Wednesday, June 20, 2012

யோகா - நோய்களைக் குணப்படுத்துமா?


பேராசிரியர் ந. வெற்றியழகன்
அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், இன்று, நாட்டில் பரவலாக, பொருள் தெரிந்தோ தெரியாமலோ பேசப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது.
யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது;
கற்பக விருட்சம், காமதேனு போன்று கேட்டதெல்லாம் தரும் தெய்வீகக் கொடை. வரம் தரும் தேவருலகத்து உயர்பொருள் என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருவது.
ஏதோ, ஏதோ, ஏதோ - ஒரு மயக்கம்!
யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மத மடமைச் சரக்கல்ல.
அறிவியல் நெறிப்படி நல்ல உடற் பயிற்சி;
உலகியல் சார்ந்தது; - என்றெல் லாம் கருதப்பட்டு வருகிறது.
கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது.
யோகா என்ற சொல்லில் - கருத் தில் ஏதோ, ஏதோ, ஏதோ ஒரு மயக் கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்துவிட்டது.
அது, எப்படி, எப்படி, எப்படி வந்தது எனக்கும் என்று சொல்லும் படியான - இல்லை பாடும்படியான ஒரு மாயம் இன்றைக்கு மக்களி டையே பரவிவிட்டது; பரவி வருகிறது.
மாயவலையில் மாட்டியவர்கள்!
பெரும் பெரும் அரசியல் தலை வர்கள்; பேராசிரியப் பெருமக்கள்; அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models)  திரையுலக விண்மீன்கள் - யோகாவில் ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால் இந்த யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை  என்றும் விளம்பரப்பட்டு வருகிறது.
இப்படியும் ஒரு மாயையா?
இந்த யோகா, ஆரிய மாயை போன்று ஒருவகை மாயைதான்! யோக()மாயைதான்!
ஆத்மாக்களின் அய்க்கியமாம்!
பண்டைய இந்(திய)துத் தத்துவச் சிந்தனைகள் ஆறில் (ஷட்தர்சனம்) யோகா ஒன்று.
இதன் நிறுவுநர் பதஞ்சலி முனிவர் ஆவார்.
இது பல மர்மங்கள் கொண்டுள்ள படியால் இதனை வெளிப்படையாக ஆய்வு செய்யவோ விவாதிக்கவோ கூடாது என மர்மயோகிகளால் கூறப்பட்டது.
யோகா என்ற வடசொல்லின் பொருள் இணைவது என்பது. எதனோடு எது இணைவது?
உயிர் இறையோடு இணைவது.
அதாவது,
ஜீவாத்மா பரமாத்மா வோடு அய்க்கியமாவது; ஒன்று படுவது என்பது பதஞ்சலியாரின் கருத்து.
எட்டை எட்டுவது
இந்த யோகம், எட்டு படிநிலைகள் (Stages) கொண்டது.
அவை:
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தியானம், சமாதி.
இது அஷ்டாங்க யோகா எனப்படும்.
இதன் பின்புலம் என்ன?
யோகா பற்றிய ஆய்வுக்கு நீண்ட தொரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.
1914இல்,விவேகாநந்த அடிகளார், யோகம் என்பதன் அற்புத ஆற்றல் பற்றி யோகா என்ற நூலை எழுதினார்.
1926இல் வி.ஜி.ரிலே என்பவர் இதன் பெருமை பற்றிய நூலினை எழுதி னார்.
பிறகு, சுவாமி பிரணாபநந்த சரஸ்வதி என்பவர் யோக ஆற்றல் பற்றிச் சிறுகதைகள் அடங்கிய, ஓர் யோகியின் தன்வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
பின்னர், இதைப் பற்றி நூல்கள் பல, பல் துறை வல்லுநர்கள் எனப்படுப வர்களால் எழுதப்பட்டன.
இப்படியும் ஏமாற்று வேலைகள்!
இளைஞர்கள், யோகப் பயிற்சி செய்கிறார்கள் என்று சில காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப் படுகின்றன.
உண்மையில் அவை யோகா அல்ல.
ஆசனம் எனப்படும் உடற்பயிற்சி கள், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சிகள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
மோசடியான வாக்குறுதிகள் தரப்படுகின்றனர்.
பயன்படுத்தப்படும் படாடோப வார்த்தைகள்
மாயவித்தைக்காரர்கள் (Magicians) பயன் படுத்துவது போல படாடோப, பகட்டான, அலங்கார, ஆரவாரமான வார்த்தை ஜாலங்களை இந்த யோகீஸ்வரர்கள் பயன்படுத்திப் பெரிதாக விளம்பரம் செய்வர்.
சண்டப்பிரசண்டம்:
இந்த யோகிகள் யோகாவால் தங்களுக்கு அற்புத ஆற்றல்கள் உள்ளனவாகத் தம்பட்டம் அடிப்பர்; சண்டப் பிரசண்டம் செய்வர்.
இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுதல்;
உடலின் தன்னியக்க உறுப்பு (Autonomous organs) மண்டலத்தினைக் கட்டுப்படுத்துதல்;
நாடி ஓட்டத்தை நிறுத்திக் காட்டல்;
அந்தரத்தில் மிதத்தல் (Levitation) முதலானவை அவர்கள் பீற்றிக் கொள்ளும் சில அற்புத சண்டப் பிரசண்டங்கள் ஆகும்.
முகத் திரைகள் கிழிபட்டன:
இவையெல்லாம் ஏமாற்று - தந்திர வேலைகள் என்று பொய்ப்பித்துக் காட்டப்பட்டன.
டாக்டர் ஆபிரகாம் டி.கோவூர், பி.பிரேமாநந்தா முதலிய  பகுத்தறிவுப் புலனாய்வுப் பேரறிவாளர்கள் இதயத் துடிப்பை 10-20 நொடிகள் நிறுத்திக் காட்டியுள்ளனர்.
நாடித்துடிப்பை ஒரு நொடிக்கு மேலாகவும் தந்திரங்களால் நிறுத்திக் காட்டியுள்ளனர்.
இவற்றின் மூலம் யோகிகள் எனப்படுவோரின் முகத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்தனர்.
முடியவில்லையே!
1959இல், அனைத்து நாட்டு உடலியல் மருத்துவ அறிவியல் காங்கிரசின் 25 ஆவது கூட்டத்தில் புதுடில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இத்தகைய ஏமாற்று யோகிகளின் தம்பட்ட விளம்பரங் களை அறிவியல் ஆய்வு வழி யோகி களின் செயல்களைப் பொய்ப்பித்துக் காட்டியது.
இதயத் துடிப்பின் நிறுத்தத்தை இந்த அமைப்பிலுள்ள பகுத்தறி வாளர்களின் முன் இந்த யோகீந் திரர்கள் மெய்ப்பித்துக் காட்ட முடியாமல் விழித்தனர்.
1974 இல், பண்டைய - இடைக்கால இந்தியா வின் மருத்துவ - அறிவியல் மெய் யியல் கருத்துருக்கள் (The Science of Medicines and Philosophiecal concepts in Ancient and Medievial India) என்னும் தலைப்பிலான நூல் வெளியிடப் பட்டது.
இதனை எழுதியவர், உடற் கூற்றியல் துறைத் தலை வரும், பேராசிரியரும், டீனும் (Dean) ஆன டாக்டர் என்.எச்.கேஸ்வானி அவர்கள். (Prof. N.H.Keswani, Dean and Professor and HoD of Anatomy).
பெரிதும் முயன்ற பிரே மானந்தா:
இந்த யோக, ஏமாற்றுப் பித்தலாட் டங்களை விளக்கி உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும்,  NESTC விருது பெற்றவரும் ஆன பி.பிரே மானந்தா அறிவியலும் அருஞ்செயல் (Science Versus Miracles) என்னும் நூலை வெளியிட்டார்.
நோய்கள் குணமாகுமாமே! யோகப்பிரதாபங்ளின் முடி மணியாக விளம்பரப்படுத்துவது, யோகா நோய்களை  குணப்படுத்தும் பேராற்றல் கொண்டது என்பதாகும்.
இந்தக் கருத்து,
அறிவியல் அடிப்படையற்ற மிக மிகத் தவறான தகவலாகும்.
அறிந்திருக்கவில்லை!
1673இல், அந்தோணி வான்லூவன்ஹாக் அவர்கள், நுண் பெருக்காடி (Microscope)
கருவி, கண்டுபிடிப்பதற்கு முன், உடலுக்குள் நுண்ணுயிரிகள் Micro-organisms) இருக்கின்றன என்றோ, அவைதாம் நோய்கள் உண்டாகக் காரணம் என்றோ மாந்த சமுதாயம் அறிந்திருக்கவில்லை.
பாபமாம்! சாபமாம்!!
நுண்பெருக்காடி கண்டு பிடிப்பதற்கு முன் நோய்கள் மக்களின் பாபங்களாலும் கடவுள்கள் - கடவு ளச்சிகளின்  சாபங்களாலும்தான் ஏற்படுகின்றன என்பதான மூட நம்பிக்கையினைக் கொண்டிருந்தனர் மக்கள்.
பதஞ்சலியின் காலத்திலும், இதே கண்ணோட்டம்தான் இருந்தது.
அறிவியல் மனப்பான்மை:
மனித உடலில் நோய்கள் உண் டாக எத்தனையோ காரணங்கள் உள்ளன.
நுண்ணுயிரிகளின் தொற்றுதல்; சுரப்பிகளின் உயர் அல்லது குறைந்த செயல்பாடுகள்; உயிர்ச்சத்துகளின் (Vitamines) குறைபாடுகள் முதலியவையே நோய்கள் உண்டாகக் காரணங்கள்.
நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சை பெற, மனத உடலியல் (ßysiology) நோய்கள் (Diseases), மருந்துகளின்  வேதியியல் பகுப்பாய்வு (Chemical analysis of medicines) பற்றிய அறிவியல் மனப் பான்மையும்  அறிவும் உள்ளவர் களாக மக்கள் இருப்பது மிகமிக இன்றியமையாதது ஆகும்.
வேண்டும் விழிப்புணர்வு:
நோயாளிகள் மட்டுமா?
மருத்துவ சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூட இயற்கை பற்றிய பரந்த அறிவு படைத்தவர்களாக இருத்தல் வேண்டும்.
அப்படி இல்லாத மருத்துவர்கள் அம்பக் அல்லது போலியாக நடிக்கும் மருத்துவர்கள் (Quacks) ஆவார்கள்.
எத்தனை நாள்கள்தான் ஏமாற்றுவார்கள்?
நோய்களை யோகாவால் குணப் படுத்துவோம் என்று சொல்லும் யோகிகள் சிலர்  50 வயதுக் குள்ளாகவே, குருதி அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புத் தன்மை முதலான நோய்களால் இறந்து போயுள்ளனரே!
ஏன்? ஏன் ?
யோகாவால், தங்கள் நோய்களையே குணப் படுத்திக் கொள்ள இயலாத இந்த யோகீஸ்வரர்கள் - இராஜயோகிகள் எப்படிப் பிறருடைய நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று உரிமை கொண்டாட முடியும்?
இது ஏமாற்று - எத்து வேலை யல்லவா?
ஏய்த்துப் பிழைக்கும் பேர் வழிகளான இவர்கள் எத்தனை நாள்கள்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?
எதற்கு ஆற்றல் இருக்கிறது?
கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு இந்த யோக சுவாமிகள் எல்லாம் யோகாவின் பெயரால், பசு மூத்திரம், பசுச் சாணம், மூலிகை மருந்துகள் இவற்றினை விற்பனை செய்கிறார்களே!
யோகா மூலம் அனைத்து நோய்களும் குணமாகும் என்பவர்கள் எதற்காக இவற்றைத் தரவேண்டும்?
பேராற்றல் வாய்ந்தது யோகாவா? பசுமூத்திரம், பசுச்சாணி, மூலி கைகளா?
இத்தகு வினாக்களைப் படித்த பெருமக்கள் இந்த யோகிகளைக் கேட்கவேண்டும். கேட்கவேண்டாமா?
இல்லையென்றால், ஏமாறச் சொன்னது நானா?
என்மீது கோபம் ஏனா? என்று அத்தகைய யோகாக்காரர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்களா?
படித்துப் பார்க்கலாமே?
இந்த நோய்களைக் குணப்படுத் துவதாகச் சொல்லப் படும் பித்த லாட்டங்களை மேலும் அறிந்து பயன்பெற, 26, 27-12-2009 நாள்களில் சென்னை, பெரியார் திடலில் நடந்த இந்தியப் பகுத்தறிவாளர் கழகங் களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்டு மலரினைப் படித்துப் பார்க்கலாம்.
ஏமாற வேண்டாமே?
யோகா பற்றிய விளம்பரங்களும் யோகிகளின் ஏமாற்று வேலை களையும் அம்பலப்படுத்தும் செய்தி களை யெல்லாம் அறிந்து மக்கள் ஏமாறாமல் இருப்பதே மக்களின் இன்றியமையாப் பொறுப்புணர்ச் சியாகும்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...