பொங்கல் எனும்
சொல்லில்
பூரிப்பு வீணை
இசைக்கும்
புத்தரிசி எனும்
பதத்தில்
புதுமைத் தென்றல்
வீசும்.
வெல்லம் எனும்
கட்டியில்
இனிப்புக் கவிதை
பிறக்கும்
கரும்பு எனும்
கங்குலில்
களிப்பு மழை
பொழியும்
இஞ்சி எனும்
சீரில்
எழுச்சிக்காரம்
வெடிக்கும்
கனிகள் என்ற
தோப்பில்
சுவையாம் தேன்
சொரியும்
வாழை எனும்
தாரில்
தொண்டின் வனப்பு
புரியும்
மாவிலை எனும்
தோரணத்தில்
மான முரசம்
முழங்கும்
சந்தனம் எனும்
மலரில்
முத்தமிழ் முல்லை
மணக்கும்
மாடுகள் எனும்
சலங்கையில்
செல்வ ஒலிகள்
கேட்கும்
மழலை மூத்தோர்
மக்கள்
மத்தாப்புச் சிரிப்பு
குதிக்கும்
தையெனும்
ஒற்றையில்
தகத்தகாய தமிழ்
ஒலிக்கும்
புத்தாண்டு எனும்
சூரியனில்
சித்திரைக் குப்பை
எரியும்
பண்பாட்டுத் தளத்தில்
பெரியாரின்
எண்ண மலர்கள்
பூக்கும்
பொங்கட்டும்
பொங்கல்
பூக்கட்டும் தமிழின
உணர்வு!
- மயிலாடன்
No comments:
Post a Comment