Wednesday, January 4, 2012

கழகத்தின் ஊர்வல முழக்கம் முக்கியமானது!


தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி (2011) சென்னையில் கூடிய திராவிடர் கழகப்  பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
அதில் 5 ஆவது தீர்மானம் வருமாறு:
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை களை, உரிமைகளை உள்ளடக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கட்டு நீர்மட்டத்தை உயர்த்தும் பிரச்சினை, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினையொட்டிய நிரந்தரத் தீர்வு, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு முடிவடையாமல் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் பிரச்சினை - இவை பற்றி அவ்வப் போது சீசன் மாதிரி கிளர்ச்சிகள், வழக்குகள், ஏற்படுவதை விட,
ஒட்டு மொத்தமான அத்துணைக் கட்சி களும், அமைப்புகளும் - ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபட்டு, மத்திய அரசு தெளிவான தீர்வுகளை இப்பிரச்சினைகளுக்குத் தர ஒரே அணியாக நின்று குரல் கொடுப்பது அவசியம் -  அவசரமாகும்.
அதற்காக தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தீர்வுக்கு வழிவகைகள் காண யோசிப்பது மிகமிக அவசியம் என்று தமிழக அரசினை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தமிழ்நாட்டுக்குச் சட்ட ரீதியாகவும், நியாய ரீதியாக வும், உரிமை படைத்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, பாலாற்று நீர் போன்றவற்றில் உரிமை மறுக்கப் பட்டு, நியாயங்களும் தூக்கி எறியப்பட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நிர்க்கதியாக நிற்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
சர்வதேசியம் பேசும் இடதுசாரிகள் ஆனாலும் சரி, இந்தியத் தேசியம் பேசும் அகில இந்திய கட்சிகளானாலும் சரி, இந்து ராஜ்ஜியத்தை அமைக்க காவி வேட்டியோடும், தாடியோடும், திரிசூலத்தோடும், தாமரைப் பூவோடும் திரியும் இந்துத்துவாவின் பல்வேறு உறுப்புகளைக் கொண்ட அமைப்புகளாக இருந்தாலும் சரி, தமிழ் நாட்டுக்கு, தமிழர்களுக்கு எதிரான நிலையில்தான் இருக்கின்றன என்பது குத்துக் கல்லுப்போன்ற உண்மை- உண்மையிலும் உண்மையாகும்.
நாட்டுப் பிரிவினையைக் கைவிட்ட அறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்ற உண்மையை தொலைநோக்கோடு சொல்லிச் சென்றதை யாரும் எந்த முத்திரை குத்தியும் உதாசீனப்படுத்திவிட முடியாது.
கடைசி முழக்கத்தில்கூட தந்தை பெரியார் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துத்தான் சென்று இருக்கிறார்.
இந்தப் பிரச்சினையில் நாடு, எல்லை, மொழி என்பதையும் தாண்டி மனிதாபிமானம் என்ற மிகப்பெரியஉணர்வு கொடூரமாக நசுக்கப்படுவதைக்கூடக் கணக்கில் எடுத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லையே!
காவிரி நீர்ப் பிரச்சினையால் தமிழ்நாட்டு மக்களின் விவசாயமும், அதனை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களும் வஞ்சிக்கப்படுவதில்லையா?
அதேநேரத்தில் கருநாடக மாநிலத்தில் விவசாய நிலங்களின் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர்களிலிருந்து 25 லட்சம் ஏக்கர்களாகப் பெரும் பாய்ச்சலாக உயர்த்தப்பட்டு இருக்கிறதே!
காவிரிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமானது பாலாறு. பாலாற்றுப் படுகையின் பரப்பளவு 11,000 கிலோ மீட்டர். விவசாயம், குடிநீர் எல்லாமே பாலாற்றை நம்பியே! அதனைப் பாழாறாக ஆக்கிட ஆந்திர மாநிலம் முண்டாதட்டி நிற்கிறதே!
பாலாற்றின்மூலம் தண்ணீர் நிரம்பும் 317 ஏரிகள், மாணவர்கள் விளையாடும் மைதானங்கள் ஆக வேண்டுமா? 606 ஆற்றுக்கால்வாய்களின் நிலையும் அதோகதிதான்!
இவ்வளவுக்கும் பாலாறு தமிழ் மண்ணில் ஓடும் தூரம் 222 கிலோ மீட்டர்; ஆந்திராவிலோ வெறும் 33 கிலோ மீட்டர் தூரம்தான்!
33 கிலோ மீட்டர்காரன் 222 கிலோ மீட்டர்காரனைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான்.
காவிரி மட்டும் என்ன வாழ்கிறதாம்? கருநாடகத்தில் அதன் ஓட்டம் என்பது 350 கிலோ மீட்டரே! தமிழ் நாட்டிலும், புதுவையிலும் அதன் ஓட்டம் 450 கிலோ மீட்டர்.
இந்த 350 கிலோ மீட்டர்காரன் 450 கிலோ மீட்டர்காரனைக் கட்டி வைத்து அடிக்கிறான் - அதிலும் வயிற்றில்.
கேட்டால் தேசிய நீரோட்டமாம்! தேசியம் பேசும் அண்ணாச்சி - காவிரி நீர் என்னாச்சி? என்று திராவிடர் கழகப் பேரணிகளில் கறுப்புச் சட்டைக்காரன் கத்திக் கத்தித் தொண்டைத் தண்ணீரும் வற்றிப் போச்சே!
என்ன செய்யப் போகிறது இந்தியாவும், அதன் தேசியங்களும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...