Thursday, January 19, 2012

ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் யார் ?


ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் யார் ?
ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் கேப்டன் குக் என்றுதான் இன்றும் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
அவரைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக நாம் இப்போது பார்ப்போம். முதலில் அவர் ஒரு கேப்டனே அல்ல.  லியூடனன்ட் குக் என்னும் அவர் என்டியோவர் என்ற கப்பலில் முதன் முதலாகக் கப்பல் பயணம் செய்தார். (1768-71). ஆஸ்திரேலியாக கண்டத்தை முதன் முதலாக பார்த்த அய்ரோப்பியரும் அவர் அல்லர். வில்லியம் டேம்பியர் என்ற டச்சுக்காரர், குக் ஆஸ்திரேலியாவுக்குச்  சென்றதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே, 1697 இல்  அங்குகால் பதித்த முதல் அய்ரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார். குதித்துக் குதித்துச் செல்லும் ஒரு பெரிய விலங்கை முதன் முதலாகக் கண்டதாக அவர் பதிவு செய்துள்ளார்.
டேம்பியர் (1652-1715) ஒரு கடற்பயணி, மாலுமி, புதிய நாடுகளைக் கண்டறிய விழைந்தவர், வரைபட வரைவாளர், அறிவியல் நோக்கர், கடற்கொள்ளைக்காரர் என்று பல பெயர்களால் அழைக்கத்தக்கவர் ஆவார். ராபின்சன் குருசோவிற்கு முன் மாதிரியாக விளங்கிய அலெக்சாண்டர் செல்கிரிக் என்பவர் அவரது பயணக் குழுவில் ஒருவராக இருந்தவர். அவர் பூமியை மூன்று முறை சுற்றிவந்தார். முதன் முதலாக காற்று வரைபடத்தைக் கண்டுபிடித்தவரும் அவர்தான். ஆக்ஸ்ஃபர்ட் ஆங்கில அகராதியில் அவர் 1000 முறைகளுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளார். அவகாடோ   (Avocado) என்னும் கடினமான கரும்பச்சை தோலும்,  இளம்பச்சை சதைப் பற்றும் ஒரு பெரிய கல் அல்லது குழியை உட்புறத்தில் கொண்டிருக்கும் ஒரு வெப்ப நாடுகளில் விளையும் பழம், பார்பக்யு (Barbecue) என்ற திறந்த வெளியில் சமைக்க உதவும் இரும்பு அடுப்பு, ப்ரெட்ஃப்ரூட் (Breadfruit) என்ற சமைத்தபின் ரொட்டியைப் போன்ற சுவை கொண்ட தடித்த தோல்கொண்ட வெப்ப நாடுகளில் விளையும் பழம், முந்திரி (Cashew), சோப்ஸ்டிக்ஸ்  (Chopsticks) என்னும் உணவை எடுத்து  உண்ண பயன்படுத்தும் இரண்டு குச்சிகள், குடியிருப்பு என்னும் பொருள் படும் செட்டில்மெண்ட் (Settlement)   என்ற சொல், முட்டை, சோளமாவு கொண்டு மெக்சிகோ நாட்டினர் தயாரிக்கும் டார்டில்லா (Tortilla) என்ற பெயர் கொண்ட  ஓர் உணவு ஆகிய சொற்களை ஆங்கில மொழிக்கு அவர் அறிமுகப் படுத்தியுள்ளார். இந்த கண்டத்திற்கு முதன் முதலாக வந்த அயல் நாட்டினர் சீனர்கள்தான் என்பதற்கு ஆதரவாக அண்மைக்  காலத்தில் ஒரு பலத்த பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. மிங் வம்சத்து கடற்படைத்தலைவரான ஜெங் ஹே (Zeng He) (1371-1435) 1432 இல் டார்வின் நகருக்கு  அருகில் தரையிறங்கியதற்காக தொல்பொருள் ஆதாரங்கள் இருக்கின்றன.
ஜெங் ஹே உலகம் முழுவதையும் கண்டுபிடித்தார் என்ற ஏற்றுக் கொள்ள முடியாத கோட்பாட்டை பெரும் விற்பனையான தனது சீனர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்த ஆண்டு (The Year the Chinese  Discovered America)  என்ற நூலில் கேவின் மென்சிஸ் (Gavin Menzies) இட்டுக் கட்டி எழுதியுள்ளார். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மாலுமி (அவர் ஒரு முஸ்லிமும், திருநங்கையும் ஆவார்) ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையை அடைந்திருக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவே தோன்றுகிறது.
அய்ரோப்பியர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாக பதிவு செய்த காலத்திற்கு முன்பாகவே, உள்நாட்டு கடல் வெள்ளரி மீது பெரு விருப்பம் கொண்டு சீனர் களுடன் வியாபாரம் செய்து வந்த இந்தோனேசிய மீனவர்கள் ஆஸ்திரேலியா வுக்குச் சென்றுள்ளனர். இவர்களிடமிருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் வாழ்ந்த யோலிங்கு  (Yolngu) போன்ற பழங்குடி மக்கள் கடற்பயணம் செய்யவும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொண்டனர். அத்துடன் சில சொற்களைப் பேசவும், சில கருவிகளைக் கையாளவும், சாராயம், போன்ற கெட்ட பழக்கங்களையும் கூட அவர்கள் கற்றுக் கொண்டனர்.
உண்மையில் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர்கள் 50,000 ஆண்டு களுக்கு முன்பு அங்கு குடியேறிய பழங்குடி மக்களேயாவர். 2000 தலைமுறைகளாக அவர்கள் அக்கண்டத்தில் வசித்து வந்துள்ளனர். அய்ரோப்பிய மக்கள் ஆஸ்திரேலியாவில் வெறும் எட்டு தலைமுறைகள் மட்டுமே வாழ்ந்துள்ளனர். வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைக் காண்பதற்கு இக்காலமே போதுமானதாக இருந்தது. 30,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுப் பகுதி பசுமை நிறைந்த தாவரங்களாலும், நீர் நிறைந்த ஏரிகளாலும், பனிபடர்ந்த மலைகளாலும் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...