Wednesday, January 11, 2012

ஊழலை ஒழிக்கும் உத்தமத் திலகங்கள்?


எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பார்கள்; அந்த நிலையில் எதைச் செய்தால் மத்தியில் பதவியைப் பிடிக்கலாம் என்று கிறுக்குப் பிடித்து அலைகிறது பி.ஜே.பி.,
இதனுடைய இந்துத்துவா கொள்கையை வெளிப்படையாகச் சொல்லவும் தயக்கம் - அதே நேரத்தில் இதன்மீது அழிக்கப்பட முடியாத அளவுக்குப் படிந்துள்ள அந்த அசிங்கத்தைஅழிக்க முடியாத ஒரு நிலையிலும் தடுமாற்றம்.
பாபர் மசூதியை இடித்தவர்களும் இவர்களே - இப்பொழுது அந்த நாள் மிக வருத்தத்திற்குரியது என்று போலிக் கண்ணீர் வடிப்பதும்  இதன் தலைவர்களே!
ஆர்.எஸ்.எஸை சரிக்கட்டிக் கொள்ள அவ்வப் பொழுது இரட்டை அர்த்தத்தில் சில சொற்கள்!
இப்பொழுது எல்லாவற்றையும் விட்டு விட்டு அன்னாஹசாரே என்ற மண் குதிரையை நம்பி ஊழல்ஒழிப்பு வேடம் கட்டி வந்தேனே என்று திரைமறைவில் இருந்து ராஜபார்ட்டுப் பாட்டுப் பாடுகிறார்கள்.
நேரிடையாக இவர்கள் ஊழலைப் பற்றிப் பேசினால் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
மத்தியில் இவர்கள் ஆண்டபோதும் சரி, மாநிலங் களில் இவர்கள் ஆண்டபோதும் சரி, ஆளுகின்ற இந்தக் காலகட்டத்திலும் சரி. ஊழல்களின் ஊற்றுக் கண்களாகவும்இருந்தார்கள் - இருக்கின்றார்கள்.
1998இல் 13 நாள்கள் ஆட்சியில் இருந்ததே பி.ஜே.பி. அப்பொழுது பாதுகாப்புத் துறை அமைச்சராக விருந்த பிரமோத் மகாஜன் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நில பேர ஊழலில் ஈடுபட்டார் என்று நாக்பூரைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற பி.ஜே.பி., உறுப்பினர் பனிவர்வால் புரோகித் பிரதமர் வாஜ்பேயிடமும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனிடமும் நேரடியாகவே ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியதுண்டு. இது குறித்து மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தப் பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் (25.2.1998) ஏட்டில் விரிவாக வந்ததுண்டே!
மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் அரசு நிலங்கள் சுருட்டப்பட்டது இந்தியா டுடேயில் பட்டியல் போட்டு வெளியிடப்பட்டதே!
போபாலில் 15 ஏக்கர் அரசு நிலம் வணிக வளாகத் துடன் கூடிய அலுவலகம் பி.ஜே.பிக்காக இலவசமாகப் பறிக்கப்பட்டது. போபாலில் ஜவகர் சவுக்கில் ஒரு ஏக்கர் நிலம் பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் அலுவலகத்துக்காக ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே போல தலைநகரான போபாலில் மஹாரான முக்கியப் பகுதியில் 18 ஆயிரம் சதுர அடி நிலம் ஒரே ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. சத்னாவில் 30 ஏக்கர் நிலம் நீள்தயால் ஆராய்ச்சிக் கூடம் என்று கூறி இலவசமாகப் பெற்றுக் கொள்ளப் பட்டது.
5000 சதுர அடி கொண்ட 200 பிளாட்டுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இலவசமாகக் கோரப்பட்டு பிறகு சலுகை விலையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல நீளமான பட்டியல்களைக் கொடுக்கவும் முடியும்.
இது ஒருபுறம் இருக்க, உத்தரப்பிரதேசத்தில் கட்சி மாறி வந்தவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவிகளை வாரி வாரிக் கொடுத்து ஆட்சியைப் பிடித்துத் தக்க வைத்துக் கொண்ட நேரத்தில், இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி சொன்ன காரணம், வியாக்கியானம் காலாகாலத்துக்கும் பி.ஜே.பி.யின் யோக்கியதைக் கான மாபெரும் சான்றிதழாகும்.
மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் செய்தி யாளர்கள் கேட்ட கேள்வி: நரசிம்மராவ் தனது ஆட்சியை நீடிக்க எம்.பி.களுக்கு இலஞ்சம் கொடுத் தார் என்று குற்றஞ்சாட்டும் உங்கள் கட்சியே மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து கல்யாண் சிங் அரசை நீடிக்கச் செய்வது என்ன நியாயம்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு வாஜ்பேயி என்ன சொன்னார் தெரியுமா?
பணமாகக் கொடுத்தால் தான் லஞ்சம் - நாங்கள் பணம் கொடுக்கவில்லை. பதவிதான் கொடுத்தோம் என்றாரே பார்க்கலாம்.
பணத்தைவிட பணம் காய்ச்சி மரத்தைக் கொடுத்தார்கள் என்பதுதான் இதில் கவனிக்கத் தக்கதாகும்.
உ.பி. அமைச்சரவையில் கிரிமினல்கள் பலர் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அரசியலில் ரிஷி மூலம் நதி மூலத்தைப் பார்க்கக் கூடாது என்றும் சொன்னவர் பா.ஜ.க.வில் உத்தமப் புத்திரர் என்று உச்சியில் வைத்துப் போற்றப்படும் வாஜ்பேயி.
இந்தச் சிகாமணிகள்தான் ஊழலற்ற ஆட்சியை வழங்கிட மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்கின் றனர் உஷார்! உஷார்!!

1 comment:

இருதயம் said...

தோலுரித்து காட்டியது .... உத்தமர்களை .....

பகிர்வுக்கு நன்றி
ஹசாரே தாத்தாவின் சாயம் வெளுக்கிறது
(http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post.html )

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...