Wednesday, January 18, 2012

பண்பாட்டு விழா

சென்னையில் திராவிடர் கழகம் - தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழர்களின் புத்தாண்டுத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழா தை முதல் மூன்று நாட்கள் நெஞ்சை விட்டு நீங்கா நேர்த்தியான விழாவாகும். இரு நாள் விழா முடிந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் விழா முத்தாய்ப்பாக நிறைவு பெற இருக்கிறது.

தமிழ்மொழி உலகின் மூத்த மொழி, தமிழர்களும் உலகின் மூத்த குடிகள் என்ற வரலாற்றுப் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள். இடைக் காலத்தில் ஆரிய நுழைவால், அதன் பண்பாட்டுப் படையெடுப்பால் நிலை குலைந்தது - திரிபுக்கும் ஆளானது.

ஆரியம் விதைத்த நச்சு விதையால் ஜாதி என்னும் நச்சு மரங்கள் மண்டிய காடாக தமிழ் நிலம் ஆனது.

மொழியில் ஊடுருவல், பண்பாட்டில் ஊடுருவல் என்ற கொடிய நோய்க்கு ஆளாகித் தன்னிலை திரிந்தது.

நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழன் இருந்தான் இல்லை. நான் முதலியார், நான் செட்டியார், நான் வன்னியன், நான் வெள்ளாளன், நான் நாடார், நான் தேவர் என்று சொல்லுவதைப் பெருமையாகக் கொள்ளும் இழி நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் நீண்டநெடிய வரலாற்றில் ஜாதியைப் புறந்தள்ளி, தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற்றது - தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கமாம் திராவிடர் கழகம்.

இதில் குறிப்பாக ஆரியச் சிந்தனை, ஆரிய பண்டிகைகளைப் புறந்தள்ளுதல் என்பவை முக்கிய மாகும். தமிழர் திருநாள் தைப் பொங்கல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, நாடெங்கும் விழாக் கொண்டாட்டம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் அவர்களின் செயல்பாட்டால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது. அதுவும் அண்ணா பெயரையும், திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

தமிழினமே ஒன்று திரண்டு எதிர்ப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். மீண்டும் ஆரிய மனுதர்மம் சவால் விட்டு எழுந்து விட்டது - விளக்கங்கள் அதிகம் தேவையில்லை.

இந்த நிலையில் தான் தமிழர் தலைவர் அவர்கள் தலைநகரில், தலைமை இடத்தில் இந்த மூன்று நாள் விழாவைப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடத்துவதற்கு ஆவன செய்தார்.
தமிழர்களின் தனிப் பெரும் கலை சொத்தான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், பறை யாட்டம், ஒயிலாட்டம் என்ற கலைகள் வெகு கம்பீரமாக, வீறு கொண்ட உணர்வுடன் நடத்தப்பட்டன.

தலைநகர மக்கள் பெரும் அளவில் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டது நல்லதோர் நம்பிக் கையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் கலைகளை எல்லாம் தாழ்ந்த ஜாதிக் காரர்களின் கலைகளாக ஆரியம் தள்ளுபடி செய்துவிட்டது; காரணம் - இந்தக் கலைகளின் நுட்பம் - உடலுழைப்பு என்பதை எந்தப் பார்ப்பனராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பொய்க்கால் குதிரையை ஆடும் ஒரு பார்ப்பானைச் சொல்லுங்கள் பார்க்கலாம். கரகாட்டம் ஆடும் நம் பெண்கள் அதில் என்னென்ன வித்தைகளைக் காட்டுகிறார்கள்? ஒரு பார்ப்பனப் பெண்ணை விரல் விட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தக் கலைகள் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

சங்கமம் நிகழ்ச்சியின் காரணமாக சகோதரி கனிமொழி முயற்சியால் தமிழரின் கலை நிகழ்ச்சிகள் தலைநகரில் நடத்தப்பட்டு புதிய நம்பிக்கை ஒளி ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாண்டு திராவிடர் கழகம் எடுத்த இந்த முயற்சி என்பது இந்தத் திசையில் ஒரு திருப்பம் தருவதாகும். இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான இவ் விழாவை புது மிடுக்குடன் நடைபெறச் செய்வோம்!

பார்ப்பனர்கள் இப்பொழுது புதுவாழ்வு -அதிகாரம் பெற்றதாக மனப்பால் குடித்துக் காணப்படுகிறார்கள். இந்த நேரத்தில் தமிழர்களுக்கு ஏற்பட வேணடியது தார்மீகக் கோபமும் இன உணர்வும் தான்! தமிழ்ப் புத்தாண்டு அதற்கொரு உந்துதலாகட்டும்!
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவும் - இனமானமும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...