தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 19.4.2012 அன்று தமிழ்ப் புத்தாண்டுபற்றி அளித்த விளக்கவுரை வேடிக்கையானது.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருகிறது என்றும்; கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று கார்த்திகை நடசத்திரம் வருகிறது என்பதை திரு. கருணாநிதியே ஒப்புக் கொண்டு விட்டதால், பிற மாதங்களை இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன். வைகாசி மாதம் பவுர்ணமியன்று விசாகம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, வைசாகம் நட்சத்திரம் திரிந்து, விசாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி மாதம் பவுர்ணமியன்று, அனுஷம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, அனுஷம் நட்சத்திரம் மருவி, ஆனி என்றழைக்கப்படுகிறது. ஆடி மாதம் பவுர்ணமியன்று பூராடம் நட்சத்திரம் வருகிறது. பூராடம் - பூராடி என திரிந்து, ஆடி மாதம் என்றழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியன்று திருவோணம் நட்சத்திரம் வருகிறது. அதாவது திருவோணம் அல்லது சிரவணம் நடசத்திரம், சிராவணியாக திரிந்து, ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம் திரிந்து, புரட்டாசி என்றழைக்கப்படுகிறது. அய்ப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரம் வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், ஆஸ்விஜம் என்றழைக்கப்படுகிறது. அது திரிந்து அய்ப்பசி என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில், மிருகசீர்ஷம் நட்சத்திரம் வருகிறது. மிருக சீர்ஷம் நட்சத்திரம், மார்கசீர்ஷம் என்றும் அழைக்கப்படு கிறது. இது திரிந்து மார்கழி என்றழைக்கப்படுகிறது. தை மாதம் பவுர்ணமி அன்று, பூசம் நட்சத்திரம் வருகிறது. இதற்கு தைஷ்யா என்று மற்றொரு பெயரும் உண்டு. இதுவே தை ஆனது. மாசி மாதம் பவுர்ணமியன்று மகம் நடசத்திரம் வருகிறது. மகம் நட்சத்திரத்தை மாக, அதாவது மாசி, என்றும் அழைப்பார்கள். இதுவே மாசி என்றழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் பவுர்ணமியன்று உத்திரம் நட்சத்திரம் வருகிறது. இதை உத்திரப் பல்குனி என்றும் அழைப்பார்கள். இதுவே பங்குனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி சென்னப்பட்டினம் என்பது காலப் போக்கில் சென்னை என்று மருவியதோ, சைலம் என்பது சேலம் என்று எவ்வாறு மருவியதோ, அது போல்தான் இவையும் என்பதை தெரிவித்துக் கொள் கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். வைகாசியில் தொடங்கி பங்குனி வரை உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் திரிந்து - திரிந்து என்று திரிந்து திரிந்து விரட்டி விரட்டி வலிய பொருள் கூறும் தன்மையை நினைத்தால் வயிறு குலுங்கச் சிரிக்கத்தான் செய்கிறது.
இதில் இன்னொரு கேள்வி எழுகிறது - ஒரு நட்சத்திரத்தின் பெயர்கூட தமிழில் இல்லையே ஏன்?
தமிழ் ஆண்டின் மாதங்களுக்குத் தமிழில் பெயர் இல்லையே ஏன்? இவர்கள் கூறும், ஒப்பும் 60 ஆண்டு களின் பெயர்களில் ஒன்றுகூட தமிழில் இல்லையே - ஏன்? கன்னிப் பேச்சு பேசியவரும் சரி, அதனையொட்டி நீண்ட அறிக்கை கொடுத்த முதல் அமைச்சரும், இந்த மிக மிக முக்கியமான கேள்விக்கு விடையிறுக்காதது -ஏன்?
இன்னொரு கேள்வியைத் தொடக்க முதலே நாம் எழுப்பி வருகிறோம். இவர்கள்கூறும் அந்த அறுபது ஆண்டுகள் பிறந்த கதை எவ்வளவு ஆபாசமானது.
அபிதான சிந்தாமணி அதுபற்றி என்ன கூறுகிறது?
ஒருமுறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து நீர் அறுபதனாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு பெண் தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என அதற்குடன்பட்டு, எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து, அவர் திருமேனி யில் மையல் கொண்டு நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன் என்றான்.
கண்ணன், யமுனையில், நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவமுதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று புராணங்களின் களஞ்சியமான அபிதான சிந்தாமணி பகர்கிறதே - இந்தக் கேவலமான ஆபாசமான, அருவருப் பான ஆண்டுகளா தமிழ் ஆண்டுகள்? இவற்றிற்கு வக்காலத்து வாங்குவது, நாகரிக உலகில்தான் நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமா?
தமிழையும், தமிழர்களின் பண்பாட்டையும் கேவலப்படுத்துவதற்கு, இழிவுபடுத்துவதற்கு ஆரியம் கிறுக்கி வைத்த இந்த ஆபாசச் சகதியில் மூழ்கலாமா?
இவ்வாறு வளைத்துப் பேசுபவர்கள்; தந்தை பெரியார் கருத்தென்ன என்று ஏன் கவலை கொள்ளவில்லை?
முதல் அமைச்சர் அவர்கள், டாக்டர் மு.வ. அவர்களை வேறு சாட்சியத்திற்கு அழைத்துள்ளார்.
முன்காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்
(1988 - கோலாலம்பூர் பொங்கல் மலர் சிறப்புக் கட்டுரை)
(1988 - கோலாலம்பூர் பொங்கல் மலர் சிறப்புக் கட்டுரை)
என்று இவ்வாறு வெளிப்படையாக மு.வ. கூறியிருந்தும் அதற்கு முற்றிலும் முரணாக அவர் பெயரை முதல் அமைச்சர் பயன்படுத்தலாமா?
No comments:
Post a Comment