1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்தத் தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிகத் தாங்க முடியாததாகவும் இருப்பதால், அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும் மீத்துப் பெருக்கி வைப்பதற்கு இலாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.
2. பொது ஜனத் தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.
3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. விவசாயிகளுக்கு இன்றுள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும் படியாகவும். ஓர் அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா சாதி - மதங்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடு செய்வதுடன், இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்துத் தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிருவாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். சாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ, உயர்வு - தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாள்வதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும், மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்த வேண்டும்.
8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்பரேட்டிவ் இலாக்கா ஆகிவைகள் இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிருவாகம் செய்ய வசதிகள் செய்து, தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிருவாகம் செய்ய வேண்டும்.
9. விவகாரங்களையும், சட்டச் சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவுவரி விதிக்கப்பட வேண்டும்.
10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து, அச்சட்டங்களினால் அமலில் கொண்டுவரக் கூடியவைகளைச் சட்டசபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளைக் கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
(தந்தை பெரியார், 29, 30.9.1934-இல் நடந்த சென்னை தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டிற்கு அனுப்பிய வேலைத்திட்டம் - பகுத்தறிவு - 23.9.1934)
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்தியாவில் கடவுள் நம்பிக்கை! மிர்ரர் ஏட்டில் வெளிவந்த கடிதம்!
- நமது முதல் பிரதமர் நேருவும் - சோதிடமும்
- பார்ப்பனார் பற்றி காந்தியார்
- வராத தேவன்
- பீகார் பூகம்பம் - காந்தியார்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment