Thursday, April 26, 2012

துறையூரை நோக்கி!


துறையூர் இப்பொழுது லால்குடி கழக மாவட்டத்திற்குள் வருகிறது. இந்த மாவட்டம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்துமே நினைவில் நிலைத்து நிற்கக் கூடியவை. சிறீரங்கத்தில் ஸ்ரீமான் ரெங்கநாதன் கோவில் வாசலில் கம்பீரமாக அமர்ந்து பகுத்தறிவுப் பாடம் போதிக்கிறாரே - பகலவன் பெரியார் - அது என்ன சாதாரணமானதுதானா?
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் - அவற்றை எல்லாம் ஓடுகிற ஓட்டத்தில் எத்தி எறிந்து விட்டு, ஈரோட்டு இறைவனின் (தலைவரின்) வெண்கலச் சிலையை நிறுவி, வரலாற்றில் இடம் பிடிக்கவில்லையா?
காஞ்சி சங்கர மடம் முன் அய்யா அவர்கள் சிலை, கடவுள் இல்லை வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும்; பக்தர்கள் திரண்டு வருகின்ற இடங்கள் அல்லவா இவை!
கோவிலுக்குள் உள்ள கடவுள் சிலைகளையும் பார்த்து விட்டு, வெளியில் வந்து கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பீடத்தின் மீது செம்மாந்து  நிற்கிறாரே - அந்தச் சிலைக்கு உரியவர் யார் என்று தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டு கின்றனர் வெளிநாட்டவர்கள், அயல் மாநிலத்தவர்கள்!
தந்தை பெரியார் மறைந்த இந்தக் காலகட்டத்தில் இந்த அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
வரலாற்றுக் கல்வெட்டுகளாக இவை நின்று விடு கின்றன! நம் சந்ததியினரின் சிந்தனைக்கு விருந்தாக இருக்கப் போகின்றன! அதே சீரங்கத்திலே எடைக்கு எடை என்று எத்தனை எத்தனை விதமான பொருள் களைப் பரிசு மழையாகப் பொழிந்தனர் - தமிழர் தலைவர் அவர்களே திகைத்துத் திக்கு முக்காடவில்லையா? ஒரு காலத்திலே ஒரே திருச்சி மாவட்டம் என்கின்ற கழக அமைப்பு இன்று திருச்சி, லால்குடி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களாகப் பிரித்து இயக்கப் பணிகள் எழுச்சியூட்டும் வகையில் விரிவாக நடைபெறுவதற்கு வழி செய்தார் நமது கழகத் தலைவர். போட்டிபோட்டுக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாளை நாகர்கோவிலில் மண்டல மாநாடு என்றால், நாளை மறுநாள் துறையூரில் மண்டல மாநாடு.
தஞ்சையில் மண்டல மாநாடு எனும் பெயரால் ஒரு மாநில மாநாடே நடைபெற்றது. மே மாதம் 29இல் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு அன்னையார் பிறந்த வேலூர் மாநகரில்.
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்ற கால கட்டம் இது. என்ன தைரியம் இருந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைத் தூக்கி எறிந்து, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை தமிழர்கள் மீது திணித்து ஆரிய ஆபாச ஆண்டுகளை தமிழ் ஆண்டுகள் என்று அறிவிக்கும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிப்பார்கள்? தந்தை பெரியார் ஊட்டிய தமிழின உணர்வு செத்துவிட்டது என்று நினைப்பா? ஆரிய மாயை எழுதிய அண்ணா மண்ணுக்குள் போய்விட்டார் என்ற மனப்பான்மையா? நீறு பூத்த நெருப்பைத் தூண்டிவிட ஆசைப்படுகிறார்கள். நெருப்பா வெறும் சாம்பலா என்பதைக் காட்டுவோம் வாருங்கள் தோழர்களே துறையூரை நோக்கி. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்ற புரட்சிக் கவிஞரின் காவிய வரிகளுக்குக் கருஞ்சட்டைப் பட்டாளம் கட்டியம் கூறட்டும்!

ஒரு சேதி தெரியுமா தோழர்களே?

டெசோ என்ற அமைப்பை மீண்டும் புதுப்பிப்போம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார் தமிழர் தலைவர் (24.3.2012). முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும் சென்னையில் நேற்று நடைபெற்ற - பல்லாயி ரக்கணக்கான தமிழர்கள் திரண்டிருந்த மக்கள் கடல் முன் சங்கநாதம் செய்யும்போது பிரகடனப்படுத்திவிட்டாரே! டெசோவை மீண்டும் புதுப்பிப்போம் தி.மு.க.வும் - தி.க.வும் முன்னெடுத்துச் செல்லும் என்று முழங்கிவிட்டாரே! என் வாழ்நாளின் எஞ்சிய பகுதி இதற்காகவே இருக்கும் என்று எழுச்சிப்பறை கொட்டி விட்டாரே 90 வயதில்!
இந்த முக்கியமான காலகட்டத்தில் துறையூர் மாநாடு, புத்தெழுச்சி கொண்டு பூரித்து எழ இருக்கிறது. விடுமுறைக் காலம்தானே - வீட்டோர் அனைவரையும் அழைத்து வாருங்கள் - உற்றார் உறவினர்களையும் அழைத்து வாருங்கள். கோவில் விழாக்களுக்கு குடும்பம் குடும்பமாகப் போகும் மூடத்தனம் மலையேறிவிட்டது. புரட்சி மாநாடுகள் தான் நாங்கள் பயணிக்கும் புத்துலகு என்று புறப்படுங்கள், புறப்படுங்கள் தோழர்களே - புறப்பாட்டுப்பாடி!

- மின்சாரம் -



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...