Thursday, August 9, 2012

கோகுலாஷ்டமியாம்!


தமிழ்நாடு அரசு புதிய ஆணை ஒன்றை நேற்று அவசர அவசரமாகப் பிறப்பித்துள்ளது. கோகுல கிருஷ்ணன் பிறந்தது செப்டம்பர் எட்டாம் தேதி என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்து அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டது. அது தவறு, கிருஷ்ணன் பிறந்தது ஆகஸ்டு 9 ஆம் தேதிதான். எனவே செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு (இரவு) ஒன்பதாம் தேதியே அரசு விடுமுறை நாள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு, இறப்பு அற்றவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கம் கடவுளுக்குப் பிறந்த நாள் என்று சொல்லி அரசு விடுமுறை விடும் நகைச் சுவைகளை எல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் பார்க்கலாம்.
அதுசரி, அவன் பிறந்தநாளில் கூட ஏன் இப்படித் தடுமாற்றம்? சரி, கதைக்கு வருவோம்.
இந்தக் கிருஷ்ணன் யார்? வசுதேவருக்கு, தேவகி வயிற்றில் அவதரித்தார் என்கிறது ஒரு புராணம்; இன்னொரு புராணம் என்ன சொல்லுகிறது?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது. இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை. அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தார்? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தான். ஒன்று கருப்பு நிறம்; அவன்தான் கிருஷ்ணன்; இன்னொன்று வெள்ளை மயிர் - அவன்தான் கிருஷ்ணனின் அண்ணனாம்.  இதனைக் கூறுவது அபிதானகோசம் ஆகும்.
இப்படிப் பிறந்த ஒரு கடவுளுக்குத்தான் அரசு விடுமுறை விடுகிறது. இந்த விடுமுறை நாளில் அரசு அலுவலர்கள் என்ன செய்யப் போகி றார்களாம்? கிருஷ்ண கடவுளைப் பற்றிப் புராணங் களில் உள்ளதைப் படிக்க ஆரம்பித்தால் மனிதன் என்னாவது? வீடு என்னாவது? நாடு என்னாவது?
சின்ன வயதில் வெண்ணெயைத் திருடியவன் என்றும், வாலிப வயதில் பெண்களைத் திருடிய வன் என்றும்,  பள்ளிக்குச் செல்லாத தம் பிள்ளை களிடம் இன்று தாய் சொன்னால் அந்தப் பிள்ளையின் மனநிலை எந்த நிலைக்கு ஆளாகும்?
கடவுள் என்றால் ஒழுக்கம் உள்ளதாக இருக்க வேண்டாமா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று தந்தை பெரியார் சொன்னால் மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறதே - நியாயமாக பக்தர்களுக்கு யார் மீது கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பவேண்டும்?
இப்படியெல்லாம் ஆபாசமாகக் கடவுள் பிறந்தார் என்று எழுதி வைத்துள்ள புராணக் குப்பைகள்மீது அல்லவா கோபம் துடிதுடித்துக் கிளம்பவேண்டும் - அந்தப் புராணக் குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்த அல்லவா விரும்ப வேண்டும்?
இன்னும் கிருஷ்ணன் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அது ஆபாசச் சாக்கடையாக அல்லவா இருக்கும். ஒன்றல்ல; இரண்டல்ல; அறுபதாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கொஞ் சினான் கோகுலகிருஷ்ணன் என்பது அருவருப் பானது அல்லவா?
கிருஷ்ணன் கோகுலத்தில் ராதையுடன் கூடி இருக்கையில் விரஜை, கங்கை கிருஷ்ணனைக் கண்டு மோகிக்க, ராதை கோபித்தது  கண்டு கங்கை மறைந்தனள். அதனால் உலகெங்கும் நீரிலாது மறைய பிரமன் முதலியோர் கண்ணனை வேண்ட, கிருஷ்ணன் கங்கை வெளிப்படின் இராதை அவளை வாயிலிட்டு உமிழக் காத்திருக் கிறாள். ஆதலால் இராதைக்கு சமாதானம் கூறுங்கள் என்றானாம். பிரமன் முதலியோர் இராதையைத் துதித்தனராம். பின்னர் கிருஷ் ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளி வந்தனள். இப்படியாகக் கதை போய்க் கொண்டே இருக்கிறது. (ஆதாரம்: அபிதான சிந்தாமணி)
இதில் உள்ள ஆபாசத்தையும், முழுமுட்டாள் தனத்தையும் என்னவென்று சொல்ல! இதற்கு ஓர் அரசு, விடுமுறை விடுகிறது என்றால் இந்த அரசாங்கங்களைத்தான் என்ன சொல்ல!
சினிமாவில் வழியும் ஆபாசத்தைப் பற்றிப் பேசுபவர்கள்கூட இந்தக் கடவுள் தொடர்பான ஆபாசங்களைப் பக்திக் கிண்ணத்தில் வைத்துப் பருகுவார்களே - வெட்கக்கேடு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...