திருச்செங்குன்றூர் - திருவாங்கூர் பகுதி கொல்லம் துறைமுக நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கல் தூரத்தில் உள்ள ஊர். கேரள மாநிலத்தில் உள்ள இந்த ஊர் தற்போது செங்கண்ணூர் என்று கூறி வருகின்றனர். பழைய பெயர் திருச்செங்குன்றூர் - புதிய பெயர் செங்கண்ணூர்.
விறல்மிண்ட நாயனார்: அந்தத் திருச்செங்குன்றூரில் உழவுத் தொழில் செய்யும் வேளாண் மரபில் விறல்மிண்டர் என்பவர் இருந்தார். இவர் மேனியில் விபூதியும் - கையில் கண்டிகையும் பூண்டு, நதியும் - மதியும் - பாம்பும் புனைந்த சிவனாரின் பக்தனாய் அலைந்தார். சிவனின் மீது எவ்வளவுப் பற்று இருந்ததோ - அதை விட சிவனடியார்கள் மீது இவர் அளவு கடந்த மதிப்பும் - பேரன்பும் கொண்டிருந்தார். அடியார்களைப் பற்றி யாராவது தரக் குறைவாகப் பேசிடக் கேட்டால் அக்கணமே பாய்ந்து அவர்களை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். பெயருக்கு ஏற்றாற் போல் விறல் - வீரம் உடையவராயும் - அடியவராயும் திகழ்ந்தார்.
இப்படி சிவத்தலங்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள சிவத்தொண்டர்களைத் தொழுவதும் - திருச்சடையானை சேவிப்பதும் தொழிலாய் இருந்த விறல்மிண்ட நாயனார் சேர நாட்டிலிருந்து திருவாரூர் தியாகேசப் பெருமான் கோவிலுக்கு வந்தார். கோவில் மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களையெல்லாம் பார்த்து காலில் விழுந்து வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய் திகழ்ந்தார். அந்த நேரத்தில் அங்கே கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் அங்கே குழுமியிருந்த சிவனடியார்களைக் கண்டுகொள்ளாமல் வேறு பக்கமாக ஒதுங்கியபடியே, உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார்.
அடியார்களை மதிக்காதவன்: இறைவனை வழிபடுவது எளிது, அடியாரை வழிபடுவது அரிது அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும் அன்பும் இருக்க வேண்டும். அத்தன்மை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இல்லையே முதலில் வணங்கத் தக்க தேவாதி தேவர்களும் தொழத்தக்க சிவனடியார்கள் இங்கு இருப்பதை மறந்து விட்டு, அங்கு இறைவனைத் தரிசிக்கப் போகிறாரே சுந்தரர் அதனால் என்ன பயன் கிடைக்கும்?
வன்தொண்டனாகிய சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களுக்குப் புறம்பானவன்தான் அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கக் கடவுளும் அடியார்களுக்குப் புறம்பானவனே என்று விறல்மிண்ட நாயனார் கோவில் வளாகத்திலேயே சிவனடியார்கள் முன்னிலையில் சுந்தரரைத் திட்டித் தீர்த்தார்.
வெகுமக்கள் விரோதம்: பிறகு தியாகேசப் பெருமானை வணங்கி நின்ற சுந்தரர் அடியார்களை மதிக்கும் பணியை எனக்கருள்வாயாக என்று இறைவனிடம் வேண்டினாராம். இதுவரையில் உயர் ஜாதித் திமிரிலேயே சுந்தரர் தன்னை மேலானவராகக் கருதிச் செயல்பட்டிருக்கிறார் இப்படிப்பட்ட சுந்தரனுக்கு இறைவன் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்து கொடுத்தாராம் - அதிலிருந்து திருத்தொண்டத் தொகை எழுதி முடித்தார் என்று கூறப்படுகிறது. தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் என்று பார்ப்பனரை மெச்சிப் பாடிய பிறகுதான் நம்மவர்களைப் பாட கடவுளும் - சுந்தரனும் முயன்றிருக்கிறார்கள்! வெகுமக்கள் விரோதம் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அடியவர்களைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது!
பொது நீதி: வாயில் நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது. பிறவியில் பேதம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது! அதைப் போலத்தான் பார்ப்பான் நம்மை பாராட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது என்று நாம் உணர வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
- தடயம் - புலவர் மா.வீரஅரசு
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பீகார் பூகம்பம் - காந்தியார்
- பெரியார் தந்த சமதர்ம வேலைத் திட்டம்
- பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்
- மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!
- பெரியார் பேசுகிறார்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment