Tuesday, December 13, 2011

விண்வெளிக்கு முதன் முதலாகச் சென்ற விலங்கு எது ?


பழ ஈதான் விண்வெளிக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட உயிரினமாகும். அமெரிக்காவின் வி-2 ஏவுகணையில் இந்த மிகச் சிறிய விண்வெளி வீரர்கள், சோள விதைகளுடன் வைத்து 1946 ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட்டன. அதிக உயரத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளாவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ய அவை பயன்படுத்தப்பட்டன.
இந்த பழ ஈக்களை சோதனை மேற்கொண்டவர்கள் விரும்பி பயன்படுத்தினர். இதுவரை அறியப்பட்டுள்ள மனித நோய்களின் மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள் இந்த ஈயின் மரபணுக்களுடன் ஒத்துள்ளன. இந்த ஈக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன; மயக்க மருந்துக்கு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக மிக விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் புதியதொரு தலைமுறை உருவாவதை நீங்கள் காணலாம்.
விண்வெளி என்பது பூமியின் மேல்மட்டத்தில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) தொடங்குவதாகும். பழ ஈக்களுக்குப் பிறகு நாம் விண்வெளிக்கு கடல் பாசியையும், அதன் பின்னர் குரங்குகளையும் அனுப்பினோம்.
1949 இல் ஆல்பர்ட் 2 என்ற முதல் குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அது 134 கி.மீ. (83 மைல்) சென்றடைந்தது. அதற்கு ஓராண்டு காலத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட ஆல்பர்ட் 1 என்ற குரங்கு 100 கி.மீ. தூரத்தை எட்டும் முன்பாகவே மூச்சுத் திணறலால் இறந்துபோனது. தரையிறங்கும்போது, ஆல்பர்ட் 2 இன் பாராசூட் விரியாமல் போனதால் அதுவும் இறந்துபோனது.
1951 வரை ஒரு குரங்கு பாதுகாப்புடன் விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வர இயலவில்லை.  ஆல்பர்ட் 6 குரங்கும், அதனுடன் சென்ற 11 பலித் தோழர்களும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தனர். என்றாலும் ஆல்பர்ட் 6 அடுத்த இரண்டு மணி நேரத்தில் இற்ந்து போனது. பொதுவாகவே, முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்குகள் அவை எவ்வளவு நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன என்பதை வைத்து வேறுபடுத்திக் காணப்படவில்லை. இந்த பொதுவிதிக்கு பேகர் என்ற அணில் குரங்கு மட்டுமே விலக்காக அமைந்தது. 1959 இல் விண்வெளிப் பயணத்திற்குப் பின் அது 25 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது.
விண்வெளிக்கு  நாய்களை அனுப்புவதையே  ரஷ்யர்கள் விரும்பினர்.  1957 இல் ஸ்புட்னிக் 2 இல் முதன் முதலாக லைகா என்ற நாய் அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணத்தின் போது ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக அது இறந்து போனது.  முதன் முதலாக விண்வெளிக்கு   1961 இல் யூரி காகரின் என்ற மனிதரை  அனுப்பியதற்கு முன்னர், குறைந்தது மேலும்  10 நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஆறு நாய்கள் உயிர் பிழைத்தன. 1968 இல் ரஷ்யர்கள் முதல் விலங்கை விண்வெளியில் வெகுதொலைவுக்கு அனுப்பிவைத்தனர். அவ்வாறு அனுப்பப்பட்ட ஆமைதான் சந்திரனைச் சுற்றி வந்த முதல் உயிரினம் என்ற பெருமையைப் பெற்றது.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மற்ற விலங்குகளில் மனிதக் குரங்குகள்,  கினியா பன்றிகள், தவளைகள், எலிகள், குளவிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் மம்மிசோக் என்று அழைக்கப்படும் மிகவும் கடினமான மீன் ஆகியவை அடங்கும். முதன் முதலாக விண்வெளிக்கு பத்து பல்லிகள் ஜப்பானால் 1985 இல் அனுப்பப்பட்டன. 2003 இல் நடைபெற்ற கொலம்பியா விண்கல விபத்தில் உயிர் பிழைத்த சில உருண்டையான புழுக்கள் மட்டும் அதன் இடிபாடுகளில் காணப்பட்டன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...