Sunday, August 26, 2012

கேழ்வரகில் நெய் வடிகிறதா?


கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று? என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு. இதே செய்தியை மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் சொன்னால் கேட்பார் யாராக இருந்தாலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டு ஆமாம், ஆமாம்; கேழ்வரகில் நெய் வடியத்தான் செய்யும் என்று சொல்லிக் கொண்டு தோப்புக் கரணமும் போடுவார்கள்.
மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய அய்ந்தினையும் ஒரு கலக்குக் கலக்கி, பஞ்ச கவ்யம் என்று கொடுத்தால் தட்சணை கொடுத்தல்லவா பக்தி மயமாகி முகம் சுளிக்காமல் குடிக்கின்றனர்?
பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது வார்த்தை அழகுக்காக அல்ல; அர்த்தம் நிறைந்த யதார்த்தம் ஆகும்.
கடவுள் நம்பிக்கை நாளும் குறைந்து வரும் நிலையில், அதனைத் தூக்கி நிறுத்த இடைஇடையே சில மூடத்தனங்களைக் கட்டி விடுவார்கள்.
பிள்ளையார் பால் குடித்தார் என்ற புரளியைக் கிளப்பி விடவில்லையா ஆர்.எஸ்.எஸ்.கும்பல்?
பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் பத்து லட்சம் ரூபாய் தரத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் சென்னை - அண்ணாசாலையில் டாம் டாம் போட்டுச் சொல்லவில்லையா?
சில ஆண்டுகளுக்கு முன் சிலுவைக் குழந்தை என்ற ஒரு புரளி கிளப்பப்பட்டது. மார்பில் இருந்த மச்சத்தை மய்யப்படுத்தி மக்களை மடையர் களாக்கினார்கள்.
தலையில்லா முண்டம் டீ குடித்தது என்ற தலை நகரமான சென்னையிலேயே கிளப்பி விட் டார்கள். செய்தியாளர்கள் காவல்துறை ஆணையர் சிறீபால் அய்.பி.எஸ். அவர்களை இதுபற்றிக் கேட்டபோது யாராவது முண்டம்தான் இதைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினாரே!
இப்பொழுது திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ஒரு வதந்தியைக் கிளப்பியுள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உடனே பேசியதாகக் கட்டிவிட்ட கரடி அந்த வட்டாரம் முழுவதையும் கிடுகிடுக்க வைத்துள்ளது.
பிறந்த குழந்தை பேசியதால் மற்ற குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்யப் பட்டது.
பிள்ளைகளைப் பெற்ற மகராசிகள் என்ன செய்தார்கள்? வீட்டு வாசல்களில் தேங்காய்களை உடைத்தனராம். குழந்தைகளின் தலையைச் சுற்றியும் தேங்காய் உடைத்தனராம். (தேங்காய் வியாபாரியின் வேலையாக இருக்குமோ!)
இதன் உண்மைத் தன்மை என்ன? திருப்பூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதி வாணன் இதுகுறித்து என்ன சொன்னார்?
மருத்துவமனையில் பிறந்த குழந்தை பேசிய தாகச் சொல்வது உண்மையல்ல! ஒரு குழந்தை பிறந்தவுடன் சரளமாகப் பேச நூறு சதவீத வாய்ப்பு இல்லை. இது  முழுக்க முழுக்க வதந்தியாகும். இதை யாரும் நம்பிப் பயப்பட வேண்டாம் என்று கறாராகச் சொல்லி விட்டாரே!
இதற்கு என்ன பதில்? காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவினர், இந்த வதந்தியைக் கிளப்பி விட்ட விஷமிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாவிட்டால் இது போன்ற வதந்திகள் கிளப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஊடகங்கள் இத்தகைய பொய்ச் சேதிகளை தோலுரித்துக் காட்ட வேண்டாமா? மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை ஏடுகளுக்குக் கிடையாதா?
ஊடகங்கள் மூடநம்பிக்கைகளுக்கு இறக்கை கட்டி பறக்க விடாமல் இருந்தால் போதாதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் நினைவிற்கு வருகிறது. மக்களை மீட்பது பெரி யாரியலே! மறக்க வேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...