கற்காலத்தில் வாழ்ந்த மக் களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகை மனிதர்கள் என்று கூறுவது சரியான முறையல்ல. ரோமானி யர்களுக்கு முன்பு இருந்த எதைப் பற்றியும் எங்களுக்குச் சற்றும் கவலையில்லை என்ற முறையில் பள்ளியில் வரலாறு 19ஆம் நூற்றாண்டில் கற்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாகும் குகைமனிதர் என்று குறிப்பிடுவது. அச்சொற்றொடர் தற்போது நவீன வரலாற்றாசிரியர்களாலும், தொல்பொருள் ஆய்வாளர்களாலும்பயன்படுத்தப்படுவதில்லை.
கற்கால மனிதர்கள் வேட்டையாடி உயிர் வாழும் நாடோடிக் கூட்டத்தினர்; அவர்கள் எப்போதாவது குகைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்று 277 இடங்கள் அய்ரோப்பாவில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளில் சில: ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்டாமிரா, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லாஸ்காக்ஸ் மற்றும் டெர்பிஷையரில் உள்ள கிரஸ்வெல் கிராக்ஸ் ஆகியவை. சில ஓவியங்களை வரைந்திருப்பதற்கும், தீயைப் பயன்படுத்தி சமையல் செய்திருப் பதற்கும், அவர்களது சடங்குகள், சவஅடக்கம் ஆகியவற்றிற்கான அடையாளங் களை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நிரந்தரமான வாழ்விடங்களைக் கொண்டவர்களாக இல்லாமல் நாடோடிகளாகவே இருந்தனர்.
மிகவும் பழமையான குகை ஓவியம் 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் அது பற்றிய சரியான காலம் எது என்பதைக் கூறுவது மிகவும் எளிதானதல்ல. வண்ணம் ஒரு உயிரிப் பொருளல்ல என்பதால் அவற்றில் உள்ள கரிமத்தைக் கொண்டு அவற்றின் காலத்தைக் கணக்கிட இயலாது.
தென்ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வேட்டையாடிக் கூடி வாழும் மக்களின் குகை ஓவியங்கள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் ஷமாம்கள் வரைந்தவையாகும். ஆவிகளுடன் தொடர்பு கொள்ள இவர்கள் இருண்ட, பெரும்பாலும் மக்கள் நடமாற்ற ஒதுக்குப்புறமாக உள்ள குகைகளை ஓவியங்கள் வரையப் பயன்படுத்தியுள்ளனர்.பெரும்பாலும் அவை தொடக்கக் கற்காலத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் என்றும் கூறப்படுகிறது.
வடசீனாவில், யாடோங் (yaodong) என்று அழைக்கப்படும் குகை வீடுகளில் இன்றும் 4 கோடி மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 8000 இல் உலகின் மொத்த மக்கள் தொகையே 50 லட்சம் மட்டுமே என்பதால், அப்போதிருந்த மொத்த மக்கள் தொகையைப் போன்று எட்டு மடங்கு மக்கள் இன்று குகைகளில் வாழ்கிறார்கள்.
குகைகளில் வாழும் மக்கள் குகையில் வாழும் மனிதர்கள் என்று பொருள் தரும் ட்ரோக்லோடைட்ஸ் (Troglodytes) என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கிரேக்கச் சொல்லுக்கு பொந்துகளில் நுழைபவர்கள் என்று பொருள்படும்.
நவீன காலங்களில் இவ்வாறு குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் துருக்கி, தெற்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள அன்டாலூசியா, அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மற்றும் கேனரி தீவுகளில் இருந்துள்ளன.
இவ்வாறு குகைகளில் வாழும் போக்கில் இது முடிவாக இல்லாமல் ஒரு தொடக்கமாகவும் இருக்கக்கூடும். நிலத்தடியில் அமைந்த வீடுகளுக்கு, சாதாரண வீடுகளுக்கு தேவைப்படும் மின்னாற்றல் 25 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று பாத் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment