர் (ஏஜன்ட்). அதற்கென்று சில தோழர்களை நியமித்து இதழ்களைப் பரப்பி வந்த நிகழ்ச்சி.
ப.கா.: கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு? க. ச.: இன்டர்மீடியட் வரைதான் படிக்க முடிந்தது. அதன் பின்னர் உழவுத் தொழிலைக் கவனித்துக் கொண்டு இயக்க வேலைகளைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறேன். மிசாவில் ஓராண்டு காலம் சேலம் சிறையில் இருந்தேன்.
ப.கா.: அய்யா உங்கள் திருமணம் யார் தலைமையில் நடந்தது?
க. ச.: உலக ஊழியனார் தலைமையில் 1947 இல் நடந்தது. சுயமரியாதை முறைப் படி, எனக்குத் தெரியாமல் என் பாட்டனார் (அப்பாவின் அப்பா) அய்யரை அழைத்து விட்டார். நான் அய்யரை வெளியேற்றுங்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். என் பாட்டனார் வந்து, உன் கால்களை வேண்டுமானாலும் பிடிக்கிறேன். அய்ந்தே அய்ந்து நிமிடம் அய்யர் முன்னால் அமைதியாக உட்காரப்பா என்றார். நீங்கள் அய்யருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து விட்டு அவரை வெளியேற் றுங்கள் என்று பிடிவாதமாகச் சொன்ன பிறகு அய்யரை வெளியேற்றினார்கள்.
ப.கா.: உங்கள் மகள் திருமணம் யார் தலைமையில் நடந்தது?
க. ச.: தந்தை பெரியார் தலைமையில் தான். என் தோட்டத்தில் பெரிய களம் அமைத்து மிகப் பெரிய அளவிற்குப் பந்தல் போட்டு அய்யாவின் தலைமையில் சிறப்பாக நடத்தினேன். எல்லோர்க்கும் நல்ல விருந்து. திருமணத்தை முடித்து விட்டுச் சில நாட்கள் கழித்து அய்யாவைத் திருச்சியில் போய்ப் பார்த்தேன். அய்யா கேட்டார்.
திருமணம் சிறப்பாக முடிந்ததா?
முடிந்ததுக் அய்யா
ஆமா. அவ்வளவு பெரிய பந்தல் எதற்கப்பா?
சாப்பாடு போடவேண்டும். அதனால் தாங்க அய்யா!
எல்லோர்க்கும் சாப்பாடு போடணு மாப்பா?
ஆமாங்கய்யா
இவ்வாறு உரையாடல் நடந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு அய்யா சொன்னார். நம்ம ஆட்களே என் பேச்சைக் கேட்கவில்லைன்னா மற்றவங்க எப்படிக் கேட்பாங்க என்றார்.
நான் அதிர்ந்து போய்விட்டேன். நம்ம ஆட்களே என்ற சொற்களைக் கேட்டவுடன் நான் நிலை குலைந்து போனேன். அய்யா நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தேன். இன்றும் அதை நினைக்கும்போது (க.ச. அய்யாவின் குரல் நடுங்கியது. எழுதிக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். க.ச. அய்யாவின் கண்களில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. எப்பேர்ப்பட்ட தொண்டர்களைத் தந்தை பெரியார் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை எண்ணி வியந்தேன்.)
ப. கா.: பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன
க.ச. : என் உறவினர் ஒருவருடைய கடையில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தேன். ஒரு நண்பர் செய்தித் தாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வேகமாக என்னிடம் வந்தார். என்னங்கய்யா, பெரியார் இந்த வயதில் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டாராமே! என்றார். நான் கேட்டேன், அய்யாவா அப்படிச் செய்தார், ஆமாங்கய்யா, இதோ பாருங்கள். இந்தத் தாளில் இருக்கிறது என்றார் அவர். நான் உடனே சொன்னேன். அய்யா செய்திருந்தால் அது சரியாகத் தானிருக்கும் என்று. வந்தவர் பேசாமல் எழுந்து போய்விட்டார். அய்யா எது செய் தாலும் சமுதாய நலன் கருதியே செய்வார். ஆதலால் அவர் எது செய்தாலும் சரியாகத்தானிருக்கும்.
ப.கா.: அய்யாவுக்கு அன்பு நிறைந்த வணக்கம். அய்யாவின் நூற்றாண்டு விழாவை நாங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உடல் நலத்தோடும் வளத் தோடும் நீங்கள் பல்லாண்டுக் காலம் வாழ்ந்து எங்களுக்கு வழி காட்ட வேண் டும் என்று கூறி, க.ச. அய்யாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு இருவரும் ஈரோட்டுக்குப் புறப்பட்டோம்.
முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து, திராவிடர் கழகம், ஈரோடு
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது..?
- உங்களுக்குத் தெரியுமா?
- திருநீற்று மோசடி!
- பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் பெரியார் திடல், சென்னை - 600 007
- இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment