Wednesday, February 22, 2012

தனியார் கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வா?


கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கின்மீது சென்னை உயர்நீதிமன்றம் சரியானதோர் தீர்ப்பினை வழங்கி யுள்ளது.
பணிக்குத் தேர்வு செய்ய வேலை வாய்ப்பு அலுவலகங்கள், தேர்வாணையங்கள் இருக்கும்போது, அவற்றைப் புறந்தள்ளும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் கல்லூரிகளுக்குச் சென்று தேர்வு செய்வது சட்டப்படியும், நியாயப்படியும் தவறே!
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய தாக்கீதுக்கு சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களும், மத்திய அரசும் பதில் அளிக் காததைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முகத் தேர்வு நடத்தி உரியவர்களைத் தேர்ந்தெடுப்பதால் மற்ற மற்ற கல்வி நிறுவனங்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன.
கல்லூரிகளைத் தரம் பிரிக்க இந்தப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிமையளித்தவர்கள் யார்? அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு செயல்படுவது சட்டப்படி சரியானதுதானா?
இதில் இன்னொரு முக்கியமானதோர் பிரச்சினை யும் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தம் செய்யும்போது இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் கல்லூரிகளிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்யும்போது இட ஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிப் பதில்லை. இது அப்பட்டமான சட்டமீறல் நடவடிக்கை யாகும்.
இட ஒதுக்கீட்டை எந்த வழியிலாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்கிற உயர்ஜாதி சக்திகள் - இதுபோன்ற குறுக்கு வழிகள் மூலம் இட ஒதுக்கீடுக்குச் சமாதி கட்டுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் இதுவரை பணிய மர்த்தம் செய்ததில் எந்த அளவுக்குச் சமூகநீதி பின்பற்றப்பட்டுள்ளது என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் - தன்னிச்சையாக இத்தகு தேர்வுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!
பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு உருவாக்கம் நிலுவையில் உள்ளது. தாழ்த்தப்பட் டோருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கெனவே இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் அந்த நிலைக்குழு தலையிடுவது அவசியமாகும்.
இட ஒதுக்கீட்டுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டரீதியாக செய்து வைத்திருந்தாலும், அவற்றிலும் சந்து பொந்துகளை உண்டாக்கி, ஏமாற்றி விடுகிறார்கள் என்றால், அத்தகைய சக்திகள் எவ்வளவு சாமர்த்தியமானவை என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டவேண்டியது நமது கடமையாகும். தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மண்டல் குழு அறிக்கை வழி செய்துள்ளது.
அரசுத் துறை, பொதுத் துறை அருகி, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் வளர்ந்து வரும் ஒரு சூழலில், இட ஒதுக்கீடு இந்நிறுவனங்களில் செயல்படுத்தப்படாவிட்டால், சமூகநீதி என்பதற்கே அர்த்தம் இல்லாமற் போய்விடும்.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு ஏழரை விழுக்காடு. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு என்பது பெயரளவிற்குத்தான் இருக்கிறதே தவிர, நடை முறையில் அந்த அளவு இடங்கள் அளிக்கப்பட வில்லை. பாதிக்குப் பாதிகூட சட்டப்படியான அளவுக்கு இடங்கள் அளிக்கப்படுவதில்லை.
இது மிக முக்கியமான பிரச்சினையாகும். மத்திய அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரியதை சட்டப்படி செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


.
 2

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...