வாழ்க்கை என்ற வியாபாரத்திற்கு இருவரும் கூட்டாளிகள் - பங்காளிகள் என்பது தான். இருவருக்கும் சம உரிமை உண்டு. ஒருவருக் கொருவர் தங்களுக்கு துணைவராகத்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். கணவன் மனைவி என்பது எஜமான்; அடிமை என்ற பொருள் கொடுப்பதாகவேயுள்ளது.
ஒரு நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்தியர்களிலே முதலில் ஜட்ஜாக இருந்தவர் முத்துசாமி அய்யராவார். அவரிடம் வந்த ஒரு கணவன் - மனைவி வழக்கில் கணவன், மனைவியை எப்படி வேண்டுமானாலும் தன்னிஷ்டப்படி நடத்திக் கொள்ளலாம். அதனால் கணவன், மனைவியின் கையை ஒடித்தது குற்றமல்ல! என்று தீர்ப்புக் கூறினார்.
கணவன் - மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.
ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது! நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவை யாகும். பார்ப்பான் எழுதிய புராணங்களை - இதிகாசங்களை - கட்டுக்கதை களை எல்லாம் அடிப்படையாக வைத்து எழுதப் பட்டனவேயாகும். ஆனதனாலே நமக்குரிய முறை இன்னதென்று அதில் குறிப்பிடவில்லை. பாமர மக்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் இலக்கியங்கள் என்று சொல்லக்கூடிய தெல்லாம் பாரதம், இராமாயணம் என்பவைகளேயாகும். இவற்றில் கூறப்பட்டிருப்பது நம் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும் கேடாகவேயுள்ளது. விபச்சாரத் தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது.
இன்று ஒரு சில புலவர்கள் சிலப்பதிகாரம் மிகப் பெரிய இலக்கியம் என்று அதைப் பிரசாரம் செய்து, அதனாலேயே தங்கள் வாழ்க்கையை வளர்த்து வருகின்றனர். அதில் என்ன இருக்கிறது? விபச்சாரத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிவது தானே சிலப்பதிகாரம்? இதை எவரும் மறுக்க முடியாதே!
எனவே, மணமக்கள் இதுபோன்ற மூடநம்பிக் கையான நூல்களையும், முட்டாள்தனமான, அறிவுக்குப்புறம்பான காரியங்களான கடவுள், மத வழிபாடுகளை விட்டு அறிவுப்படி நடக்கப் பழக வேண்டும், ஆடம்பரத்தை விரும்பாமல் வாழ வேண்டும்.
முதலாவதாக பெண்கள் தங்களைச் சிங்காரிப்பதை விட்டுவிட வேண்டும். சிங்காரிப்பது என்பது தாங்கள் அழகற்றவர்கள் என்பதை விளம்பரப்படுத்தவேயாகும்.
குழந்தைகள் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளாவது குழந்தை பெறாமலிருக்க வேண்டும். திருமணமான பத்து மாதங்களிலேயே குழந்தையைப் பெற்று விட்டால், அதைக் கொஞ்சத் தான் நேரமிருக்குமே தவிர, தன் கணவனின் காரியங்களைக் கவனிக்கவோ, அவனோடு மகிழ்வாக இருக்கவோ நேரமில்லாமல் போய் விடுகிறது. குழந்தையைக் கொஞ்சவே நேரம் சரியாகப் போய்விடுகிறது. எனவே, குழந்தை பெறுவதை கொஞ்ச காலம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு அளவாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும். வதவதவென்று பெற்றுக் கொண்டு தாங்கள் திண்டாடுவதோடு, நாட்டிற்கும் கேடு செய்யக் கூடாது.
குழந்தை பெறுவதால் நாட்டிற்கென்ன கேடு என்று சிலர் எண்ணலாம். இன்றைய மக்கள் தொகைக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. மேலும், மேலும் மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டே போனால் உணவுப் பொருள்கள் கிடைப்பது இன்னும் அதிக கஷ்டமாகிவிடும். மக்கள் தொகை பெருகுவதைப் போல் விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பும் பெருகுவதில்லையே. முன் எவ்வளவு நிலம் இருந்ததோ அதுதானே இன்றுமிருக்கிறது. எனவே, அளவோடு மக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வரவுக்கு மேல் செலவு செய்து கடனாளியாகி, தனது சுயமரியாதையை இழக்காமல், வரவிற் குள்ளாக செலவு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் நான் மணமக்களுக்கு கூறும் அறிவுரையாகும்.
(16.9.1964 அன்று சேலம் செல்வி ரமணி - கனகராஜி வாழ்க்கை ஒப்பந்த விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 3.10.1964.
இப்போது செய்யப்படுகின்ற திருந்திய திருமணமுறை தான் நாளைக்கு அப்படியே இருக்க வேண்டும். இருக்கும் என்று நான் கூற வரவில்லை. இது 1964ஆம் ஆண்டு மாடல் என்று தான் கூறினேன்.
எப்படி காரின் மாடல் ஆண்டுக்கு ஆண்டு மாறுதல் அடைகின்றதோ, அதுபோல வளர்ச்சி அடைய அடைய அறிவு வளர வளர இந்தத் திருமண முறையிலும் மாறுதல் ஏற்பட்டே தீரும்.
இன்றைக்கு ஆண், பெண்ணைக் கட்டிக் கொள்ளுகின்றார்கள். வரும் காலத்தில் பெண்தான் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும்.
பெண்களும், ஆண்களைப் போல சகல துறைகளிலும் முன்னேறி விடுவார்களேயானால், தான் விரும்பும் நபரைத் தானே தேர்ந்து எடுத்துக் கொள்ளுவார்கள்.
(14.8.1964 அன்று எடமேலையூர் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 29.8.1964
1 comment:
ம்ம்ம் உண்மைதான்............
Post a Comment