பதிமூன்று நாள்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியான, பல பதிப்பகத்தாரின் 60 லட்சம் புத்தகங்களை, பார்வையாளர்களாக வந்த 8 லட்சம் புத்தக ஆர்வலர்களில் பெரும்பாலோர் வாங்கிச் சென்று வரலாறு படைத் துள்ளனர்!
386 பதிப்பகங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. பல கோடி ரூபாய் மதிப் பில் நூல்கள் விற்பனை நடந்துள்ளது என்பது மகிழத்தக்க செய்தியாகும்.
புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பெருக வேண்டும்; அதன் மூலம் விசாலப் பார்வையும், விரிவான சிந்தனைகளும் வளரும்.
இப்போது பல மாநகரங்களிலும்கூட இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு, பொது மக்களால் வரவேற்கப்படும் திருப்பம் ஏற்படுகிறது!
மக்கள், மூடநம்பிக்கையை வளர்க்கும் நூல்களைப் படிப்பதைவிட, அறிவியல், புதுஉலகம், பகுத்தறிவை சாணை தீட்ட வைக்கும் பல நூல்களை - வாங்குகிறார் களோ இல்லையோ பார்க்கும் வாய்ப்பா வது இந்த புத்தகக் கடைகளுக்குக் கிடைப்பது ஒரு நல்ல திருப்பம்!
இதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. ஒரு நூற்றாண்டுக்குமுன் எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை ஏழு - வெறும் 7 விழுக்காட்டிற்கும் குறைவு!
1900ஆம் ஆண்டு துவக்கத்தில் தமிழர்களில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களுடைய எண் ணிக்கை எவ்வளவு தெரியுமா ஒரே ஒரு சதவிகிதம்தான்!
இன்றோ அது 65 விழுக்காட்டிற்கும் அதிகம்; மகளிரிலும் இது பெருகியுள்ளது!
படிப்பு - கல்வி - எழுத்தறிவு பெருகி னால்தானே புத்தகம் எழுதவும், அதைப் படிக்கவும் வாசக நேயர்களும் கிடைப் பார்கள்!
முன்பெல்லாம் திருவிழாக் காலங் களில் ஒரே ஒரு புத்தகக் கடை மற்ற பொருள்களுடன் கடைகளோடு கடை யாக இருக்கும்.
அல்லி அரசாணி மாலை, பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை, பஞ்சாங் கம், இராமாயணம், பாரதம் போன்ற சில புத்தகங்களை அங்கு வைத்து விற் பார்கள்!
அதில்கூட புராணப் புத்தகங்களை கிராமங்களிலிருந்து வரும் பெரியவர்கள் வாங்கி வீட்டில் வைத்துக் கும்பிட்டால் புண்ணியம் கிடைக்கும் என்று பக்திக் காக வாங்கி, பிறகு பரணையில் வைத்து செல்லரிக்க விட்டதும் உண்டு!
மஞ்சள் தடவி, வைப்பது, அரிய ஓலைச் சுவடிகளை 18ஆம் பேறு என்று ஆடிப் பெருக்கில் ஆற்றில் விட்டு நமது பழம் பெரும் இலக்கிய நூல்களைத் தொலைத் ததும் உண்டு!
இன்றோ பக்திக்காக அல்ல புத்திக் காக, புத்தக உலகம் நோக்கி பயணிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்!
வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறை மிக முக்கியம். அறிவு கூர்மைப் படுத்தப்பட இந்த சாணை இயந்திரங்கள் தேவை! மிகவும் தேவை!
தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், நீதிக்கட்சி திராவிடர் இயக்க ஆட்சிகள் ஆகிய முயற்சிகளால் கல்வி நீரோடை நாடெல்லாம் பாயும்படிச் செய்த தின் சிறப்பான நல்விளைவு - விளைச்சல் இது!
கல்விப் பெருக்கும் கலைப் பெருக்கும் மேவுமாயின்,பள்ளத்தில் வீழ்ந்த மனிதரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வர் என்றார் பாரதியார்!
பள்ளத்தில் வீழ்ந்த மனிதனைக் கை தூக்கி விட்ட பின்பு எழுந்தவர்களை வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள பாதுகாப்பு அரண்தான் இந்தப் புத்தக உலகமும் அதன் உறுபயனும்!
நல்ல இல்லங்களில் நாம் பயன்படுத்தும் பொருள்களே பிறகு குப்பைகளாகவும், கூளங்களாகவும் ஆவதில்லையா?
அதுபோல புத்தகங்களிலும் குப்பை களும், கூளங்களும் உண்டு!
மூலையில் தள்ளி வாரிக் கொட்ட வேண்டிய அந்தக் குப்பைகளைத் தங்கள் மூளையில், பத்திரமாக வைத்து மூளையைக் குப்பைத் தொட்டிகளாக் காமல், வளம் கொழிக்கும் வயலாகவே வைத்திருக்கும் வகையில் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் புத்தகங்களை!
வாழ்நாள் சிறிது!
வளர்கலை பெரிது!!
வளர்கலை பெரிது!!
என்பதை நாளும் நமக்கு உணர்த்தும் புத்தகம் தான் நம்மை புத் - அகத்திற்கு - புதிய இல்லத்திற்குப் பதிவுகள் மூலம் - ஊருணிபோல, ஊற்றெடுத்துப் பெருக்க வைத்து உலகத்தார் முன் உயர வைக்க உறுதுணையாகும் கருவிகள் என்பதை மறவாமல், படிப்பதை, பிறகு அதனைச் செரிப்பதை அதன்பின் அதையே வாழ்விய லாகக் கொண்டு வளருவீர்!
No comments:
Post a Comment