Thursday, December 22, 2011

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு நியமனத்தை உடனே திரும்பப் பெறுக!



திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு தற்காலிகப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பை மத்திய அரசு ஒப்படைத்திருப்பது நியாயமானதல்ல. எதற்காக இந்த வண்டிக்கு அய்ந்தாவது சக்கரம்? இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் வழி வகுக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

கேரள அரசியல்வாதிகள் கொளுத்திப் போட்ட தீ!


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அரசியல் ஆதாயம் பெற, கேரள அரசியல்வாதிகள் கொளுத்திப் போட்ட தீ இன்றும் எளிதில் அணையாத பெரு நெருப்பாய் சீறி, இரு மாநிலங்களிலும் தேவையின்றி அப்பாவி மக்களை பலி வாங்குகிறது!

எளிதில் உணர்ச்சிப் பிழம்புகளாகிடும் தமிழர்களின் உயிர்கள் - தேவையின்றி - தீக்குளித்தும், தற்கொலை செய்து கொண்டும் மாண்டும் கொண்டுள்ள செய்தி நம் நெஞ்சங்களைக் கசக்கிப் பிழிகின்றன.

ஒரு இடைத் தேர்தல் முடிவுக்காகவா?

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணைக் கட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

1. உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை; அணை நல்ல பாதுகாப்பான நிலையில் உள்ளது. அணையின் உயரத்தை 142 அடிக்கு உயர்த்திடலாம் என்றும் கூறியுள்ளது. (நீரின் கொள்ளளவைப் பெருக்கி, கடலில் வீணாகும் நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தி பசுமைப் புரட்சிக்கு வழிகோலலாம்; தமிழ் நாட்டில் அதிக உற்பத்தி என்றாலும், இந்திய நாட்டின் வளர்ச்சிதானே என்ற எண்ணம் வராத வரையில் எப்படி இந்திய ஒருமைப்பாடு உண்மையாக இருக்க முடியும்?)

2. இதுபற்றி கேரள அரசு கிளப்பிய ஆட்சேபம் - எதிர்ப்பினை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும் படிக் கூறி,   - அக்குழுவில் இரண்டு மாநில வாதங்களை எடுத்து வைக்க இரண்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை அந்தந்த மாநில அரசுகள் நியமித்துள்ளன - ஆய்வு செய்து கொண்டுமுள்ளது.

இந்நிலையில், ஒரு திரைப்படம் மூலம் - திட்டமிட்டே - கேரள அரசும் அரசியல்வாதிகளும் மக்களிடையே இப்படி ஒரு பீதியைக் கிளப்பி, குளிர் காய்கின்றனர் - ஒரு இடைத் தேர்தலின் முடிவுக்காகவும் அதன் அரசியல் விளைவுக்காகவும்.

மத்திய அரசின் மெத்தனப் போக்கு!

மத்திய அரசின் மெத்தனப் போக்கு, தமிழர்கள் கேரளாவில் தாக்கப்படுவதற்கும் அதன் எதிரொலி தமிழ்நாட்டில் கேட்டு, அமைதிப் பூங்கா இன்று அமளிக் காடாகவும் உள்ளது!

இதற்கிடையில் தமிழ் மக்கள் கட்சி, ஜாதி, மதம் பாராமல் தன்னெழுச்சியாகவே கிளர்ந்து எழுந்து, முல்லைப் பெரியாறு அணைப் பாசனத்தையே நம்பி வாழும் விவசாயிகள் நலன் காப்பாற்றப்பட அவரவர்களுக்குத் தோன்றிய முறையில் கிளர்ச்சிகள்,  போராட்டங்களில் ஈடுபடுவது நாளும் உச்ச கட்டத்தை நோக்கியே செல்கின்றது.

இப்படி ஆகுமா?

மத்திய அரசின் தலைமை இதில் குறிப்பிடத்தக்க வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கவும், அணையைப் பாதுகாக்கும் பொறுப்பை - மத்திய ரிசர்வ் படையிடம் ஒப்படைக்கவும் ஆன நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கியிருந்தால் இப்படி நிலைமை மோசமாகுமா?

இந்த நிலையில் பிரச்சினையைப் பொதுக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டிய மத்திய அரசு - மறைமுகமாக கேரள அரசின் போக்குக்கு இணங்குகிறதோ என்ற அய்யம் ஏற்படும் வகையில், அணை விவகாரத்தில் கேரளா அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு தற்காலிகப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பைப் ஒப்படைத்திருப்பது நியாயமானதல்ல; தேவையானதும் அல்ல. கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டே தெளிவுபடுத்தி உள்ளது.

வண்டியில் எதற்காக அய்ந்தாவது சக்கரம்?


ஜஸ்டிஸ் ஆனந்த் குழுவும் செயல்படுகிறது.
பிறகு இது ஏன் வண்டியின் அய்ந்தாவது சக்கரமாகி செயல்பட வேண்டும்?

இந்தக் குழுவில் பிரச்சினைக்குரிய ஒருவரும் ரூர்க்கி அய்.அய்.டி. பூகம்ப பொறியியல் துறை பேராசிரியர் டி.கே. பால் என்பவரையும் - முன்பு இவர் உச்சநீதிமன்றத்தால் - கேரள அரசு கூறிய நிலையில் - நிராகரிக்கப்பட்டவர். தமிழ்நாடு அரசு, மக்களின் சந்தேகத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது!

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விவரமாக கடிதம் எழுதியிருப்பது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை வரவேற்கிறோம்.

நாம் அதனை முழுமையாக வரவேற்கிறோம். இது தமிழக மக்களின் உரிமைப் பிரச்சினை - வாழ்வாதாரப் பிரச்சினை.

இதனை இப்படிப்பட்ட குழுக்கள் அமைப்பதன் மூலம் மேலும் மத்திய அரசு சிக்கலைத் தீர்ப்பதற்கு பதில் மேலும் சிக்கலாக்கி விடக் கூடாது.

உடனே அந்தக் குழு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மேலும் கொந்தளிக்கத்தான் இது வழிவகை செய்யும். எரியும் நெருப்பை அணைக்க பெட்ரோலையா ஊற்றுவது?

உடனடியாக அதனை ரத்து செய்து அறிவிப்பு வருவதோடு, அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் படையை அனுப்பட்டும் மத்திய அரசு. அவசரம் - அவசியம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...