இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படவேண்டும்!
திராவிட இயக்க நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் கருத்துரை
சென்னை, பிப். 29 - வீரமணி நம்மை ஏற்க வேண்டும். கலைஞர் வீரமணியை ஏற்க வேண்டும். இந்த வகையில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக நாம் செயல்பட வேண்டும் என்றார் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்.
சென்னை அண்ணாஅறிவாலயம், கலைஞர் அரங்கில் திராவிட இயக்க 100 ஆம் ஆண்டு தொடக்க விழா (27.2.2012) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முன்னிலையேற்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
இந்த இனிய விழாவில் நான் பேசுகின்ற இந்த நேரத்தில், என் மனம் நன்னன் அவர்கள் சொன் னதைப் போல மகிழ்ச்சி நிரம்பி இருக்கின்றது. நான் ஒரு வெற்றி வீரனாக உங்கள் முன்னால் நிற் கின்றேன். நான் காண விரும்பிய காட்சியை உங்களிடத்தில் காணுகின்றேன். வருங்காலத் தமிழகத்திற்கு வாழ்வு உண்டு என்பதை எடுத்துக் காட்ட தளபதியைப் பார்க்கிறேன்(பலத்த கை தட்டல்) இங்கே வருகின்ற போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நான் பொன்னாடை அணிவித்தது வழக் கம் போல் அணிவிப்பது அல்ல; திராவிட இயக்கத்தினுடைய வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமாக இருந்து நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற ஒரு நல்ல நேரம் வருகின்ற போது அந்த நூற்றாண்டை முதல் ஆண்டை கொண்டாடுகின்ற முறையில்-துவக்கி வைக்கின்ற முறையில் அந்த நிகழ்ச்சியை இங்கே உருவாக்கி இருக்கின்ற நம்முடைய கலைஞர் அவர்களுக்கு உங்கள் சார்பாக, அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்ற முறை யில் நான் பொன்னாடை அணிவித்தேன்.
மு.க.ஸ்டாலினை `தளபதி என அமெரிக்காவே ஒப்புக் கொண்டுள்ளது
அடுத்து நம்முடைய தளபதிக்கு நான் பொன்னாடை அணிவித்தது - அவர் தளபதி என்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டிருக்கின்றது (பலத்த கைதட்டல்-ஆரவாரம்) அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத் தில் உள்ள ஆளுநர் அவருக்கு இந்த விருதை வழங்கி இந்த விருது வழங்கியது மூலமாக உலகத்தில் பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக விளங்கிய பெருமக்கள் பெற்ற அந்த பெருமையைத் தமிழகத்தில் தமிழனுக்கு தொண்டு செய்து தமிழ் சமுதாயத்தை வளர்க்க வேண்டு மென்பதற்காக தொண்டாற்றி அந்த தொண்டு மூலமாக அரிய பெருமையை பெற்றி ருப்பதற்காக நான் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களை உளமார வாழ்த்து கிறேன். 60 ஆண்டு தொடங்குகின்ற ஸ்டாலின் இன்னும் ஒரு 60 ஆண்டு வாழ வேண்டுமென்று நான் வாழ்த்து கிறேன். (பலத்த கைதட்டல்) எனக்கு அப்படி வாழ்த்து வதற்கு உரிமை இருக்கிறது. அவர் 60! நான் 90!
கலைஞரின் வளர்ச்சி
தமிழகத்தில் என்னுடைய வளர்ச்சி எப்படி அமைந்ததோ கலைஞருடைய வளர்ச்சி அப்படி அல்ல. போராட்டம் கஷ்டங்கள் நஷ்டங்கள் பல தொல்லைகள் இரவெல்லாம் கண் விழிப்பு - பகலெல்லாம் துன்பம் இதற்கிடையில் பதவி - பல பொறுப்பினால் பல கவலை அவைகளுக் கிடையில் உழலுபவர் கலைஞர். நான் இந்த கஷ்டங்கலெல்லாம் இல்லாத எதிலேயும் தீவிரமாக செயல்படுகின்ற ஒரு பழக்கமில்லாத ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உறுதி எவராலும் கலைக்க முடியாத அளவிற்கு என்னுடைய நண்பர்களும் என்னை மாற்ற முடியாது. என்னை விட வளர்ந்த பெரியவர்களும் என்னை மாற்ற முடியாது. நான் மதிக்கிறவர்களாலும் என்னை மாற்ற முடியாது. நான் நினைத்ததுதான் நான் செய்வேன் என்ற அளவில் பல்கலைகழக மாணவனாக இருந்த காலத்தில் இருந்து இந்த நாள் வரையில் என் எண்ணம்போல் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்த கலைஞருக்கும் நன்றி! என் எண்ணத்தை நான் பேசுவதற்கு மிகப் பெரிய மேடை அமைத்துத் தந்தார்களே அதற்காக நன்றி! பேரறிஞர் அண்ணா இப்படிப் பட்ட வாழ்க்கை எனக்கு கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு உருவாக்கினாரே அதற்காக நன்றி! இந்த உணர்வை அடிப்படை யிலே கருதுவதற்கு காரணமாக இருந்த என் தந்தை என்று மதிக்கக் கூடிய தந்தை பெரியா ருக்கு நன்றி! அந்த இயக்கத்தில் எனக்கு தொடர்பு ஏற்படுத்தித் தந்த எனது தந்தை, என்னுடைய குடும்பமே அந்த உணர்விலே ஈடுபட்ட காரணத்தால் என்னை நான் வளர்த்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றேன். அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன். முகமூடி போட்டுக் கொள்ள வேண்டிய
தினமலரின் குறும்பு
திராவிட இயக்கத்தைப் பற்றி இன்றைக்குக் கூட தினமலர் ஏட்டிலே இதோ முகமூடி போட்டுக் கொண்டு திராவிடம் என்று சொல்வதாக அந்தப் பத்திரிகையிலே ஒருவர் எழுதி நாம் இந்த விழாவை கொண்டாடுவதையே அவர்கள் கண்டித்திருக் கிறார்கள். நம்முடைய சுப.வீரபாண்டியன் அவர்கள், இது நம்முடைய வெற்றிக்கு அடை யாளம் என்று சொன்னார்கள். நான் அவர்களுக் கும் சொல்கிறேன், நாங்கள் முகமூடி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம்முடைய முகம் திராவிட முகம். அதைக் காட்டுவதற் குத்தான் நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களுக்குப் போடப்பட்டிருக்கும் முகமூடி சூத்திரர் என்பது. எங்களுக்குப் போடப்பட்டிருக்கிற முகமூடி இந்துக்கள் என்பது. எங்களுக்குப் போடப் பட்ட முகமூடி வைதீகத்தை ஏற்பவர்கள் என்பது. எங்க ளுக்குப் போடப்பட்ட முகமூடி சமஸ் கிருதம்தான் தேவபாஷை, தமிழ் நீசபாஷை என்பதை ஒத்துக் கொண்டோம் என்பது. இன்றைக்கு அவைகளை யெல்லாம் கிழித்தெறிந்து அந்த அக்கிரமங்கள் முறைகேடுகள் இழிவுகள் துடைக்கப் பட்டு இன்றைக்கு நான் திராவிடன் உலகத்தில் திராவிட இனத்திற்கு இணையாக இன்னொரு இனம் இருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. திராவிடர்கள் என்று பெருமை பேசுகின்ற மொழி தான் எனது தாய் மொழி அது தான் தமிழ் மொழி!
அந்தத் தமிழ் என் தாய்மொழி,அந்தத் தமிழ் மொழி வழி வந்தவன் நான், என்னை வீழ்த்த எவனும் இல்லை -எவரையும் நான் ஏற்கத்தயாராக இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு உணர்வு என்னை உயர்ந்தவனாக ஆக்கிக் கொள்கின்ற ஒரு உணர்வு, என்னை நானே மதிக்கின்ற அந்த உணர்வு , என்னை வீழ்த்துவதற்கு இடமில்லாத அந்த உணர்வு, எவனுக்கும் தாழத் தேவை இல்லை என்ற அந்த மனப்பான்மை பெறுகின்ற அந்த உணர்வு. அந்த உணர்வு தான் திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் இயற்கையானது!
திராவிட இயக்கம் என்பது; நம்முடைய நன்னன் அவர்கள் பேசுகின்ற போது சொன்னார்களே, அது இயற்கை என்றார்கள். இயற்கையாகத் தோன்றக் கூடிய உணர்வு. இது ஒன்றும் இன்னொருவர் இட்டுக் கட்டிச் சொன்ன காரணத்தினால் வந்த உணர்வு அல்ல. அரசியலுக்காகப் பிறந்த உணர்வு அல்ல. அமைச்சர் பதவிக்காக ஏற்பட்ட உணர்வு அல்ல. அந்த உணர்வு மனிதனாகப் பிறந்தோம் என்பதை உணர்ந்த காரணத்தால் நமக்கு ஏற்பட்ட உணர்வு. அந்த உணர்வை தமிழ் நாட்டில் பல அறிஞர்கள், தொல் காப்பியர் காலம் முதலாக திருவள்ளு வர் காலம் முதலாக, கபிலர் காலம் முதலாக, பல்வேறு அறிஞர்கள்-சமயத்துறை சார்ந்த அறிஞர்களாக இருந் தால் அந்த அறிஞர்கள் உட்பட, திருமூலர் உட்பட அந்த உணர்வை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அதை இழந்து கொண்டே இருந்தார்கள் தமிழ் மக்கள். அதை மறக்க வேண்டிய நிலைமைக்கு ஆளா னார்கள். அந்த அடிப்படைகள் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய அந்த உணர்வை இழந்து விட்டார்கள். தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு, என்றெல்லாம் நாமக்கல்லார் பாடினாலும்கூட, அந்த குணம் மறந்து, பெருமையும் இழந்து மனித உரிமையையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் நாமெல்லாம் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப் பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக, தடுக்கப் பட்டவர்களாக, தடுமாறுகிறவர்களாக, நிலையற்ற வர்களாக, மண்ணில் விழுந்து கிடப்பவர்களாக ஆக்கப்பட்டோம். அந்த நிலையை இன்றைக்கு தந்தை பெரியார் ஊட்டிய உணர்வு, அறிஞர் அண்ணா வளர்த்த அறிவு நீக்கி இருக்கின்றன.
உதாரணத்திற்குக் கேட்கிறேன் -இன்றைக்கு யாராவது எந்த இடத்திலாவது சூத்திராள் என்று சொல்ல முடியுமா? தினமலர் ஆசிரியரையே கேட்கிறேன். நீங்கள் இப்போது யாராவது சூத்திராள் என்று சொல்லி காதிலே கேட்க முடியுமா? நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது சூத்திராள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்வர். பிராமணாள் என்று சொல்லும் போது சாமிகாள் என்பார்கள். நான் படித்த போது நல்ல ஆசிரியர் இருந்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது மிகக் கடமை உள்ள ஆசிரியரை -ஆனால் எப்படிப்பட்ட ஆசிரியர் என்றால், நான் முதல் வகுப்பில் படிக்கின்றபோது பங்காரு-அவர் ஒரு பிராமணர். மூன்றாவது நான்காவது வகுப்பில் ராயர்- அவர் ஒரு பிராமணர். ஐந்தாவது வகுப்பில் சர்மா- அவர் ஒரு பிராமணர். ஆறாவது வகுப்பிலே கீர்த்தி வாச அய்யர்-அவர் அய்யர். ஏழாவது வகுப்பிலே சாமி நாதய்யர். -அவர் அய்யர். எட்டாவது வகுப்பிலே புருஷோத்தம அய்யங்கார்-அவர் அய்யங்கார். ஒன்பதாவது வகுப்பிலே கீர்த்தி வாச அய்யர். பத்தாம் வகுப்பிலே இராஜா ராமய்யர். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிலே ராகவ அய்யங்கார். நான் படித்தேன்- என்னுடைய ஆசிரியர்கள் அத்தனைப் பேரும் பிராமணர்கள். நான் புத்திசாலியாக இருப் பதற்குக் கூட அது ஒரு காரணம். (சிரிப்பு) ஆனால், அவர் களிடத்தில் படித்ததால் புத்திசாலி என்று சொல்கிறேனே தவிர அவர்கள் சொல்லிக் கொடுத்த காரணத்தால் அல்ல. அவர் களிடத்தில் படிக்க நேரிட்ட காரணத்தால் அவர்கள் யார், நான் யார் என்று என்பதை அப்போதே நான் புரிந்து கொண்டேன். அந்த ஆசிரியர்கள் வகுப்பிலே உள்ள பிள்ளைகளை படிக்கச் சொல்கிற போது, யார் யாரை என்னச் சொல்லி படிக்கச் சொல்வார் என்றால் என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்ற மாண வன். பல நேரத்தில் விளையாடி விட்டு வருவானே தவிர படிக்க மாட்டான். அந்த பிராமண மாண வனைப் பார்த்து கண்டிக்கின்ற போது ஏண்டா, நீ, பிராமணனாப் பிறந்து படிக்காம வருகிறாயே படிக்க லேன்னா, நீ நாளைக்கு என்ன செய்வது? உங்க அப்பன் பேரையாவது காப்பாற்று என்பார். என்னுடைய தகப்பனார் ஜவுளிக் கடை வைத்திருந்தார். கதர் கடை! ஏண்டா ராமையா, நீ படிக்கலே, உங்க அப்பா கடை வைத்திருக்கிறார். போய் கடையில் உட்கார்ந்து கொள்வே. அதனாலே நீ படிக்க மாட்டே அப்படித் தானே என்று சொல்வார். என்னுடைய நண்பர் ஒருவர் நாராயணசாமி, வண்டி ஓட்டுநர் ஒருவரின் மகன். அவரைப் பார்க்கிற போது, ஏண்டா நீயெல்லாம் ஏண்டா படிக்க வருகிறாய்? என்பார். ஒரு ஆதி திராவிட மாணவன் -அவனைத் திட்டுகிற போது உங்களையெல் லாம் பள்ளிக் கூடத்துக்குள் விட்டுட்டு எப்படிடா நாங்கள் பாடம் நடத்துவது? என்பார். ஆசிரியர்கள் கீர்த்தி வாச அய்யர்-நல்லவர்தான். இரவு ஏழு மணிக்குக் கூட வீட்டில் விளக்கேற்றி வைத்து நான் போனால் கூட பாடம் சொல்லித் தருவார். ஆனால், அதேநேரத்தில் அவரது மனம், பிராமணன் படிக்கக் கூடியவன். இவர் கள் பிராமணரல்லாதார் இவர்கள் படிக்க கூடாதவர்கள் -இவன் தாழ்த்தப் பட்டவன் உள்ளேயே வந்திருக்கக் கூடாது. அந்த மனப்பான்மை அவருக்குள்ளே ஊறிப் போய் இருந்தது. அதைப் பார்த்த போது தான் நான் முதலிலே புரிந்துகொள்ளா விட்டா லும் எட்டாவது, பத்தாவது படிக்கின்ற போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து பிராமணன் வேறு நாம் வேறு என்ற உணர்வை நான் பெற்றேன்.(பலத்த கைதட்டல்) கலைஞருக்குத் தெரியும். மயிலாடு துறையில் தை அல்லது ஐப்பசி மாதத்தில் குடமுழுக்கு நடைபெறும் என்று கருது கிறேன். அப்போது இந்த விழா நடக்கும். ஏராளமான கூட்டம் வரும். கோவிலில் இருந்து தனித் தனி சாமிகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். ஒரு பத்து இருபது சாமி வரும். அப்படி வருகின்ற போது அங்கே வருகின்ற பிராமணர் எல்லாம் ஊர்வலம் வருகின்ற போது சாமி இருக்கின்ற இடத்திலே பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பார்கள். நம்மாள் எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு எட்டு பேர், பத்துபேர் தூக்கிக் கொண்டு வருவார்கள். விழாவிற்கு வருகிறவர்கள் எல்லாம் அங்கே இருக்கின்ற பிராமணர்களை பார்த்ததும் சாமி, சாமி ன்னு சொல்லி காலில் விழுவார் கள். ஒரு அய்யரைப் பார்த்ததும் சாமின்னு காலில் விழுவார்கள். நிமிர்வதற்குள் இன்னொரு அய்யர் வருவார்,அவர் காலில் விழுவார்கள். நான் அப்படி வந்து காலில் விழுபவர்களைப் பார்த்து, அப்போது எனக்கு 15 வயது இருக்கும். ``எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால் ``சாமியைப் பார்க்க என்பார்கள். நான், ``பெரிய கோவில் சாமியா? சின்னக் கோவில் சாமியா என்று கேட்டால், ``அந்த சாமி இல்லைங்க, நான் வக்கீல் சாமியை பார்க்க வந்தேன் என்பார்கள். ஒருவர் அடிபட்டுப் போய் டாக்டரைப் பார்க்க வருகிறார். அவரைக் கேட்டால், ``நான் டாக்டர் சாமியைப் பார்க்க வந்தேன் என்பார்.
பிராமண சாமி
தாசில்தார் ஆபிஸில் இருக்கற ஒரு கிளார்க்கை பார்க்க வந்தவர், ``கிளார்க் சாமியைப் பார்க்க வந்தேன் என்பார். வக்கீல் சாமி, கிளார்க் சாமி, டாக்டர் சாமி, இன்ஜினியர் சாமி - இவர்களெல்லாம் அய்யர். அவர்கள் மனசுல அய்யர்னா சாமி - சாமின்னா அய்யர். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய நாட்டை ஆண்டவர் எல்லாம் பிராமண ஆண்ட வராப் போச்சு. நமக்கு மட்டும் சர்வாதிகாரம் இருந்தா பஞ்சமர்களை ஆண்டவனாக ஆக்கி, மற்றவர்களை யெல்லாம் தொழ வைக்க வேண்டும். பிராமண சாமியைப் பார்த்துப் பார்த்து நம் மனதிலே பிராமணன்தான் மேல் சாதி. அவர்களுடைய மனதிலே நாமெல்லாம் ஒத்துக் கொண்டது நம்ம பூதேவர். நம்மை எல்லோரும் மதித்துத் தீர வேண்டும். யாராவது வணங்கவில்லை என்றால், ஏண்டா வணங்க வில்லை என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் இருந்தார் கள். அதெல்லாம் இன்றைக்கு மாறி, அந்தக் காலத்திலே சாதாரணமாக சூத்திராள் என்று சொல்வது வழக்கம். சூத்திராள் கடைக்குப் போக மாட்டேன் என்பார்கள். சீர் கேடான ஆட்சி நடக்கிறது -
மக்களுக்குப் பல வகைகளிலும் பாதிப்பு
இப்போது, எனக்கு முன்னால் பேசிய திராவிடர் கழகத்தின் தலைவரும், அவருக்கு முன்னால் பேசிய நன்னன் அவர்களும் எடுத்துச் சொன்னதைப் போல, ஒரு காலத்திலே நமக்கு தடை போட்டிருந்தார்கள். இன்றைக்கு நாம் அவர்களுக்குத் தடை போட வில்லை. ஆனால், அப்படி தடை போடக் கூடிய இடம் - உரிமை அவர்களுக்குத் தரக் கூடாது. இங்கே கூட பதவியைக் கருதி நாம் அரசியலுக்கு வரவே கூடாது. ஆனால், அதிகாரத்தை மற்றவர்களிடத்திலே விடக் கூடாது. பதவிக்காக கலைஞர் இல்லை. ஆனால், அந்த அதிகாரம் இன்றைக்கு வேறு ஒருவரிடத்தில் இருப்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? நாடு குட்டிச் சுவராகிறது. ஆட்சி சீர்கேடு அடைகிறது. இன்னும் பல்வேறு வகையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்கள் இன்னும் வேலையில் சேர்க்கப்படவில்லை. அவர் களை வேலை யில் சேர்க்கும் படி உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்தாகி விட் டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்தாகிவிட்டது. இன்னும் அவர்களை வேலையில் சேர்க்கவில்லை. இன்னும் எப்படிப் பட்ட நிலை? நீதிமன்ற ஆணைக்கே கட்டுப் படாத ஒரு அரசு - நினைத்ததைச் செய்யலாம் என்ற மனப்பான்மை கொண்ட ஒரு அரசு? மக்களை மதிக்காத ஒரு அரசு? ஏழைகளுக்கு வாழ்வளிக்காத ஒரு அரசு? அப்படிப் பட்ட போக்கை மாற்ற வேண்டுமானால், ஆசிரியர் வீரமணி சொன்னதில் எனக்கு மாறுபாடு இல்லை. நிம்மதியாக நிமிர்ந்து நின்று வாதாடக்கூடிய இடம் - பதவிகளை எதிர்பார்க்காத இடம். ஆனால், அந்தப் பதவிகளை எதிரிகளிடத்திலே விட்டுவிட்டு, அதி காரத்தை அவர்களிடத்திலே கொடுத்து விட்டு, நீதிக்கும் நியாயத்திற்கும் வாதாடிக் கொண் டிருக்க முடியாத காரணத்தால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடத்திலே உயர்ந்த மதிப்பு, நீதிபதி மோகன் சொன்னதைப் போல, ஒரு நூற்றாண்டில் சாதிக்க வேண்டியதை ஒரு முப்பது ஆண்டுகாலத்திலே சாதித்தவர் தந்தை பெரியார். அந்த முப்பது ஆண்டுகாலம் சுய மரியாதை இயக்கம் தமிழகத்திலே நடைபோட்ட காரணத்தால், ஒரு சகாப்தம் - பெரியார் அவர்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு உணர்வு நம்மிடத் திலே இருந்தாலும் கூட, அதை மேலும் மேலும் மக்களுக்குப் பயன்படுத்துவதற்காகத்தான், இந்த அரசியலை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
திராவிட உணர்வை மேலும் வளர்ப்பது பற்றி சிந்திக்க வேண்டும்
ஒரு வகையிலே சொல்லப் போனால், இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற நாம், நன்னன் அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல, மேலும் மேலும் ஆழமாக இந்த உணர்வை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை நிச்சயமாக எண்ணிப் பார்க்கத் தான் வேண்டும். டாக்டர் நாயரைப் பற்றி சொன்னார்கள். டாக்டர் நாயர் பேசிய பேச்சிலேதான் சொன்னார், அவரு டைய சொந்த கிராமம். அந்த கிராமத்திற்குப் போகிற போதெல்லாம் அங்கே இருக்கின்ற நம்பூதிரிகள் டி.எம்.நாயரை - மாதவனைப் பார்த்து, ``ஏண்டா மாதவா? சங்கரன் வந்திருக்கிறானா? என்று கேட்பார்கள். யார் இந்த சங்கரன் என்றால் - உயர்நீதிமன்ற நீதிபதி. ஐஸ்டிஸ் சங்கரன் நாயர் கூட ஒரு காலத்தில் காங்கிரசை ஆதரித்தவர்தான். அவர் கல்கத்தாவிலே ஒரு மகாநாட்டுக் குப் போகும் போது, அந்த மகாநாட்டிலே பிராமண நண் பரும், அவரும் மகாநாட்டிலே கலந்து கொண்டு இடை வேளையில் சாப்பிடப் போகிறார்கள். அந்த நேரத்தில் உடன் வந்த அந்த பிராமண நண்பர் சொல்கிறார், ``என்ன நாயர், நாங்கள் பிராமணர் பந்தியில் சாப்பிடப் போகிறோம். நீ உங்கள் பந்திக்குப் போ என்று சொல்லிவிட்டு சாப்பிடப் போகிறார்கள். இது ஒன்று போதாதா? காங்கிரஸ் கட்சியில் - தேசிய இயக்கத்தில் உள்ள நாயரைப் பார்த்து அவரும் ஒரு அரசியல் தலைவர் என்று தெரிந்திருந்தும்கூட, பிராமணர், ``நாங்கள் எங்கள் பந்திக்குப் போகிறோம், நீங்கள் உங்கள் பந்திக்குப் போங்கள் என்று சொன் னால், அந்த வேறுபாடு தான் திராவிட இயக்கம் வளர்வதற்குக் காரணம் - தோன்றுவதற்கே காரணம். இன்னும் ஒரு படி மேலே சொன்னால், தியாகராயருக்கும் அப்படி ஒரு அனுபவம். அவரும் காங்கிரசுக்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து மகாநாடு சென்னையிலே நடப்பதற்கு துணையாக இருந்தவர். அவர், 1917 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பாக தன்னி டத்திலே வந்து மயிலாப்பூர் கோவில் கும்பாபி ஷேகத்திற்காக நிதி கேட்கிறார். நிதி கேட் பவர்கள் நீங்கள் தாராளமாக நிதி கொடுக்க வேண்டும் - ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அந்தக் காலத்திலே தியாகராயர் 5,000 கொடுக்கிறார் என்று சொன்னால் - இப்போது அந்தத் தொகை ஐம்பது லட்சம். அந்த ஐயாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் பெரிய கும்பாபிஷேகம் நடத்தி னார்கள்.
தியாகராயக்கு அவமானம்!
தியாகராயர் செட்டியார் பக்திமான். அதனாலே அவர் கும்பாபிஷேகத்திற்குப் போகிறார். போய் அங்கே நின்று கொண்டு, கும்பாபிஷேகத்தைப் பார்க்கிறார். அப்போது அவருக்கு மேலே போக வேண்டும் என்று தோன்றுகிறது. படியேறி மேலே செல்கிறார். மேலே இருக்கிற இவருடைய ஏஜெண்ட் - இவரிடம் வேலை பார்க்கிற அய்யர் சொல்கிறார், ``செட்டியார்வாள் மேலே வராதீர்கள்? என்கிறார். ``ஏம்பா மேலே வரக்கூடாது? என்று அய்யாயிரம் ரூபாய் கொடுத்த தியாகராயர் கேட்கிறார். அதற்கு அந்த அய்யர் சொல்கிறார், ``நீங்க சூத்திராள். மேலே வந்தால் தீட்டு பட்டு விடும் எல்லோருக்கும். நீங்கள் வரக்கூடாது? என்று சொன்னார். அதைக் கேட்ட பிறகுதான் தியாகராயர் செட்டியாருக்கு ``ஓஹோ! சூத்திராள் என்பதை நாம்தான் ஒழிக்க வேண்டுமே தவிர, வேறு யாரும் ஒழிக்க மாட்டான். அந்த நீதிக்கட்சியின் முதல் அறிக்கை - தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை - அதை கொடுத்தவர் தியாகராயர்.
நாயர் - தியாகராயர் கருத்து வேறுபாட்டை டாக்டர் நடேசனாரின் பங்கு
அதை அகில உலகத்தில் செல்வாக்குப் பெற வைத்தவர் டாக்டர் டி.எம்.நாயர். தியாகராயருக்கு இந்த உணர்வு வருவதற்கு நாயரும் தியாகராயரும் சேர்ந்து பணியாற்றுவதற்கும் மிக அரும்பாடு பட்டவர் - டாக்டர் நடேசனார் அவர்கள். டாக்டர் நடேசன் பாடுபட்டு, தியாகராயரையும், நாயரையும் இணைத்தார். ஏன் என்றால், தியாகராயர் 40 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி மன்ற உறுப்பினர். அப் போது மாநகராட்சி மன்றம் அல்ல, நகராட்சிதான். அவர் நகராட்சி மன்ற உறுப்பினர். கமிஷனர் என்று பெயர். அப்போது முதன் முதலில் பிரசிடென்ட் ஆஃப் முனிசிபாலிட்டி அவர் தான். நாயரும் திருவல்லிக்கேணி பகுதியிலே தேர்ந் தெடுக்கப்பட்டு, அந்த நகராட்சியிலே உறுப்பினராக இருந்தவர். அப்படி இருக்கின்றபோது, பார்த்தசாரதி கோயில் குளத்தினுடைய தூர் வாருவதற்காக - சுத்தப் படுத்துவதற்காக நகராட்சி மன்றத்தின் சார்பாக நிதி ஒதுக்கி அந்தக் கடமையைச் செய்ய வேண்டும் என்று தியாகராயர் சொன்னார். நாயர் எதிர்த்தார். நாயர் ஏன் எதிர்த்தார் என்றால், ஒரு கோவிலுக்கு நீங்கள் செய்தீர்கள் என்றால், மற்ற கோவிலுக்கு யார் செய்வார்கள்? எல்லா கோவிலுக்கும் செய்ய முடியாது? ஆகவே இதையும் செய்யக் கூடாது என்பது அவரது வாதம். கோவிலுக்கு கிடைக்கிற நிதியில் நீங்கள் தாராளமாகச் செய்யலாமே என்றார். ஆனால், தியாகராயருக்கு பக்தி அதிகம். அவர் சொன்னார், நாம் சொல்லிவிட்டோம், அதை செய்து விட வேண்டும் என்று சொன்னார். அதை நாயர் ஒத்துக் கொள்ளவில்லை. இப்படி ஏற்பட்ட அந்தத் தகராறு - கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட மாறுபாடு - இரண்டு பேரும் இரண்டுஅணியிலே இருந்தார்கள். அப்போதுதான் டாக்டர் நடேசன் - அவர் ஏற்படுத்திய ``மெட்ராஸ் அசோசியேஷன் என்கின்ற பெயரால் சென்னையில் ஒரு சங்கம். அந்த சங்கத்தின் பெயரால் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கெல்லாம் தங்கு வதற்கு ஒரு இடம். அவர்கள் அங்கே தங்கி படித்தார்கள். ஏனென்றால் ஹாஸ்டல் கிடையாது. பிராமணர்களு டைய சிற்றுண்டி கடையிலோ - உணவு விடுதிகளிலோ சாப்பாடு போடமாட்டார்கள். அனு மதிக்க மாட்டார் கள். ஒரு 60 வருடத்திற்கு முன்னால் கூட திருவல்லிக் கேணியில் தந்தை பெரியார் ஒரு ஹோட்டல் முன்பாக போராட்டம் நடத்துகின்ற அளவிற்கு - பிராமணர் களுக்கு மட்டும் என்று போர்டு இருக்கும். இன்னொன்று இன்ன இடம் பிராமணர்களுக்கு, மற்றொரு இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கு என்று இருக்கும். பிராமணர் அல்லாதார் சாப்பிட்டால், அந்த இலையை அவர்களே எடுக்க வேண்டும். அப்படியெல் லாம் இருந்தது. அந்தக் காலகட்டத்திலே, நடேசன் அவர் கள், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் இலவசமாக தங்கி படிக்க வழிசெய்தார். அப்படி நடத்திய அந்த சங்கத்திலே ஆர்.கே. சண்முகம் அப்போது ஒரு மாணவர். அவர் முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர். அவருக்கு ஒரு வரவேற்பு. அவர் அந்த சங்கத்திலே போய் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டிலேதான் அந்த சங்கத்தினுடைய பெயரை - சுப.வீரபாண்டியன் சொன்னதைப் போல, ``திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றினர். அதுதான் ``நீதிக்கட்சிக்கு ஒரு ஊன்றுகோல்.
சமுதாய நல்வாழ்விற்கு தொடர்ந்து போராடிய இயக்கம்!
டாக்டர் நடேசன் அந்த அடிப்படையை உருவாக்கா விட்டால், பிராமணர் அல்லாதார் படிப்பதற்கு வழி தேடினால், இடம் தேடினால், கல்லூரியிலே சேர்வதற்கு இடம் தேடியபோதுதான், பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த காரணத்தினால், அவர் எல்லா கல்லூரி யிலும் ஒரு குழுவை நியமித்து அதன் மூலமாகத் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தார். அப்பொழுது பனகல் அரசர் காலத்தில்தான் படிப்பதற்கு வழி கிடைத்தது. அப்போது தமிழ் படித்திருந்தால் கல்லூரிகளில் இடம் கிடையாது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவக் கல்லூரியிலே இடம். அது ஆயுர்வேதம் மருத்துவக் கல்லூரி அல்ல. அலோபதி மருத்துவம். பனகல் அரசர் சமஸ்கிருதத்தில் பண்டிதர். இருந்தாலும் இது முறைகேடு என்பதற்காக நீக்கினார். அப்படி தொடர்ந்து சமூக அடிப்படை யில், சமுதாயத்தினுடைய நல்வாழ்விற்காக தொடர்ந்து போராடிய இயக்கம் இந்த இயக்கம். ஒரு கருத்தை நான் சொல்ல விரும்புகின்றேன். சுயமரியாதை நமக்கு இருக்குமானால், நாம் நிமிர்ந்து நிற்போம். யாருக்கும் தலை தாழ வேண்டியது அவசியமில்லை. சுயமரியாதையை நாம் காப் பாற்றிக்கொள்கிறபோது, நம்மை சேர்ந்தவர் களுடைய சுயமரியாதையும் காப்பாற்றும். எதிரி யினுடைய சுயமரியாதையைக் கூட காப்பாற்றும். ஆனால், சுயமரியாதை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். என்னிடத்திலே சுயமரியாதை உணர்வு இருக்கிறது என்றால், என்னை விட தாழ்ந்தவன் எவனும் இல்லை. என்னை விட உயர்ந்தவனாக யாரையும் நான் ஏற்கத் தேவையில்லை. என்னிடத் திலே பகுத்தறிவு இருக்குமானால், என்னை சேர்ந்த வர்களை நான் மூட நம்பிக்கையிலே ஆழ்த்தாமல் இருக்க முடியும். `இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறி
திராவிட இயக்கம் வளர்த்தவர் அண்ணா
திராவிட இயக்கம் வளர்த்தவர் அண்ணா
என்னிடத்திலே பகுத்தறிவு அடிப்படையில் சிந்தனை வளருமானால், சமுதாயத்தினுடைய ஒட்டுமொத்த நலனை கருதக்கூடிய பக்குவம் என்னிடத்திலே வளரும். இவையெல்லாம் பெரியார் நமக்குப் போட்ட - நமக்குத் தந்த வாழ்வு. இந்த அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்கள், அதிகம் விளக்கத் தேவையில்லை. அவர் சொன்னது போல, இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படக்கூடிய அந்த மனப்பான்மையை அறிஞர் அண்ணா உருவாக்கினார். ஏதோ அரசியலில் இருக்கின்ற காரணத்தால் அடிப்படையை நாம் இழந்து விடக் கூடாது. அடிப்படை உணர்வு வீரமணிக்கு இருக்கின்ற காரணத்தால் அரசியலை அவமதித்து விடக் கூடாது. வீரமணி நம்மை ஏற்க வேண்டும். கலைஞர் வீரமணியை ஏற்க வேண்டும். இதுதான் அறிஞர் அண்ணா விரும்பி யது. அது நம்முடைய சமுதாயத்தினுடைய ஒட்டுமொத்த மனப்பான்மை. இந்த இனத்திற்கு அந்த உணர்வு வந்து விடுமானால், திராவிட இனத்தை யாரும் வீழ்த்த முடியாது. நீங்கள் கேள்விப்பட்டிருப் பீர்கள் கோவில் மாடு என்று. கோவில் மாடு என்றால் கோவிலுக்கு தானம் தரப்பட்ட மாடு. அந்த கோவில் பசுமாடு எங்கே வேண்டு மானாலும் மேயும். யார் வீட்டுத் தோட்டத்திலேயும் மேயும். இன்னும் சொல்லப் போனால் ஒரு அரிசி, தவிடு வைத்திருக்கிற கடையில் மேய்ந்து விட்டால்கூட அந்த மாட்டை அடிக்க மாட்டார்கள். ஏன் என்றால் அது கோயில்மாடு. ``திராவிடம் என்ற முழக்கத்தைதொடர்ந்து எழுப்பி வருகிறார் கலைஞர்!
இன்னொன்று அடிமாடு. அடி படுவதற்காகவே அந்த மாடு. அது ஈரோட்டிலே இருந்தாலும் சரி, காஞ்சி புரத்திலே இருந்தாலும் சரி, சென்னையிலே இருந்தாலும் சரி, அந்த மாடு கேரளாவிற்கு கொண்டு போய் கறி ஆக்கப் படும். அண்மையிலே கூட ஒரு கட்டுரையிலே எழுதி யிருந்தார்கள். கரூருக்கு பக்கத்திலே இருக்கின்ற மாட்டுச் சந்தையிலே இருந்து லட்சக்கணக்கான மாடு களைஆந்திராவிற்கு வாங்கிக் கொண்டு போகிறார்கள். கரூர் சந்தையைப் போல வேறு பல சந்தைகளிலிருந்து கேரளாவிற்கு அடிமாட்டை வாங்கிக் கொண்டு போகிறார்கள். அடிமாடு அங்கே போகிறது, கறவை மாடு இங்கே போகிறது, தமிழ்நாட்டில் எந்த மாடும் வாழ முடியவில்லை. அதுபோல எண்ணிப் பார்த்தால் தமிழ்நாட்டிலே கோவில் மாடாக பிராமணர்களும், அடிமாடுகளாக தமிழர்களும் வாழ்கிற ஒரு நிலை இருந்தது. இப்போது அடிமாடுகளெல்லாம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அடி மாடு அடிமாடாக இருக்கத் தயாராக இல்லை. அடி மாடு நியாயம் கேட் கிறது, நீதி கேட்கிறது, திராவிடம் என்று முழங்குகிறது. அந்த முழக்கத்தை கலைஞர் இந்த நாட்டில் தொடர்ந்து நடத்துகிறார். தொடர்ந்து எங்களுக்குப் பின்னர் இன்னும் ஒரு நூற்றாண்டு திராவிட இன உணர்வை காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற தளபதியை அடையாளமாக வைத்து (பலத்த கைதட்டல் - ஆரவாரம்) - நான் சொல்கிற வார்த்தையை வைத்து அவர் ஆளாக என்னை ஆக்கி விடாதீர்கள். எனக்கு ஆள் தேவை. எனக்காக - கலைஞருக்காக - நாட்டுக்காக, இளைஞர்களுக்கு வழி காட்டுவதற்காக - ஒரு ஊக்கம் தருவதற்காக - கொள்கையை விடாமல் காப்பாற்றுவதற்காக - எங்களை எவனும் அழிக்க முடியாது, எங்களை அழிக்கப் பிறந்த வன் எவனும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக நான் தம்பியினுடைய பெயரைச் சொன்னேன். அந்த உணர்வோடு இந்த நாட்டைக் காக்க - மொழியைக் காக்க - நம்முடைய பண்பாட்டைக் காக்க, இனப் பெருமை யைக் காக்க, வரலாற்றைக் காக்க, நீங்களெல்லாம் முன்வாருங்கள் என்று வேண்டி விடைபெறுகிறேன்.
-இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மு.க. ஸ்டாலின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
- கிராமங்களில் ஓட்டு கேட்க அ.தி.மு.க.வினர் தயக்கம்
- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது
- கலைஞர், மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்
- கூடங்குளம் அணுமின்நிலைய பணிகளை அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் மின்வெட்டு இருந்திருக்காது: கலைஞர்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- திராவிட இயக்கத்தால் நாம் பெற்ற உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் கிளம்பியிருக்கின்றன
- மு.க.ஸ்டாலினுக்கு கென்டக்கி கர்னல் விருது
- திராவிட இயக்க 100- ஆம் ஆண்டு விழா:
- சங்கரன்கோவிலில் மார்ச் 15இல் கலைஞர் பிரச்சாரம்
- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் 20,000 பேருக்கு ரூ.1கோடி நலத்திட்ட உதவிகள் தி.மு.க. தலைவர் கலைஞர் வழங்குகிறார்
No comments:
Post a Comment