Monday, December 5, 2011

சிங்கப்பூரில் ஒரு புத்தக யாத்திரை!


சிங்கப்பூரில் உள்ள இனிய பகுத்தறி வாளர்களான நண்பர்களில் புதுமைத் தேனீ  என்றழைக்கப்படும் சிறந்த இலக்கிய எழுத்தாளர் அருமை நண்பர் மா. அன்பழகன் அவர்கள்.

தமிழ்நாட்டிலே அவர் ஒரு எழுத்தாள ராக மலர்ந்தார். கலைஞரும் நானும் அவரது நூல்கள் வெளியீட்டு விழாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கலந்து கொண்டோம். திராவிடர் இயக்கப் பற்றாளரும்கூட! அண்மை சிங்கப்பூர் பெரியார் விழாத் தொகுப்பாளரும் அவர்தான் (சுவைப்படத் தொகுத்தது)

சிங்கப்பூரில் தொழிலதிபராக அவர்கள் குடும்பத்துடன் குடிஉரிமை பெற்று வாழும் நிலையிலும் தன்னை ஒரு நாத்திகன் - பகுத்தறிவுவாதி - என்பதை ஒளிவுமறைவின்றிக் கூறும் துணிச்சல் காரர்.

நல்ல சிறுகதைகள், கவிதைகளை தமிழில் படைக்கும் படைப்பாளியே.

சிங்கப்பூரின் இலக்கிய கழகத்தின் சார்பில் சிங்கப்பூர் மொழிகளான சீனம், மலாய், தமிழ் ஆகியவைகளில் கவிதை கள் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்து, அதில் முதலாவது, இரண்டாவது ஆக தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் பரிசுக் குரியவைகளாகவும், பல்வேறு பொது இடங்களில் (MRTS) வேக மின்சார பயண ரயில் நிலையங்களிலும்கூட கவிதைகள் வெளிப்படையாக வைக்கப்படும் என்றும், ஒரு தொகுப்பு நூலாகவும் வரும் என்ற அறிவிப்பு கொடுத்திருந்தனர்.

நண்பர் மா. அன்பழகன் அவர்கள் கலந்து கவிதை எழுதி,  தமிழில் சிறந்த கவிதையாக அது தேர்ந்தெடுக்கப் பட்டது.

குறிப்பிட்ட பரிசுக்கு உரிய 150 வெள்ளியை (சிங்கப்பூர் டாலர்) கூப்பன் வவுச்சராகத தந்து, ஒரு கடையில் புத்த கங்களை அவர் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி கூப்பன்களையும் அவருக்கு அளித்தனர்.

அவர் எனது  மகள் வீட்டிற்கு வந்து உரையாடி நலன் விசாரித்துவிட்டு, இத் தகவலை சொன்னார். நாங்கள் மகிழ்ச்சி அடைந்து பாராட்டினோம் அவரை.

எனக்குப் பரிசாக வந்த 150 டாலர் கூப்பனுக்குரிய புத்தகங்களை உங்களுக்கு பரிசாக வாங்கித் தர விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “Books Actually” என்பது.

அங்கே சென்று நீங்கள் அங்குள்ள (ஆங்கில புத்தகக் கடை அது) புத்தகங் களை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து எடுங்கள் என்று கூறி எனது புத்தக ஆர்வத்தை அதிகப்படுத்தினார்.

அவரது காரிலேயே இருவரும் பயணமானோம். சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளையும்கூட அவர் காட்ட அந்த புத்தக யாத்திரை பயன்பட்டது 9, யாங்க் சியோக் என்ற தெரு தான் புத்தகக் கடை முகவரி.

அதை சிங்கப்பூர் நகர மேப் மூலம் கண்டறிய எடுத்த முயற்சியே சுமார் 1 மணி நேரம் சுற்றி சுற்றி வரும் நிலையை உருவாக்கியது. ஒரு வழிப் பாதை - பல தெருக்களை சற்று தாண்டி விட்டால் மீண்டும் தூரம் சென்றுதான் திரும்பி புது இடம் தேட  வேண்டும் என்ற நிலை.

அப்பாடி... கண்டறிந்தோம் அந்த எண்ணுள்ள முகவரியை! மாடி ஏறிச் (பழைய மரப்படிகள் உள்ள புராதன கட்டடக் கலை எழில் கொஞ்சும் கட்டிடம்)  சென்றோம். ஒன்றிரண்டு புத்தகங்களே இருந்தன மீதி எல்லாம் பரிசுப் பொருள்கள்! எங்களுக்கு ஏமாற்றம் அங்குள்ளவர் சொன்னார்; அந்த புத்தகக் கடை இடம் மாறி விட்டது. விசாரித்து அங்கே செல்லுங்கள் என்று!

மீண்டும் தொலைபேசி, தொடர்பு கொண்டு புதிய முகவரி ‘Book Actully’ கடைகள் கிடைத்தது. நண்பர் விட வில்லை. அந்த முகவரியை கண்டறிய மேலும் சுமார் 1 மணி நேரம் சுற்றிச் சுற்றி வந்தோம்.

அஞ்சல் அகம் சென்று நண்பர் மா. அன்பழகன் விசாரித்து வெற்றியுடன் திரும்பினர். ஆனால் இரண்டு முறை பெரிய சாலை புக்கிட் நேரா சாலை என்ற பெரிய சாலையிலே சுற்றி சுற்றி வருகிறது. ஒரு தமிழ்த் தாய் வந்தார்; அவரிடம் முகவரியைக் காட்டிக் கேட்டபோது, அதிகம் படிக்காதவராகத் தோற்றமளித்த அந்த அம்மாதான் சென்று திரும்பி உள்ளே நுழையுங்கள் அத்தெரு வரும் என்று கூறி எங்கள் நன்றியைப் பெற்று நடந்தார்!

மீண்டும் ஒரு சந்தேகம் கலந்த பார்வை யுடன் சென்று கடைசியில் அமெரிக் காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ்கள் ஆனோம். புத்தகக் கடை வந்துவிட்டது; தேர்வு செய்யப்பட்ட பழைய புத்தகங்கள், புது நூல்கள் முதலியவற்றை இலக்கிய நயத்துடன் ஏராளமான நீள அளவில் அலிபாபாவின் குகைபோல - அழகாக அடுக்கி வைத்து, ஆர்வத்துடன் வந்த எங்களுக்குப் பல நூல்களை எடுத்துக் கூறி விளக்கினார்.

150 டாலருக்குப் பல முக்கிய  நூல்கள் (முன்பு வெளிவந்த வரலாற்று நூல்கள் உட்பட) பலவற்றை பார்த்தேன். 3 மணி நேரத்திற்கு மேல் - புறப்பட்டதிலிருந்து ஆகிவிட்டது! ஏன் தயங்குகிறீர்கள். புத்த கங்களை எப்படி தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்வது எடை அதிகம் ஆகி விடுமே விமானத்தில் என்பதற்குத்தானே. பரவா யில்லை கவலைப்பட வேண்டாம்!

நாங்கள் குடும்பத்துடன் ஜனவரியில் தமிழ்நாடு வரும்போது இவைகளைக் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி, அவர் வீட்டு வழி என்பதால் அங்கேயே மதிய உணவை முடித்து என்னை வீட்டிற்கு அழைத்து வந்து ஒப்படைத்தார்!

இப்படி சிங்கப்பூரில் ஒரு புத்தக யாத்திரை முடிந்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...