Tuesday, June 26, 2012

உதவாதினி ஒரு தாமதம்


வரும் ஆகஸ்ட்-  10 ஆம் நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இனவரலாற்றிலும் மிக முக்கியமான நாள். இந்நாளில்தான் 1962 ஆம் ஆண்டு விடுதலையில் தமிழர்களின் உரிமை மீட்பர் தந்தை பெரியார் அவர்கள் வரவேற்கிறேன் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். விடுதலையின் ஆசிரியராக திரு கி.வீரமணி பொறுப்பேற்கிறார். அவரது ஏக போகத்தில் விடுதலை ஒப்படைக்கப்படுகிறது! என்று. அதுவரை தந்தை பெரியார் அவர்களால் இந்த அளவு உரிமை வேறு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை என்று கணிக்கும் அளவுக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினார்.
தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு வீண் போகவில்லை என்பது விடுதலை நடந்து வந்த கடந்த கால பாதை, நடந்து வருகின்ற நிகழ்காலப் பாதைகளை  காழ்ப்பின்றி, கழிப்பின்றி திறந்த மனத்தோடு பார்ப்பவர்கள் நிச்சயம் அறிவார்கள்.
50 ஆண்டு விடுதலை ஆசிரியராகப் பணி புரிந்த ஆசிரியருக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளிப்பது என்ற தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்த கருஞ்சட்டையினர், புளகாங்கிதத்தோடு வீறுநடை போட்டுக் கொண்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக 6 மாத சந்தா இந்த ஜூன் மாதத்தோடு முடிவுறும் நிலையில், அவற்றைப் புதுப்பிக்கச் செய்யும் பணியில் மீண்டும் நாம் ஈடுபட்டு களத்தில் இறங்கியுள்ளோம்.
இதுவரை, கிருட்டிணகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூர், மேட்டூர், திருச்சி, லால்குடி, கரூர், திருவண்ணாமலை, செய்யாறு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், பெரம்பலூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மதுரை, மதுரை புறநகர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கலந்துரையாடல் கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. அடுத்துத் தொடரவும் உள்ளன.
மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை காட்டிய எழுச்சியில் எள்ளளவும் குறைவில்லாமல் கருஞ்சட்டைத் தோழர்கள் காட்டிய எழுச்சியும், ஆர்வமும் நெகிழ வைக்கின்றன.
சமூகப் புரட்சிக்காகவே கருப்பு மெழுகுவர்த்திகளாகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள இத்தோழர்களின் தொண்டறத்தை என்னவென்று சொல்லி பாராட்டுவது!
இந்தத் தொண்டர்களுக்கு நிகர் இந்த உலகில் வேறு யார்? நம்மால் முடியாதது மற்றவர்களாலும் முடியாது - மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று கழகத் தலைவர் அவர்களின் கணிப்பே கணிப்பு!
கலந்துரையாடல் கூட்டங்களில் கருத்துகள் தெரிவித்த தோழர்கள் ஒரே மாதிரியாக ஒன்றைச் சொன்னார்கள்.
மக்களிடம் சென்றால் வரவேற்பிருக்கிறது - மரியாதை இருக்கிறது - நம்மிடம் அன்பு காட்டுகிறார்கள் - பாசம் காட்டுகிறார்கள் - நம் தொண்டைப் பாராட்டிப் பேசுகிறார்கள்.
விடுதலையை முதன்முதலாகப் படித்த சந்தாதாரர்கள் இது போன்ற ஏட்டை இதுவரை நாங்கள் படித்ததில்லை. அவ்வளவு தகவல்கள், கருத்துகள் பூத்துக் குலுங்குகின்றன - எழிலாகவும் ஏடு உள்ளது  - எடுப்பாகவும் உள்ளது என்று மனந்திறந்து பாராட்டுகிறார்கள் என்று சொன்னபோது மனமெல்லாம் புல்லரித்தது. நல்ல சமயமிது - தோழர்களே - நழுவ விடாதீர்கள்! - கொள்கைப் பரப்புதலில் மகத்தான புலிப் பாய்ச்சல் விடுதலை சந்தாதாரர்களின் எண்ணிக்கையை பெருக்குவது.
கடைசி மூடன் திருந்தும் வரைக்கும் , கடைசி சுரண்டல் ஆசாமிகள் நடமாடும் வரைக்கும், நமக்கு வேலைகள் உண்டே!
இதனைச் சாதிப்பதில் நமக்குக் கிடைத்திருக்கும் போர் ஆயுதம் அறிவு ஆசான் அய்யா நம்மிடம் பத்திரமாகக் கொடுத்துச் சென்ற விடுதலை எனும் ஆயுதமே!
பாதுகாப்பான ஆயுதத்தை மட்டும் அய்யா கொடுத்துச் செல்லவில்லை. அதனைப் பாதுகாக்கும் மகத்தான தலைவரை ஆசிரியராகவும் நமக்குக் கொடுத்துச் சென்றார்.
இந்தச்சூழலில் எதை நம்மால் சாதிக்க முடியாது? நம் பலம் நமக்குத் தெரிய வேண்டாமா?
கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, களத்தில் இறங்குவீர்! ஒவ்வொரு சந்தாதாரரையும்  சந்திக்கப் போகும்போது தனியாகச் செல்லாதீர்கள். குறைந்த பட்சம் நான்கைந்து பேராவது செல்லுங்கள்.
விடுதலை வாசகர் வட்டத்தைத் தொடங்குங்கள்! தொடங்குங்கள்!! ஊத்தங்கரை வழிகாட்டுகிறது - உதவாதினி ஒரு தாமதம், உடனே எழுவீர் கருஞ்சட்டை வீரர்காள்!
- மின்சாரம் -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...