Sunday, April 22, 2012

தமிழா, தமிழனாக இரு!


கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல!
சித்ரா பவுர்ணமிக்கு தீபம் ஏற்றச் சொல்லி கட்சிக்காரர்களுக்கு அறிக்கை கொடுத்தவரா யிற்றே! பக்தர்கள் மண் சோறு சாப்பிடுவது கண்டு புளகாங்கிதம் அடையக் கூடியவ ராயிற்றே!
அதனால்தான் துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை; பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக் கொண்டவரல்லர் என்று வெளிப் படையாகக் கருத்துத் தெரிவித்தும்கூட, அதனை இதுவரை மறுக்கவில்லை என்பதி லிருந்தே செல்வி ஜெயலலிதா சோ கூட்டத்தின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற முடிவுக்கு எளிதாகவே வந்துவிடலாம்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் 1921இல் கூடி எடுத்த முடிவல்லவா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது!
அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களும் சாதாரணமானவர்களா? தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இவர்களைவிட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்ப் புலமையும் - ஆய்வும் கொண்டவரா?
இந்தப் பெரும் புலவர்களின் முடிவைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புலவர்களுக்குச் சிறப்பு செய்யப்படும் என்றால், இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாக இருக்க முடியும்?
நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் திருச்சியில் கூட்டப்பட்ட மாநாட்டில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்று மகிழ்ந்தார் என்பதைவிட வேறு என்ன வேண்டும்?
உண்மையான திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்து அதன் கொள்கைகளை ஏற்றுமதிக்கும் மனப்பான்மை இருந்தால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை (23.1.2008) ரத்து செய்யும் (23.8.2011) எண்ணம் வருமா?
2001இல் (சனவரி 6) மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்று பிரகடனப் படுத்தினார்களே - அந்தத் தமிழ்  உணர்வை மதித்திருக்க வேண்டாமா?
சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மையாருக்குத் தாளம் போடுவோரைக் கேட்கிறோம்; நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஆபாசத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுகுறித்து கழகம் எழுப்பிய கேள்வியின் பக்கம் எந்தக் கொம்பரும்  தலை வைத்து படுக்கவில்லையே ஏன்? ஏன்?
ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் வளர்ந்து விட்ட ஒரு கால கட்டத்தில், 60 ஆண்டுகளுக்குள் முடங்கி விட்ட ஒரு சுழற்சியை ஏற்றுக் கொள் வதைவிட அறிவின்மையும், அறிவியல் மனப் பான்மையற்ற தன்மையும் வேறு உண்டா?
21ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலமா? இதில் குறிப்பிடத்தக்க வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூராதி சூரர்கள் (?) வாயே திறக்காத அவலம்தான்! திண்டுக்கல் பூட்டுப் போட்டு கெட்டியாகப் பூட்டி விட்டார்கள் போலும்!
தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...