Thursday, January 5, 2012

சித்திரை புத்தாண்டின் தொடக்கமா?: துக்ளக்கின் புரட்டு! - கலி.பூங்குன்றன் -


இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் (11.1.2012) கண்ணைத் திறப்பாரா கருணாநிதி என்ற தலைப்பில் சாமி - தியாகராசன் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதும், அ.தி.மு.க. ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டதுமான ஒரு நிலையில், இவர் கட்டுரை வெளியாகியுள்ளது.
மறைமலையார் கருத்தை மறைப்பதோ? (முரசொலி                31.12.2011) என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் எழுதிய கட்டுரையினைத் தொடர்ந்தும் இது வெளியிடப்பட்டு இருக்கலாம்.
500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கமலை ஞானப் பிரகாசர் சொல்லியிருக்கிறார் - நெடுநல் வாடையில் கூறப் பட்டுள்ளது என்றெல்லாம் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சான்றுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று மறைப்பது மறையவர்களின் சூழ்ச்சிக்கும் பலியானதாலோ! இதோ;
பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டு பிறப்பாக பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்திருக் கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் - தக்கச் சான்றுகள் பகர்கின்றனர்.
இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உண்டு.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை)
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை)
தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறநானூறு)
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலித் தொகை)
எனவரும் கழகக்கால பாடல்களின் அடிகள் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டி யிருப்பதையும் அறிய முடிகிறது.
தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கி திரும்பும் பருவ - கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.
மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் பிள்ளை செந்தமிழ்ச் செல்வியில் எழுதி உள்ளதாக - இன்னொருவர் கட்டுரையிலிருந்து கருத்துக் காட்டப் பட்டுள்ளது துக்ளக்கில்..
உண்மையிலேயே இ.மு.சு.பிள்ளை அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? இதோ:
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.
அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமி ழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங் களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ் சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையா னவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளிச் சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர் களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.
பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்தென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்!
(செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25)
உண்மை இவ்வாறு இருக்க இந்த உருட்டல் புரட்டல் ஏன்? இ.மு.சு. அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகப் பொய்யுரைப்பது ஏன்?
ஏதோ ஒரு சிலர் கூறியவற்றை எடுத்துக் காட்டு கிறார்களே!
1921 இல் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலை மயில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழ்ப் புலவர்கள் முடிவு எடுத்தார்களே!
அவர்கள் எல்லாம் இவர்களின் கண்களுக்கு மிகமிகச் சிறியவர்களோ!
மறைமலை அடிகள், திரு.வி.க., எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சுப்பிரமணிய பிள்ளை, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் - இவர்கள் கருத்துகள் எல்லாம் புறந்தள்ளப்படக் கூடியவையா?
டாக்டர் மு.வ.என்ன கூறுகிறார்?
முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய  வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். - டாக்டர் மு.வ.
நாரணதுரைக்கண்ணன் என்ன கூறுகிறார்?
வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது.
சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டு தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.
- நாரண துரைக்கண்ணன், பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988,
பேராசிரியர் கா.பொ.ரத்தினம் (இலங்கை) என்ன சொல்லியுள்ளார்?
தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களி டையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.
இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப்பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர்ப் பல்லாயிர ஆண்டுகளாக நயத்தக்க நாகரி கத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமை யையும் - பண்பையும், சிறப்பையும் - செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது.
தொல்பொருள் ஆய்வு அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறவில்லையா?
கடைசியாக ஒரே ஒரு கேள்வி. பிரபவ தொடங்கி அட்சய முடியும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே - ஏன்?
இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் சொன்ன துண்டா? ஏன் வசதியாக அந்தப் பக்கம் தலை  வைத்துப் படுப்பதில்லை?
ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து நீர் அறுபதாயிரம் கோபிகளுடன் கூடியிருக் கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்குக் கண்ணன் நான் இல்லா பெண்ணை வரிக்க! என்றார். அதற்கு உட்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனி டம் வந்து, அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரிடம் பெண்ணாக இருந்து வரிக்க எண்ணிக் கொண்டேன் என்றனன்.  கண்ணனும் மறுக்கவில்லை. நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ முனிவர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாயினர். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம்.;
(அபிதான சிந்தாமணி)
இதனை எடுத்துச் சொல்ல வெட்கமாக இருக்கிறதா?
பார்ப்பனச் சோக்கள் தொடக்க முதலே தமிழ் செம்மொழி, விளம்பரப் பலகைகளில் தமிழ் - போன்ற எந்த தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தையும் பார்ப்பனக்கண் கண்டு கொண்டு விமர்சிக்கக்கூடியவர்.
அவரிடம் சில நேரங்களில் சில வீடணர்கள் கழுத்தை நீட்டி விளம்பர மாலைகளைப் பெறுகின்றனர். அதில் துக்ளக் கட்டுரையும் ஒன்று. அவ்வளவுதான்.
இது ஏதோ கலைஞர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பது போல, அவரைத் தனிமைப்படுத்தும் பார்ப்பனீயச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...