Friday, March 9, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: தி.மு.க.வுக்கு திராவிடர் கழகம் ஆதரவு


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கே திராவிடர் கழகத்தின் ஆதரவு என்று திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்துக்கோ நடைபெறும் இடைத் தேர்தல்கள் முடிவு பெரும்பாலும் ஆளும் கட்சிகளை பதவி இறக்கம் செய்துவிடுவதில்லை; மாறாக, ஆட்சி நடத்தும் கட்சிக்கு மக்களின் உணர்வுகள், வாக்காளர்கள் எப்படி தற்போது உள்ளார்கள் என்று காட்டும் அரசியல் அளக்கும் கருவியாகவே பயன்படும்.

இடைத்தேர்தல் ஓர் உரைகல்!

கடந்த சுமார் 10 மாதங்களாக பதவியில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் பற்றிய உரைகல்லாக இந்த இடைத் தேர்தல் பயன்படக் கூடும். நியாயமாக பயன்பட வேண்டும்.

நீதிமன்றங்களின் கண்டனங்கள்

உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் போன்றவைகளால் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள் விமர்சனங்கள் இப்பொழுது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதற்குச் சான்றுகளாகும். முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே தேவையின்றி சமச்சீர்க் கல்வியை ரத்து செய்ய முயன்று, மாணவர்களின் படிப்பினை பல மாதங்கள் வீணடித்தது; தேர்வு நேரத்தில் தொடர்ந்துள்ள தொடர் மின் வெட்டுகள் 12ஆம் வகுப்புப் போன்ற இறுதித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் கல்வியில் மண்ணைப் போட்டதுபோல் ஆகிவிட்டது என்ற பெற்றோர் - மாணவர் குமுறல்கள் வெளிப்படையாகிவிட்டன.

அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் இடமாற்றம்

அதுபோலவே ஆசியாவின் ஒப்பற்ற நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை  வேண்டுமென்றே இடமாற்றம் செய்ய முன்வந்து, நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்திற்குப் பின்னரும் பிடிவாதம் காட்டும் போக்கு; சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து மிகவும் பெரிய அளவில் வசதியாகக் கட்டப்பட்ட தமிழக புதிய சட்டசபைக் கட்டடத்தைப் பூட்டியே வைத்திருப்பதும், கேட்டால் நூலகம், சட்டமன்றக் கட்டிடம் ஆகியவைகளை மருத்துவமனைகளாக மாற்றுவோம் என்று அரசு வறட்டு வாதத்தை முன் வைத்து - நடைமுறை சாத்தியமற்றதைச் செய்ய நினைக்கிறது. இதுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினையாகி விட்டது!

13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பதா?

13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களைத் தவறாக தி.மு.க.வினர் என்பதுபோல கற்பனையாகக் கருதி, அக்குடும்பங்களின் வயிற்றில் அடித்து, அவர்கள் வீடுகளின் அடுப்புகளில் பூனைகள் தூங்கும் நிலையை ஏற்படுத்திய மனிதாபிமானமற்ற கொடுமை; நீதிமன்றங்கள் தீர்ப்பு கொடுத்த பிறகும், அதனை மதிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைச் சந்திக்கும் அரசின் அவல நிலை! கொலை, கொள்ளை, பொய் வழக்குகள் என்று சட்டம், ஒழுங்கு படும்பாட்டைக் கேட்கவே வேண்டாம். தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாள் என்ற தமிழ் அறிஞர்கள், தமிழின உணர்வாளர்கள் கருத்தை ஏற்று கலைஞர் ஆட்சியில் கொணர்ந்த சட்டத்தை ரத்து செய்து மறுபடியும் பழைய பார்ப்பனீய புராண ஆபாச புது வருஷத்தையே கொண்டாடச் சட்டம் செய்தது.

காணாமற்போன செம்மொழி நூலகம்

செம்மொழி நூலகம் காணாமற் போய் விட்டது! செம்மொழி பூங்காவின் நிலையும் அப்படியே! மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடனேயே சரி செய்வோம் என்று கூறியவர்கள், இப்போது பன்மடங்கு அதிகமாக்கி, நாடே மின்வெட்டால் குமுறுகின்றது! தொழிற்சாலைகள் மூடுவிழாக்களுக்கு ஆளாகி வேலையில்லாத நிலைக்குப் பல்லாயிரவர் தள்ளப்பட்டுள்ளனர்.

பேருந்துக் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, பல சுமைகளை அப்பாவி மக்கள்மீது சுமத்திட்ட நிலை இப்படி எத்தனையோ அவலங்களும், மக்களின் துயரங்களும் இவ்வாட்சியில்!

ஆளும் கட்சியை மறுபரிசீலனை செய்ய வைக்க...

இவைபற்றி ஆட்சியினரை மறுபரிசீலனை, சுயபரிசோதனை செய்ய வைக்க ஒரு அரிய வாய்ப்பே ஒரு இடைத் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு எதிரான வாக்களிப்பு - இடிப்பாரையாக இருக்க உதவும்.

தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில் செய்தவைகளையே குறி வைத்து அதனை அழித்தொழித்து, திராவிட இனவுனர்வினை அறவே அகற்றிடும் வகையில் நடப்பதால் ஆளுங் கட்சியின் போக்கை எதிர்க்கும் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதும் ஆளுங் கட்சிக்கென உள்ள பல அதிகாரம் உள்ளிட்ட மேலும் பலவாய்ப்புகளும் அதற்குப் பலமானது என்பது உலகறிந்த ரகசியங்களே!

தி.மு.க.வுக்கே நமது ஆதரவு!

அரசியல் ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் திராவிட இன உணர்வு அடிப்படையிலும் போட்டியிடும் முக்கிய கட்சியாக தி.மு.க. களத்தில் இறங்கியுள்ள, நிலையில்  தி.மு.க.வை அதன் வேட்பாளரை திராவிடர் கழகம் ஆதரிக்கும்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு சோதனை என்ற போதிலும், மக்கள் உணர்வுகளைப் பெரிதும் பிரதிபலிக்க ஓரளவு பயன்படக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...