Wednesday, July 25, 2012

டாக்டர் வரதராஜூலு நாயுடு பற்றி தந்தை பெரியார் (இரங்கலுரை) (2)


நான் சென்னைக்கு எப்போது வந் தாலும் திரு. நாயுடு அவர்கள் என்னை வந்து சந்திக்கத் தவறுவதே கிடையாது. 15 நாளைக்கு முன்பு என்னிடம் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்று காலை அவருடைய மகன் டெலி ஃபோனில் அவர் காலமான செய்தியைச் சொன்னதும் முதலில் நம்பாமல் பிறகு அதிர்ச்சி அடைந்தேன். திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இல்லா விட்டால் அவரது உடல் கட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பார். அவர் எப்போதெல்லாம் என்னைப் பார்க் கிறாரோ அப்போதெல்லாம் என் உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லி வற்புறுத்துவார். உணவு விஷயத்தில் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் மிக கண் ணுங் கருத்துமாக இருப்பார். நானும் அப்படிப் பார்த்துதான் சத்தான உண வையே சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் என்னால் இது முடிவதில்லை. இதற்குக் காரணம் எனக்கு ஓய்வில்லை என்பதும், நான் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத ஒரு சோம்பேறி என்பதும் ஆகும். என் சாப்பாடு பிச்சைக்காரன் சாப்பாடு மாதிரி. இங்கொரு நாள் அங்கொருநாள், இந்த வீட்டில் ஒரு நாள் அந்த வீட்டில் ஒரு நாள் என்று சாப்பிட்டு அலைந்து கொண்டிருப்பவன். என்னால் எப்படி உணவு விஷயத்தில் அவ்விதம் நடந்து கொள்ள முடியும்?
யாருக்கும் உதவி புரியும் பண்புள்ளவர்
டாக்டர் நாயுடு அவர்களிடத்தில் காணப்பட்ட மற்றொரு அரிய பண்பு என்ன என்றால் யார் போய் எந்தக் காரியத்தை அவரிடம் சொன்னாலும் மாட்டேன் என்று சொல்லாமல் தன்னால் முடிந்தவரை செய்து முடிப்பார். அதிலும் இப்போது தலைவர் அவர்கள் பொறுப் பான பதவிக்கு வந்த பிறகு டாக்டரிடத் தில் இன்னும் ஏராளமான அளவுக்குப் போய் செய்யச் சொல்லி தொந்தரவு கொடுத்தார்கள். அவரும் யாருக்கும் உதவி செய்யாமல் இருந்ததில்லை. அவருடைய வயது இப்போது 71. என்னை விடச் சிறியவர்தான். ஆனாலும் நல்ல அளவுக்குப் பொது வாழ்வில் இருந்து உழைத்தார்கள். தலைவர் காமராசர் அவர்களுக்குக் கிடைத்த நல்ல துணை வராக இருந்தார் டாக்டர் நாயுடு அவர்கள். பல விஷயங்களை நல்ல யோசனைகளைச் சொல்லக் கூடியவராக இருந்தார். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நல்ல துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதே மிகமிகக் கஷ்டமான காரியமாகும்.
எப்படியோ நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப் போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை.
தனக்கென வாழா பிறர்க்குரியாளர்
இப்போது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளைப் பற்றி நினைக்க வேண்டும். டாக்டர் அவர் களுடைய குடும்பம் சங்கடமான நிலையில் இல்லை என்றாலும் அவர் இவ்வளவு பாடுபட்டும் அவர் தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. பெரிய பதவி களை அவர் அனுபவித்ததும் கிடையாது. நான் தொடர்ந்து காங்கிரசில் இருந் திருப்பேனானால் நிச்சயமாக அவரை நான் மந்திரியாக்கிப் பார்த்திருப்பேன். இப்போதிருப்பவர்கள் அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை என்பதோ அவர் அதற்கு அனுபவமற்றவர் என்றோ அல்ல இதற்கு அர்த்தம். அதற்குக் காரணம் டாக்டர் நாயுடு அவர்களே தன்னை அப்படி ஆக்கிக் கொண்டார். முக்கியமாக குருகுலப் போராட்டத்தில் அவர் தீவிர மாக ஈடுபட்டு ஒரு சிலரின் வெறுப்புக்கு ஆளாகியது மாத்திரமல்லாமல் தன்னை யாரென்றும் காட்டிக் கொண்டார்.
திருப்தியான வாழ்க்கை நடத்தியவர்
ஆனாலும் அவர் திருப்தியோடுதான் மனக்குறை இல்லாமல் வாழ்ந்தார். அந்தத் திருப்தி உணர்ச்சியைத்தான் பொது வாழ்வில் இன்று இருப்பவர்கள் பெற வேண்டும். அதைத்தான் அவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உழைத் ததினால் அவர் பணமோ பதவியோ பெறவில்லை. மாறாகத் தன்னுடைய செல் வத்தை அதற்கென செலவு செய்தார். அவர் ஒன்றும் இதனால் பயன் பெறவில்லை.
கற்க வேண்டிய பாடம்
தொண்டுக்குப் பலன் அடையவேண் டும் என்று நினைக்காமல் வாழ வேண்டும். காலஞ்சென்ற டாக்டர் நாயுடு அவர்கள் அப்படித்தான் பலன் அடையாமல் பொது வாழ்வில் உழைத்தார். அதைத்தான் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இறுதி மரியாதை
இங்கு (இறுதிச்சடங்கு நடைபெறும் இடம்) வந்துள்ள பலரும் பலவித கொள் கையுடையவர்கள் என்றாலும் அவரவர் நம்புகின்ற லட்சியங்களை வைத்துப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பலனைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்ற வேண்டும். இதுதான் நாம் டாக்டர் அவர் களுக்குச் செய்யும் சிறந்த இறுதி மரி யாதையாகும். (விடுதலை 24 ஜூலை 1957)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...