நீதிக்கட்சியின் திருமகனான ஓ.தணிகாசலம் செட்டியார் அவர் கள் தலைசிறந்த வழக்குரைஞர் ஆவார். நீதிக்கட்சியின் சார்பில் சட்டமேலவை உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நீதிக்கட்சி மற்றும் பிராமணரல் லாதார் இயக்கம் இவைகளில் தனித்த பண்பு நலன்கள் கொண்ட உன்னதமானவர்.
1916இல் சர் பி.தியாகராய செட்டியார் அவர்கள், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார் முதலிய ஆதரவாளர் களோடு சேர்ந்து பிற்காலத்தில் நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட தென் னிந்திய விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்ததில் தணிகாசலனார் முக்கியமான தலைமைப்பங்கு வகித்தார். சர் பி.தியாகராய செட்டியார் அவர்களால் அதே ஆண்டு வெளியிடப்பட்ட பிராமண ரல்லாதார் இயக்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையைத் தயாரிப்பதிலும், பரப்புவதிலும் பாராட்டத்தக்க பங்களிப்பு செய்தார்.
19ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முதலாவது கால் பகுதி ஆகிய கால கட்டங்களில் சென்னை அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும், ஏறக்குறைய அனைத்து கல்வி நிலையங்களிலும், சென்னை சட்டம் இயற்றும் அமைப்பிலும் அரசியல் துறையிலும் பிராமணரது ஆதிக்கம் மிக மிக அதிகமாக இருந்தது.
எடுத்துக்காட்டாக:- 1871ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசாங்கத்தின் தரப்பி லிருந்து கொடுக்கப்பட்ட பதில். சென்னை தலைமைச் செயலகத்தில் மாதச் சம்பளம் ரூ.50 முதல் 99 முடியவுள்ள மொத்தம் 208 பணியிடங்களில் அமர்த்தப்பட்டவர்கள் பிராமணர் 128பேர், பிராமணரல்லாத இந்துக்கள் 52பேர், முகமதியர்கள் 8 பேர், இந்திய கிறிஸ்துவர்கள் 18பேர், மற்றவர் கள் 2 பேர் ஆகும்.
இதுபோல மாதச்சம்பளம் ரூ.100 முதல் 299 முடிய உள்ள 110 பணிகளில் அமர்ந்திருந்தவர்கள் பிராமணர்கள் 78 பேர், பிராமணரல்லாதார் 18பேர், முகமதியர் 1, இந்திய கிறிஸ்துவர்கள் 7பேர், மற்றவர்கள் 6பேர் ஆகும். மாதச் சம்பளம் ரூ.300 முதல் 499 முடிய உள்ள 13 பதவிகளில் பிராமணர்கள் 8பேர், பிராமணரல்லாத இந்துக்கள் 3 பேர், மீதமுள்ள 2 பேர் இந்தியக் கிறிஸ்து வர்கள் ஆகும்.
கல்வித் துறைகளிலும் இதுபோன்ற கேவலமான நிலையே நிலவியது. 1915ஆம் ஆண்டு மொத்தமுள்ள 518 பணிகளில் நியமிக்கப்ட்டவர்கள் விபரம்:- பிராமணர் கள் 399 பேர், பிராமணரல்லாத இந்துக் கள் 18பேர், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் 73 பேர், முகமதியர்கள் 28பேர் ஆகும்.
1914ஆம் ஆண்டு சென்னைப் பல் கலைக்கழகம் நடத்திய பல்வேறு தேர்வு களும் அவற்றில் தேறிய மாணவர்கள் எண்ணிக்கையும் கீழ்க்கண்டவாறு:-
தேர்வு பிராமணர்கள் பிராமணரல்லாதவர் எண்ணிக்கை எண்ணிக்கை
இண்டர்மீடியட் 775 240
பி.ஏ, 210 60
பி.எஸ்.சி 159 49
எம்.ஏ 67 9
எல்.டி 95 10
(இப்போதைய பி.டி அல்லது பி.எட்).
மக்கட் தொகையில் 3 சதவீதமே இருந்த பிராமண சமுதாயம் மிக அதிகமான செல்வாக்குப் பெற்றிருந் ததையும், மக்கட் தொகையில் 84 சதவீதமாக இருந்த பிராமணரல்லாத சமுதாயம் அரசாங்க நிர்வாகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் சட்டம் இயற்றும் அமைப்புகளிலும் இதர எல்லாத் துறைகளிலும் மிகக் கேவலமான பங்கு வகித்ததையும் கண்ட தணிகாசலனார் பிராமணரல்லாத சமுதாயத்தினர்களது மிகப் பழமையான சமூக அடிமைத் தனத்தை அறுத்து ஒழிக்கவும், அவர் களது மொத்த மக்கட் தொகைக்கு உரிய நியாயமான பங்கைப் போராடி பெறவும், சமுதாயம், அரசியல், கல்வித் துறைகளில் துரிதமான முன்னேற்றம் பெறவும், தென்னிந்திய விடுதலை இயக்கம் முன்னணிப் படுத்திய பிராமணரல்லாதார் இயக்கமே பிராமணரல்லாத சமுதாயத் தினர்களுக்கு இன்றியமையாத ஆயுத மென உணர்ந்தார்.
அதன் பலனாக இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குக் தன்னை ஒரு முழு மனத்தோடு அர்ப்பணித்துக் கொண்டார். சென்னை மாநகராட்சி, சென்னை சட்டசபை, பொதுக்கூட்டங்கள், விவாத மேடைகள், மாநாடுகள் என்று எல்லா விதத்திலும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபட்டார்.
இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த சர் பி.தியாகராயர் செட்டியார் அவர்களும், அவரது திறமை மிக்க தளபதியான திரு.ஒ.தணிகாசலம் செட்டியார் அவர் களும், ஒருவருக்கொருவர் மதிப்பும் அன்பும் கொண்டிருந்ததோடல்லாமல் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பாடுபட்ட காரணத்தால் பிராமணரல்லா தார் இயக்கத்தின் பிரிக்க முடியாத இணை என்று எல்லோராலும் அழைக்கப் பட்டார்கள்.
வெண்ணிற ஆடை அணிந்த துறவி, என்றழைக்கப்பட்ட சர் பி.தியாக ராய செட்டியாரின் வலது கையாகவே மக்கள் தணிகாசலனாரைக் கருதி னார்கள். இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக நிகழ்த்தப்பட்ட மாநாடு களில் தணிகாசலனார் கலந்து கொண் டிருந்தாலும் அவற்றுள் இரண்டு குறிப்பிடத் தக்கவையாகும். முதலாவது 1924இல் பெல்காமில் தலைசிறந்த பேச்சாளர் திரு.(பின்பு சர்) எ.இராமசாமி முதலியார் தலைமை வகித்த முதலாவது அனைத்திந்திய பிராமணரல்லாதார் மாநாடு ஆகும். இரண்டாவது 1923இல் அம்ரோடி (AMRAOTI)யில் நடைபெற்ற இரண்டாவது அனைந்திந்திய பிராமண ரல்லாதார் மாநாடு ஆகும்.
சென்னை மாநகராட்சியில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கு
1919இல் சென்னையில் அப்போதைய 6ஆவது பிரிவுக்கு நடைபெற்ற தேர்தலில் தணிகாசலம் செட்டியார் அவர்கள் சென்னை மாநகராட்சிக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியன் ரிவியூவைச் சேர்ந்த திரு.ஜி.ஏ.நடேசன் போன்ற செல்வாக்கு மிக்கவர்களால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் யு.கிருஷ்ணசாமி அவர்கள் ஆதரிக்கப்ட்ட போதிலும் திரு.தணிகாசலனார் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ஜெயித்தார்.
1922ல் நடைபெற்ற தேர்தலிலும் அவர் மறுமுறை சென்னை மாநகராட்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் பத்தாண்டுக் காலம் சென்னை மாநகராட்சியில் தணிகாசலனார் குறிப் பிடத்தக்க சிறந்த தொண்டாற்றினார். மாநகராட்சியில் மிகுந்த அதிகாரம் உள்ளதும் மிகவும் முக்கியமானதுமான வரி விதிப்பு மற்றும் வருவாய்க் குழுவின் தலைவராக இருந்தார். மாநகரவையில் நீதிக்கட்சியின் தலைவராகவும் இருந்தார். மாநகராட்சி தொடர்பான எல்லாக் கோப்புகளையும் ஆழ்ந்த கவனத்துடன் படித்து, மாநகராட்சியின் செயல்பாடு களைப் பற்றி தெளிவான அறிவு பெற்று அதனை மாநகராட்சி நிர்வாகம் திறமை யானதாகவும் நேர்மையானதுமாக இருக்க பயன்படுத்தினார்.
மாநகரவைக் கூட்டங்களில் தணி காசலனாரின் சொற்பொழிவுகள் மறுக்க முடியாத உண்மைகளையும் கேட்போரைப் பிணிக்கும் வகையில் அமைந்த விவாதங்களையும் கொண்டிருந்ததால் அவற்றை எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள். மாநகரவைக் கூட்டங்களில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியுடன் அவர் நிகழ்த்திய சொற்போர்கள் அவரது அரசியல் எதிராளிகளிடமிருந்து கூட அதிக மரியாதையையும், பாராட்டுக் களையும் அவருக்கு ஈட்டித் தந்தன.
1920ஆம் ஆண்டின் ஆரம்ப காலங் களில் சென்னை மாநகரத்தின் புறநகர் திட்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட போது (மாநகர் முன்னேற்ற அறங்காவலர் குழுவின் முன்னோடி; இப்போதைய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்) அந்த அதிகார மிக்க அமைப்பில் சென்னை மாநகராட்சியின் பிரதிநிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
1925இல் சென்னை மாநகராட்சியின் தலைவராகத் தணிகாசலனார் தேர்ந் தெடுக்கப்பட்டார். சர் பி.தியாகராய செட்டியார் அதன் முதலாவது தலைவர். (சில ஆண்டுகள் கழித்து தலைவர் என்ற பெயர் மேயர் ஆயிற்று. குமர ராஜா முத்தையா செட்டியார் முதலாவது மேயர் ஆனார்.)
1925ஆம் ஆண்டு பிற்பகுதியில் மாநகராட்சித் தேர்தலில் தணிகாசல னார் தோற்கடிக்கப்பட்டபோதும், சென்னை ராஜதானியின் அப்போதைய முதல் மந்திரியான பனகல் அரசர் அவர்கள் தணிகாசலனாரின் பாராட்டத் தக்க சேவைகளை மாநகராட்சி இழக்க முடியாது என்று உறுதியாக உணர்ந்து அவரை மாநகராட்சிக் குழு உறுப்பி னராக நியமனம் செய்தார். சட்டமேலவையில் அவர் ஆற்றிய பணிகள்
1920ஆம் ஆண்டு சென்னை சட்டமேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் தணிகாசலம் செட்டியார், அவரது மதிப்பிற்குரிய தலைவர் சர்.பி.தியாகராய செட்டியார் அவர்களோடு வெற்றி பெற்றார். திரு.எஸ்.சத்யமூர்த்தி, டாக்டர் யு.ராமாராவ் போன்ற பிரபல காங்கிரஸ் தலைவர்களின் கடுமையான எதிர்ப் பையும் முயற்சிகளையும் தகர்த்தெறிந்து 1923இல் மறுபடி திரு.தணிகாசலம் செட்டியார், சென்னை சட்டமேலவைத் தேர்தலில் ஜெயித்தார்.
சட்டமேலவை யில் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத் தையும், தனது வல்லமையான பேச்சாற் றலாலும் விவாதத்திறமையாலும் சென்னை ராஜதானியின் பொதுமக்கள் நலனையும் குறிப்பாகப் பிராமணரல் லாதார் நலனையும் உறுதி செய்யப் பயன்படுத்தினார். சென்னை மாநகர சபையில் போலவே சென்னை சட்ட மேலவையிலும் அவரது அரசியல் எதிரி யான திரு.எஸ்.சத்தியமூர்த்தியுடன் ஏறக்குறைய எல்லா விவாதங்களிலும் சொற்போர் நிகழ்த்தினார். எதிர்க் கட்சிகளின் கொள்கைகளையும், செயல் முறைகளையும், அவரது பேச்சுக்கள் மிக கடுமையாகத் தாக்கினாலும் அவைகளில் தனிப்பட்ட குரோதம் எதுவும் இருந்த தில்லை. எப்போதும் அவரது பேச்சுக்கள் மிகக் கண்ணியமாகவே இருந்தன.
சென்னை சட்ட மேலவையில் ஓ.தணி காசலனார் ஆற்றிய ஐந்து சொற்பொழிவுகளின் பெரும்பகுதி இந்த வரலாற்றின் பிற்பகுதியில் சேர்க்கப்பட் டுள்ளது. அவற்றைப் படிப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவரது உறுதியான நம்பிக்கைகளையும், கண் ணியமான சொல்லும் விதத்தையும், புள்ளி விவரங் களை கையாளுவதில் உள்ள ஆற்றலையும், வலியுறுத்தும் திறமையையும் பாராட்டுவார்கள்.
தற்காலத்தில் சட்ட சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பின்பற்றத்தக்க சட்டசபை சொற்பொழிவுகளுக்கு அவை கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.
(தொடரும்)
இன்று ஓ. தணிகாசலம் அவர்களின் நினைவு நாள் (21.7.1929)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- நீதிக்கட்சியின் திருமகன் ஓ.தணிகாசலம் (செட்டியார்) (2)
- சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!
- கடவுள் - மதம் நாட்டுக்குக் கேடே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment