உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் கடந்த 8, 9 ஆகிய நாள்களில் ஆற்றிய உரை காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட கடமையாகும்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின், ஏதோ திராவிடர் இயக்கம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்ற நினைப்பில், பார்ப்பன சக்திகள் பூணூலை வேகமாக முறுக்கி விட்டுக் கொண்டு, திராவிட இயக்கத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் புழுதி வாரித் தூற்றும் எழுத்துச் சண்டியர்த்தனத்தில் இறங்கியுள்ளன.
சிலர் நூல்களை எழுதப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் கூறும் அவதூறுகளை திராவிடர் கழகம், அதன் தலைவர், தமிழர்களின் போர் ஆயுதமான விடுதலை இவற்றை எதிர்கொண்டு, இந்தத் தீய சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்து வருகின்றனர்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தமிழர்களால் மதிக்கப்படும் தலைவர்களை தரக் குறைவான சொற்களால் அர்ச்சனை நடத்துகின்றனர். இதே பாணியில் பதிலடி கொடுப்பதற்குத் திறமையோ, துணிவோ தேவையில்லை. பந்தை அடிக்க முடியாதவர்கள்தான் காலை வாருவார்கள்.
தந்தை பெரியார் உடலால் மறைந்தாலும், உணர்வால் தமிழின மக்களின் ஊனோடு, உதிரத்தோடு, உள்ளத்தோடு பிரிக்க முடியாத தத்துவமாக, யதார்த்த வாழ்க்கை முறையாக, சிந்தனையின் வழிகாட்டும் ஒளியாக இருப்பதால், இந் நிலை பார்ப்பனர்களை ஆத்திரப்படுத்தச் செய்கிறது.
ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்கிற முறை யில்தான் அவர்களின் எழுத்துக்களும் அமைந்துள்ளன.
திருக்குறள் என்பது மனுதர்மத்திலிருந்து கிளைத்தது - இந்து நூல் என்று சொல்லும் அளவுக்கு பார்ப்பனர்கள் நிதானம் இழந்து போய்விட்டனர்.
தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்றால் அது பொய்; நாரதனுக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த சமஸ்கிருதத்தில் பெயர்களை உடைய சித்திரையை முதல் நாளாகக் கொண்ட வருடம் தான் சரியானது என்று ஆரியத் தாண்டவம் ஆடி, இன்றைய ஆட்சியைப் பயன் படுத்திக் கொண்டு கலைஞர் ஆட்சியில் தமிழ்ப் பண்பாட்டு மலர்ச்சி உணர்வில் கொண்டு வரப்பட்ட தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்துச் செய்யச் செய்து, அக்கிரகாரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பால் பாயசம் பருகி ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடம் விற்று, வயிறு பிழைக்கும் தினமலர் ஏடு எழுதுகிறது. தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட்டலம் கிடைக்குமா? என்று.
பெங்களூருவில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மீது கல்லெறியாமல் இருந்தால் சரி என்று துக்ளக் எழுதுகிறது - தூண்டுகிறது.
இவற்றிற்குப் பிறகும் தமிழர்கள் பார்ப்பனர் களைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால், அதனை விட வெட்கக் கேடும், சுயமரியாதை யற்ற தன்மையும் வேறு உண்டா?
தந்தை பெரியார் மூட்டிய பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வும், தன்மான உணர்வும், பகுத்தறிவுக் கொள்கையும்தான் தமிழர்களைத் தலை நிமிரச் செய்திருக்கிறது. கல்வி கற்கச் செய்திருக்கிறது; உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்திருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம்!
ஆரியத்திற்கு மீண்டும் ஒரு பொற்காலம் பூத்ததாகப் பார்ப்பனர்கள் கருதுகின்றனர்.
தமிழர்களே, கரணம் தப்பினால் மரணம்! மரணம்!! என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!
- என்று தமிழர் தலைவர் கொடுத்த குர லுக்கு மேலும் கூர்மையும், உத்வேகமும் தேவைப் படுகிறது - மறவாதீர்!
1 comment:
பார்பானியமே திராவிடமாக ஆட்சி பீடத்தில் இருக்கும்போது தமிழ் நாட்டு தமிழர்கள் பாவம் என்ன செய்வார்கள். பார்பனியத்தை ஆட்சி பீடத்தில் அமர்ததியவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
Post a Comment