Friday, April 27, 2012

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்துக்கு...!


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தருமபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தனியீழம் குறித்துப் பேச தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தகுதியில்லை என்று பேசியுள்ளார். - (தினமணி, 26.4.2012)
இது உண்மையானால், பெரிதும் வருந்தத்தக்கதே! தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.
பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!
அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்- எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகவும் முடியும். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் என்ன என்னவெல்லாம்  பேசினார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பலரின் முகவரிகள் காணாமலே போய் விடும். அது இப்பொழுது தேவையா?
தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?
யுத்தம் ஒன்று நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்று என்ன சொன்னார்? என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலமைச்சராக இருக்கும் நிலையில் சொல்லும் தற்போதையை கருத்தின் வலிமையைச் சிதைப்பது ஆகாதா? அதையும் எவரும் செய்யக் கூடாது - வந்தவரை லாபம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதவேண்டும் - பொது இலட்சிய நோக்கோடு!
கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?
டெசோவை மீண்டும் தொடங்குவோம் என்று கூறுகிறார் கலைஞர் அவர்கள்; அப்படித் தொடங்கு வதற்கு வைகோ அவர்களைக் கேட்டு அனுமதி பெற வேண்டுமா, என்ன?
எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனைப் பொருட் படுத்தாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் தொடர்ந்து கூறிவரும் ஆழமான கருத்தாகும்.
பிரச்சினைமீது கவலை உள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள் - முடிவெடுப்பார்கள்.
விவாதத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும் கூட நேற்று மாறுபட்டவர்கள், இன்று ஏற்றுக் கொள்வார்களேயானால், அதனை வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும், பிரச்சினைமீது கவலையும், அக்கறையும் உள்ள செயலாகக் கருதப்பட முடியும்.
தமிழர்கள் ஒன்று சேர்ந்து அடிப்படைப் பிரச்சினை யில் குரல் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!
உலகத் தமிழர்கள் மதிமுக பொதுச் செயலாளரின் இந்தக் கருத்தை - நிலைப்பாட்டை ஏற்க மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.
என்ன சொன்னாலும் தனியீழம்பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை என்பதில் வைகோ அவர்கள் உறுதியாக இருப்பாரேயானால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும்.
ஈழத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றிப் பேசியதற்காகவும், அந்த மேடையில் இருந்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது வைகோ போன்ற வர்களை வெளியில் கொண்டு வருவதற்காகத் தள்ளாத வயதிலும் நீதிமன்ற வாயிலிலும், சிறை வாசலிலும் கடும் வெயிலில் நின்றாரே - வெளியில் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டாரே - விடுதலை ஆன நிலையிலும் போடப்பட்ட வாய்ப்பூட்டு களை ஆட்சிக்கு வந்த நிலையில் உடைத்தாரே இவையெல்லாம் தகுதி குறைவுதான் கலைஞர் அவர்களுக்கு என திரு வைகோ அவர்கள் நினைத்தால் நாம் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கருத்தைச் சொன்னதற்காக பிற்காலத்தில் வைகோ அவர்கள் வருந்துவார் என்பதில் அய்யமில்லை.
கலி. பூங்குன்றன்
சென்னை  27.4.2012 பொதுச் செயலாளர்,    திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...