Wednesday, January 18, 2012

இனமானப் புயல் சுழன்றடிக்கும்!


தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒட்டியும், தமிழர்களின் அறுவடைத் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிறுத்தியும் திராவிடர் கழகத் தோழர்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்ட விழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.
எந்த ஆண்டையும் விட இவ்வாண்டு கூடுதல் உணர்வுடனும், தார்மீகக் கோபத்துடனும் கருஞ் சட்டைத் தோழர்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு விழா நடத்திட முன்வந்தனர்.
ஆரியப் பண்டிகையான தீபாவளியைப் புறந் தள்ளுவதற்கு இது ஒரு சரியான மாற்று என்பதாகவும் கொள்ளலாம்.
பார்ப்பனப் பண்பாட்டின் படையெடுப்பால் பாதிப்புக்கு உள்ளான இனம் நமது திராவிட இனம். எந்த விலை கொடுத்தேனும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க வேண்டும் என்பதிலே சமுதாயப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகம் முன் வரிசையில் தோள் தட்டி நிற்கிறது.
தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், தமிழ்ப் பேரறிஞர்கள்  ஒரு முகமாகத் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர்.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே மலேசிய தலை நகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்களின் மாநாடே கூட நடந்ததுண்டு.
திராவிடர் கழகத்தின் மாநாடுகளிலும், பொதுக் குழுக் கூட்டங்களிலும் இந்த வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புரட்சிக் கவிஞர் விழாவில் கோரிக்கையாக வைக்கப்பட்டதுமுண்டு.
இவ்வளவுக்கும் பிறகு வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், உலகத் தமிழர்களின் உணர்வின் அடிப்படையிலும், தை முதல் தாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது தமிழ்நாட்டில் (2008).
இப்போது அது ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழர்களின் மத்தியிலே இன உணர்வையும், பண் பாட்டு உணர்வையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை யைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக் கிறது.
தலைநகரமாம் சென்னையிலே, திராவிடர் கழகத்தின் தலைமையிடத்திலே, பெரியார் திடலிலே நடைபெற்ற மூன்று நாள் விழாக்கள் தமிழ் மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
தமிழர்களால் நடத்தப்படும் ஏடுகள் கூட இதற் குரிய முக்கியத்துவத்தை உணராதது வெட்கப்படத் தக்கதாகும். இந்த மரத்துப் போன நிலைதானே தமிழர்களின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம். ஆனாலும் கருஞ்சட்டைப் பட்டாளத்தின்  கடமைப் பயணம் யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் தொடரும், தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.
கோவையிலே தமிழ்ப் புத்தாண்டு அன்று இனிப்பு வழங்கி விழா கொண்டாடுவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு, கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பொங்கல் நாளில் குடும்பத்தாருடன் பொங்கல் உண்பதைக்கூடத் தவிர்த்து கைதானார்களே - அந்தக் கொள்கை உள்ளத்தைப் பலபட பாராட்டு கிறோம்! பாராட்டுகிறோம்!!
துரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அய்யனார் குளத்தில் 32 ஆண்டுகளாகப் பொங்கல் விழா திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி பேசும், தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில், அவர்களின் அடையாளமான - பண்பாட்டுச் சின்னமான பொங்கல் விழாவை நடத்தக்கூடாது என்று  ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் நாம் தமிழ் நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இதனை எந்த நிலையிலும் அனுமதிக்கப் போவதில்லை. எதிர்ப்புகள் வரும்பொழுதுதானே எம் தோழர்கள் எரிமலைகளாக வெடித்துக் கிளம்புவார் கள் என்பது கழகச் சரித்திரம் ஆகும்.
சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தி விட முடியாது. சீறும் சிங்கத்தின் முன் சிறு எலிகள் விளையாட ஆசைப்படக்கூடாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
இனவுணர்வுப் பிரச்சாரப் புயல் முன்னிலும் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்கட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...