Sunday, July 22, 2012

முல்லைப் பெரியாறு அணை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தடையாக உள்ள கேரள பாசன சட்டம்


செல்லாது என அறிவிக்க கோரிய தமிழக அரசு மனு
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடில்லி, ஜூலை 22-முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த தடையாக இருக்கும் கேரள பாசன மற்றும் தண்ணீர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2006, செல்லாது என்று அறிவிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (23ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மற்றொரு மாநிலத்தின் (தமிழகத்தின்) உரிமையை பறிப்பதாக இருப்பதால், இந்த சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுமா? என்பது குறித்து விரிவாக விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சந்திரமவுலி கே.ஆர்.பிரசாத், அனில் ஆர்.தாவே ஆகியோர் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரணைக்கு நாளை  எடுத்துக் கொள்கிறது.
கடந்த 2003இல் இயற்றப்பட்ட கேரள நீர்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து கேரள சட்டமன்றத்தில் கடந்த 2006இல் சட்டமானது. அதன்படி, கேரளாவில் உள்ள 22 அணைகளின் முழுக்கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசிற்குதான் முழுஅதிகாரம் உள்ளது. கேரள அரசு நினைத்தால் அந்த மாநிலத்தில் உள்ள எந்த அணையின் செயல்பாட்டையும் நிறுத்தி விடலாம். இதில் மற்ற எந்த அரசும் மற்றும் நீதிமன்றங்களின் ஆணையும் குறுக்கிட முடியாது.
நீர் மட்டம் 136 அடியாக குறைப்பு
1979இல் அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளா சொன்னதால், நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அணையை பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
10 ஆண்டுகள், மூன்று கட்டங்களாக அணை பலப்படுத்தப்பட்டது. அதை கேரளாவும் அவ்வப் போது உறுதி செய்தது. பணி முடிந்ததும் நீர் மட்டத்தை உயர்த்த கேரளா மறுத்துவிட்டது.
அடுத்த 10 ஆண்டுகள் வழக்குகளாக நகர்ந்தன. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு 10 பேர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்தது. குழுவினர் அணையை ஆய்வு செய்து 04..11.2000இல் மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.
2001இல் மத்திய நீர்வளத் துறை ஆணையம் (சிடபிள்யுசி) அணை பலமாக உள்ளது. எனவே நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது. டாக்டர் பிரார், பி.ஜே. மித்தல், மேஜர் ராஜ் ஆகியோர் தலைமையிலான நிபுணர் குழுக்களும் தனித்தனியே அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். மத்திய மண்வள ஆய்வுக்குழு (சிஎஸ்எம்ஆர்எஸ்) அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
நீதிமன்ற தீர்ப்பு
வழக்கு விசாரணை 2006ஆம் ஆண்டு வரை நீடித்தது. கேரள அரசின் வாதங்கள் அனைத்தும் விதண்டாவாதம் எனவும் அணையின் பலத்தைப் பொறுத்த வரை பல்வேறு நிபுணர் குழுக்கள் தாக்கல் செய்த அறிக்கையின்படியும் கடந்த 27.02.2006இல் உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில், நிபுணர் குழுக்கள் அளித்த அறிக்கை யின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிக்கு உயர்த்தலாம். பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கேரள உயர் நீதிமன்றத்தில் அந்த மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த அபிடவிட்டில், அணை பலமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ஆனந்த் குழு அமைப்பு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீதிபதி ஆனந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதல்படி, பல்வேறு நிபுணர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் 10 மாதம் அணையை ஆய்வு செய்து அறிக்கைகள் பெற்று, அதை தொகுத்து மொத்தம் 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
நீதிபதி ஆனந்த் குழுவும் அணை பலமாக இருக்கிறது. நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. கேரளாவின் சார்பில் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி கே.டி. தாமஸ், அளித்த பரிந்துரையில், கேரளாவின் வாதம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்பதுதான். அப்படியானால், அணையில் மற்றொரு சுரங்கப் பாதை அமைத்து தண்ணீர் 136 அடிக்கு மேல் தேங்காமல் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், சுற்றுச்சூழலுக்கோ அல்லது வனவிலங்கு களுக்கோ பாதிப்பு ஏதுவும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள சட்டம் 15.03.2006இல் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, கேரளாவில் உள்ள 22 அணைகளில் முதலாவது முல்லைப் பெரியாறு என்றும் அதன் அதிகபட்ச நீர்மட்டம் 136 அடி எனவும் சட்டப்பதிவு செய்தது. இதன் பிறகு கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 2006இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற பெஞ்சால் 2006 ஜூலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக அரசு மனு தாக்கல்
இதற்கிடையில், கேரளாவின் நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் அதை நடைமுறைப்படுத்த தடை செய்வதாகவும் உள்ளதால் அதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 31.03.2006இல் ஒரு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை தான் நாளை எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பவும், தீர்ப்பை அமல்படுத்துவதை கால தாமதப் படுத்தவும் ஒவ்வொரு காரணத்தை கேரளா முன்வைக் கிறது. தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வழக்கை முன்நடத்தி செல்ல வேண்டும் என்று முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். அப்பாஸ் மற்றும் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் செயலாளர் அ.வீரப்பன், துணைத் தலைவர் ஆர்.வி.எஸ். விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மனு தாக்கல்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கேரளா நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அணை பலவீனமாக இருப்பதாக ரூர்க்கி மற்றும் டில்லி அய்அய்டி நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை உச்ச நீதிமன்ற கமிட்டியிடம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆனால், அதை பரிசீலிக்காமல் அணை பலமாக இருப்பதாக நீதிபதி ஆனந்த் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. எதன் அடிப்படையில் அணை பலமாக இருக்கிறது என்று நீதிபதி ஆனந்த் குழு பரிந்துரை செய்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எனவே அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையின் நகல்கள் எங்களுக்கு தர வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...