Thursday, April 26, 2012

கட்சிக் குரலில் பேசுகிறார்கள்


இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் - அங்கு என்ன நிலை என்பதைக் குறித்துப் பேசாமல், அவரவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் ஏற்கெனவே கொண்டிருந்த நிலைப்பாட்டை இலங்கையின் கருத்தாகக் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படி நடந்து கொள்வது நியாயமானது அல்ல - நேர்மையானதும் அல்ல.
குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க் சிஸ்டு) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.கே. ரெங்கராசன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரியத்தை அளிப்ப தாக உள்ளது.
ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் காலத்திலேயே தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது.
இதற்காகவே தங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியீழத்தை முன்வைத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றும் காட்டிய வரலாறு எல்லாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்குத் தெரியாதா?
ஒருக்கால் சீனா என்ன முடிவை எடுக்கிறதோ, அந்த முடிவைத்தான் இந்தியாவில் உள்ள சி.பி.எம். எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதோ என்று நினைக்க இடமும் இருக்கிறது.
இலங்கைத் தீவில் நடைபெற்றுள்ள அரசு பயங்கரவாதத்தினால் பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டு காலமாக முள்வேலி முகாமுக் குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
தமிழர்களில் வாலிப வயதுள்ளவர்களை விசாரணை என்கிற பெயரில் கொண்டு சென்று கொலை செய்வதை வழிமுறையாகக் கொண்டு விட்டனர்.
இராணுவத்தினர் பாலியல் வன்முறையை மேற்கொள்வது என்பது அங்கு சர்வ சாதாரணம்!
சொந்த வீடுகளை இழந்திருக்கின்றனர். தங்களின் பாரம்பரியப் பகுதிகள் எல்லாம் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன.
இவ்வளவுக்குப்பிறகும் எந்த ஓர் இனமும் தனி நாடு கோருவது என்பது இயல்பான ஒன்று என்பதை ஒரு மார்க்சியவாதி ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கமோ!
தொடக்க முதலே சி.பி.எம். எடுத்து வரும் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளைப் பாடம் போல தோழர் டி.கே.ஆர். ஒப்பித்துள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்லும் தகவல்களையும், கருத்துக்களையும் கவனித்தால் நகைச்சுவையாகத் தானிருக் கின்றன. அவர்கள் கூற்றுகளில் முரண்பாடு தான் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன.
தமிழ் ஈழப் பெண்கள் எப்படியெல்லாம் மானப்பங்கப்படுத்தப்படுகின்றனர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை பன்னாட்டு ஊடகங்களே தெரிவித்து வந்துள்ள நிலையில், இப்படியெல்லாம் எங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று ஈழத் தமிழ்ப் பெண்கள் தங்களிடம் சொன்னதாக ஒரு காங்கிரஸ் உறுப்பினர் சொல்ல வருகின்றார்.
குழுவுக்குத் தலைமை வகித்த அம்மையாரோ அதிபரைத் தனியே சந்தித்துப் பேசி வந்துள்ளார். இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட அரசியல் தீர்வுபற்றி பேசுவதற்கு இவர்கள் யார்?
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றநேரத்தில், அங்குள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் எந்தக் கருத்தை முன்வைத்தனர்?
இந்தப் பிரச்சினையில் அக்கறை உள்ள வர்கள் குழுவில் இடம் பெறுவதை தவிர்த்து விட்ட நிலையில், இந்தக் குழுவால் என்ன பயன் என்று வெளிப்படையாகச் சொன்னார்களே!
இந்தியா மேற்கொண்ட கண் துடைப்பு நாடகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாத்திரத்தைத் திறம்படச் செய்துள்ளனர் என்று சொல்லலாம்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...