Thursday, July 5, 2012

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 76 விழுக்காடு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளனவாம்.
மொத்த வழக்குகள் 3641 இல் 767 வழக்குகள் தான் முடித்து வைக்கப்பட்டுள்ளனவாம்; இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய நிலைப்பாடாகும்.
தீண்டாமைக் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங் களுள் - இது குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒன்றாகும்.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று வார்த்தையளவில்தான் நாட்டில் உலவி வருகிறதே தவிர நடைமுறையில் இது குறித்து நிருவாகமும் கவலைப் படுவதில்லை, நீதிமன்றங்களும் கவலைப்படுவதில்லை.
இன்னும் தீண்டாமைச் சுவர்களும், தேநீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறைகளும் நீடிப்பது வெட்கக்கேடானதாகும்.
இதுகுறித்து முக்கியமாக கவனிக்குமாறும் ஆங்காங்கே நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறும் கழகத் தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்புகூட ஈரோடு கொடுமுடியை ஒட்டிய நகப்பாளையப் பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதுபற்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல் பாட்டுக்கு உடனடியாக வெற்றி கிடைத்துள்ளது. அந்தச் சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுவிட்டது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுமாறு கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது தந்தை பெரியார் பிறந்த மண்! ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனையோ தியாகத் தழும்புகளை ஏற்ற இலட்சோப லட்சங் கருஞ்சட்டையினர் வாழ்ந்து மறைந்த பூமி! இங்கு ஒரு தீண்டாமைக் குற்றம் நிகழ்கிறது என்றால், கழகத்துக்குத்தான் சவால்! வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத் துவத்தைவிட இதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமும் - அவசரமுமாகும்.
மதுரையையடுத்த மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் படுகொலை - அது தொடர்பான பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கை பதற வைத்தது. 37 வயதுடைய அவரின் தலை தனியாகக் காணப்பட்டது. 4 ஆவது மற்றும் 5 ஆவது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்து எலும்பை வெட்டியும், அதைச் சுற்றியுள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவை வெட்டிய நிலையில் காணப்பட்டனவாம்!
என்னே ஜாதீயத்தின் அருவருக்கத்தக்க வெறித் தனம்! தீண்டாமை மட்டும் ஒழிந்தால் போதும்; ஜாதி ஒழியக்கூடாது என்று இன்றைக்குக்கூடக் கூறக் கூடிய, இதோபதேசம் செய்யக்கூடிய மே(ல்)தாவிகள், அறிவுக் கொளுந்துகள், சங்கராச்சாரியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தீண்டாமை க்ஷேமகரமானது என்று  சங்கராச்சாரி சொன்ன தெல்லாம் (மறைந்த காஞ்சி - சந்திரசேகரேந்திர சரஸ்வதி) தெய்வத்தின் குரல் என்று கூறுபவர்களும் இந்த நாட்டில் உண்டு.
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் என்பதெல்லாம் மாய்மாலமே! சுதந்திரம் இருக்கும் நாட்டில் - மனித உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டிய நிலையில் பிறவியிலேயே ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் ஜாதிக்கு ஏது இடம்?
தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்காக அரசுகள் ஒதுக்கும் நிதிகள் அவர்களுக்குப் பயன்படுத்தப்படாமல் வேறு துறைகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன என்கிற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.
இது அரசு நிலையிலேயே கடைப்பிடிக்கும் இன் னொரு வகை தீண்டாமைதான் என்று சொல்லவேண்டும்.
தீண்டாமையைப் பொறுத்தவரை எந்தப் பகுதியில் அது தீய தலைகளைக் காட்டிக் கொண்டுள்ளது என்பது காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவுக்கு மிக நன் றாகவே தெரியும். முளையிலேயே கெல்லி எறியும் நட வடிக்கைகளை மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு காவல்துறை ஏன் எடுக்கக்கூடாது?
இந்து மதம் என்ற கொடிய அமைப்பின் மிச்ச சொச்சங்களில் ஜாதியும், அதன் தீய விளைவான தீண்டாமையும் மிகமிக மோசமானவை - பிரச்சாரம் - சட்டம் இவற்றின்மூலம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டி யவை - பிரச்சாரம் என்றால் திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லையே!
கழகம் மேலும் தீவிரமாகப் பாடுபடும்; பொதுமக்கள் ஒத்துழைப்பார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...