- மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
இன்றைய உலகில் விஞ்ஞானம் மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோபாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம் பிரதேசங்களில் மூடநம்பிக்கைகள் கொடி கட்டிப் பறப்பதைக் கண் கூடாகவே காண முடிகிறது. புதுப்புதுச் சாமிகள் ஆங்காங்கு முளைப்பதும், சாமியார்களின் ஆதிக்கப்பிடியில் குடிமக்கள் மட்டுமல்லாது கோலேந்திகளும் அகப்பட்டுக் கிடப்பதும் விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கத் தெரியாத - மறுக்கின்ற மக்களைக் கொண்ட நாட்டில் மிகவும் சகஜம் என்பதற்கு நமது நாடு நல்லதொரு உதாரணம். ஆனால், நமது அரசியல் சட்டத்தில் மட்டும் அடிப்படைக் கடமைகளில் (Fundamental Duties, Part IV A) ஒன்றாக விஞ்ஞானப்பூர்வ மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று தவறாமல் செதுக்கி வைத்திருக்கிறோம்.
நமது நாட்டில் மெத்தப் படித்த பல மேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் நவக்கிரகம் என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! ஆனால் உண்மை அதுவா? இல்லை - சூரியன் ஒரு நட்சத்திரம்! இப்படி ஓர் அடிப்படை விஷயத்தில் கூட தெளிவில்லாமல் சூரியனை ஒரு கிரகம் என்று நம்புவது மூடநம்பிக்கைதானே?
அதே போல ராகுகால நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமி தன்னைத்தானே சுற்றுவதன் மூலமாக கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.! மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தாவிற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ள கால வித்தியாசம் ஒரு மணி நேரம். அதேபோல் சென்னைக்கும் நீலகிரிக்கும் உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் ராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணிநேர கால வரம்பு -சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்?
இப்படி ஒரு பேதமையான ராகுகால நம்பிக்கையை பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே இந்தக் காலத்திலும் நம்பிக் கொண்டிருந்தால், விஞ்ஞானப்பூர்வக் கண்ணோட்டம் எப்படி வளரும்? பகுத்தறிவுக்குப் பொருந்தாத இத்தகைய அறிவு நாணயக் கேடுகளை நாம் அப்புறப்படுத்தியே ஆக வேண்டும்!
அதேபோல நட்சத்திரங்கள் பற்றி நம்முடைய பஞ்சாங்கங்கள் குறிப்பிடும் செய்தியும் கணிப்பும் அறிவியல்பூர்வமற்ற அப்பட்டமான கேலிக்கூத்துகளே! அம்மாவின் புடவையை மடிக்க முடியாது - அப்பாவின் சில்லறையை எண்ண முடியாது! அது என்ன? என்ற விடுகதைக்கு விடையாக வானத்தையும் நட்சத்திரத்தையும் குறிப்பிடுவார்கள். அதையே இன்றைய விண்ணியற்பியல் விஞ்ஞானம் பொய்யாக்கிவிடும் போலும்! பிரபஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி) என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதில் ஒரு 27 நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு நம்முடைய பிறப்புக்கும் அவைகளுக்கும் ஒரு முடிச்சுப் போடுகிறார்கள் நம் பெரியவர்கள்! மூலம், ஆயில்யம், பூராடம் போன்ற இவர்கள் குறிப்பிடும் நட்சத்திரங்களில் பிறந்த எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள் என்பது நடப்பு உண்மை! உலகம் தட்டையானது என்று தவறாகக் கருதிக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் தமது புறத்தோற்றப் பார்வையில் கண்டறிந்ததே இந்த நட்சத்திரங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது! பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனிடமிருந்து வெளிச்சம் நமக்கு வந்துசேர எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் 8 நிமிடங்கள், அப்படியென்றால் நம்மை அடைய சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் வெளிச்சத்தைத் தரும் பிராக்சிமாசென்டுரி என்ற நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்! இத்தனைக்கும் அந்த நட்சத்திரம்தான் சூரியக் குடும்பத்துக்கு மிகமிக அருகில் இருக்கும் நட்சத்திரம்! இதுபோன்ற விஷய ஞானமோ, நட்சத்திரம் என்பது அடிப்படையில் ஒரு நெருப்புக்கோளம் என்ற தெளிவோ இல்லாமல், நமது முன்னோர்கள், அவர்களுக்கு வாய்த்த அரைகுறையான அறிவைக் கொண்டு கற்பிதம் செய்து வைத்ததை இந்த விஞ்ஞான யுகத்தில் நாம் ஏற்பது எப்படிச் சரியாகும்? இதைத்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அண்மையில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் - விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும், கிரகங்களும் மனித வாழ்க்கையில் எந்தவித ராசிபலனையும் ஏற்படுத்துவது கிடையாது என்று!
அதனோடு மட்டுமல்ல - இத்தகைய அஞ்ஞானத்தின்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து சாதகத்தைவிட அதிக அளவில் பாதகத்தையே தருகின்றன என்பதுதான் கவலைக்குரிய விஷயம்! இதற்கு ஒரே தீர்வு மக்களுடைய பாமரத்தனத்தைப் போக்குவது ஒன்றுதான்! பாமரத்தனம் என்பது படிக்காதவர்களிடம் மட்டுமல்ல படித்தவர் களிடமும் இருக்கிறது. படிப்புக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கல்விமுறைதான் நமது நாட்டில் நடப்பிலுள்ளது!
நமக்குச் சவுகரியமாகிப்போன இற்றை நாள் விஞ்ஞான உண்மைகள் - எத்தனையோ விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் உறங்காத இரவுகளைச் செலவழித்து, தம் வாழ்வின் வசந்தத்தையே ஈகம் செய்து கண்டறிந்தவைகள் என்ற உண்மை பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, டைனோசர்கள் 26 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றி - 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாக (Mass Extinction) அழிந்து போயின என்ற விஞ்ஞான உண்மையை எப்படிக் கண்டறிந்தார்கள் என்று பார்ப்போம்!
விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றில் உள்ள இரிடியம் என்ற தனிமம் பூமியின் மேலோட்டில் எங்கும் பரவி இருக்கிறது என்ற உண்மையும் - அதன் காலம் கரிம - காரீய அய்சோடோப்புகளைக் கொண்டு ஆய்ந்து (Carbon Lead Isotope Dating) 6 1/2 கோடி ஆண்டுகள் என்று கண்டறியப்பட்ட உண்மையும் - அந்த விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் பெரிய அளவில் பூமி மீது மோதியதால் ஒட்டு மொத்தமாக அழிந்து போன டைனோசர்களின் எலும்புக் கூடுகளின் காலம் அதுவே என்ற உண்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன! விண்ணியற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மாந்தவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சிதான் இந்த அபாரக் கண்டுபிடிப்பு!
அதேபோல் - நாம் வாழும் இந்த பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகளாகின்றன - முதல் உயிரினம் பாசி (சைனோபைட்டா போன்றது) தோன்றி 360 கோடி ஆண்டுகளாகின்றன! நீர் வாழ்வன - நில நீர் வாழ்வன - ஊர்வன - பறப்பன -பாலூட்டிகள் என்று பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்தன! ஒரு கோடி ஆண்டுகளுக்குமுன் வால்குரங்குகள் - 50 லட்சம் ஆண்டுகளுக்குமுன் கொரில்லாக்கள் - 25 லட்சம் ஆண்டுகளுக்குமுன் சிம்பன்சிகள் - 20 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ஓமோ ஹெபிலிஸ் - 17 1/2 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ஓமோ எரக்டஸ் என்ற ஆதி மனிதன் - அதற்குப் பின்னால் சரியாக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஓமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நமது மனிதஇனம் - இப்படி உலக வாழ் உயிரினங்களின் தோற்றமும், வளர்ச்சியும், வரலாறும் விஞ்ஞானத்தின் இடையறாத முயற்சியால்தான் - இன்று நாம் அறிவதற்குச் சாத்தியமானது!
ஆண், பெண் செக்ஸ் செல்களால்தான் புதிய உயிரினம் உருவாக முடியும் என்பதை மாற்றி - உடல் செல்களைக் கொண்டே(Somatic Cells) குளோனிங் (Cloning) முறையில் உயிர்களை இனவிருத்தி செய்துள்ளார்கள் - நமது உயிரியல் மரபணுத்துறை (Genetics) விஞ்ஞானிகள்! அப்படி உருவான முதல் உயிரியான டோலி என்ற ஆடு 7 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து அண்மையில் இறந்து போனது. அதே முறையில் மாடுகளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள், மனிதர்களைக்கூட அந்த குளோனிங் முறையில் உருவாக்கிவிடுவார்கள்! ஒளி நகல் (Xerox) முறையைப்போல மனிதர்களை உருவாக்க எத்தனித்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த முயற்சிக்குத் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதே போல, விண்வெளித் துறையில் (Astronomy) நமது விஞ்ஞானம் எட்டியுள்ள வேகம் கற்பனைக்கும் எட்டாதது. ஆதியும் அந்தமும் இல்லாதது போன்ற பிரபஞ்சத்தின் எல்லையையும் நமது விஞ்ஞானிகள் கணித்துவிட்டார்கள். அது சுமா 750 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் என்று! ஒரு ஒளி ஆண்டு என்பது நொடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகம் செல்லும் வெளிச்சம் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்தால் அடையும் தூரம் (அதுவும் சுமார் 10 லட்சம் கோடி கி.மீ.). இதிலிருந்து பிரபஞ்சத்தின் எல்லையை ஊகிக்கலாம் - சுமார் 75 கோடி கோடி கோடி கி.மீ. தூரம் என்று! இந்தப் பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான பேரண்டங்கள் (Universe) - ஒவ்வொரு பேரண்டத்திலும் லட்சக்கணக்கான கேலக்சிகள் (Galaxy) - அதில் ஒரு கேலக்சிதான் நமது சூரியக் குடும்பத்தை உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் (Milky Way Galaxy) - இந்தப் பால்வளி மண்டலத்தின் ஒரு ஓரமாக உள்ள சூரியனுக்கும், பால்வெளி மண்டலத்தின் மய்யப் பகுதிக்கும் உள்ள தூரம் சுமார் 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் - இப்படி நம்மைப் பிரமிக்க வைக்கும் விண்ணியல் உண்மைகள், கடுமையான முயற்சியின் பாற்பட்ட விஞ்ஞான முறையில் கண்டறியப்பட்டவைதான்!
இப்படி _ உயிரியல் மரபணுத்துறை மற்றும் விண்ணியல் துறை இதனோடு சேர்ந்து மருத்துவத்துறை, கணினித்துறை இன்ன பிற துறைகளிலும் நாம் எட்டியுள்ள விஞ்ஞான வளர்ச்சி எதிர்காலத்தில், ஆயிரம் - பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்! இந்தப் பிரபஞ்சத்தில், பூமியில் வாழும் மனிதகுலத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை!
பறவையைக் கண்டான் - விமானம் படைத்தான்!
எதிரொலி கேட்டான் - வானொலி படைத்தான்!
எதனைக் கண்டான் - மதங்களைப் படைத்தான்?
என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் - அறியாமை இருளகற்றி அறிவு வெளிச்சம் ஏற்றட்டும்!
எதிரொலி கேட்டான் - வானொலி படைத்தான்!
எதனைக் கண்டான் - மதங்களைப் படைத்தான்?
என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் - அறியாமை இருளகற்றி அறிவு வெளிச்சம் ஏற்றட்டும்!
நமது நாட்டிலுள்ள ஊடகங்கள் - தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், பத்திரிகை, எதுவானாலும் சரி - இன்னும் எவ்வளவு காலம் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அஞ்ஞான அபத்தங்களை அனுமதிக்கப் போகிறோம்?
நமது மனித குலத்தின் இன்றைய தேவை - மதமல்ல - மனிதம்! அஞ்ஞானமல்ல - விஞ்ஞானம்! அதுமட்டுமல்ல - விஞ்ஞானப்பூர்வ மனோபாவம்!
No comments:
Post a Comment