டெசோ சார்பில் சென்னையில் நடத்தப்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பதினான்கு தீர்மானங்களும் காலத்தாற் நிறைவேற்றப்பட்டவை - முத்தாய்ப் பானவை!
ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படத் தகுந்தவையாகும்.
முதல் இரண்டு தீர்மானங்களும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை (Genocide) செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்ததாகும். அங்கே இனப்படுகொலை நடந்தது என்பதை அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு அறிக்கை கொடுத்தாகிவிட்டது.
அதனடிப்படையில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. (ஜெனீவாவில் நடக்க இருந்த மனித உரிமைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த அடியாட்களால் தாக்கப்பட்டனர் என்பது எத்தகைய கேவலம்!)
இத்தகு சூழ்நிலையில்தான் டெசோ சார்பில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஒரு மேற்பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகளுக்கு அடிப்படையான கடமை உணர்ச்சி ஒன்று இருக்கிறது. அத்தீர்மானம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக வற்றிப் போய்விடாமல், உயிர்த் துடிப்புடன் செயல்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை உந்துதலைக் கொடுக்க வேண்டாமா? ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கவில்லையா?
இந்தியாவுக்கு இருக்கும் கடமையினை டெசோ மாநாட்டுத் தீர்மானம் நன்றாக வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு இருக்கும் கடமையினை டெசோ மாநாட்டுத் தீர்மானம் நன்றாக வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போருக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள மறுவாழ்வுத் திட்டங்களைப் பார்வையிட இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) தலைமையில் 12 பேர் கொண்ட குழு அதிபர் ராஜபக்சே உட்பட பலரையும் சந்தித்தது.
தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வழிவகுக்கும் 13 ஆவது சாசன ஒப்பந்தம், 1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றியெல்லாம் பேசப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டதாகவும் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் அவ்வாறு தாம் உறுதியளித்ததாக இந்தியக் குழுவிடம் கூறவேயில்லை என்று கூறிவிட்டாரே அந்தச் சத்தியப் புத்திரர் ராஜபக்சே!
இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தலைமையில் அந்தக் குழு சென்றிருந் தாலும் அது இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டதுதான். அந்தக் குழுவையே அவமதிக்கும் வகையில் இப்படி அந்நாட்டு அதிபர் நடந்து கொண்டிருக்கிறாரே - இது குறித்துக் கூட இந்திய அரசு விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா?
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைக் கூட அலட்சியப்படுத்தும் போக்கில் நடந்து கொண்டு வருகிற இலங்கை இனவாத பாசிச அரசை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, உரிய தண்டனையை அளிக்காவிட்டால், உலகின் பல பகுதிகளிலும் பல ராஜபக்சேக்கள் தோன்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு ஆதரவாக வெள்ளை அரசுக்குப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்று அய்.நா.வில் தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய அரசு, நமது தொப்புள் கொடி உறவு உள்ள ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஏன் அது போன்ற முயற்சியில் ஈடுபடக்கூடாது? டெசோ மாநாட்டில் இந்த அழுத்தம் கலந்த உணர்வு தலை தூக்கி நின்றது என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment