Saturday, December 24, 2011

பேசு சுயமரியாதை உலகைப் படைப்போம்!


நம் மக்களின் விழி திறந்த வித்தகர், பகுத்தறிவுப் பகலவன் என்று பாரெல்லாம் பாராட்டப்படும் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது 38-ஆம் நினைவு நாள் இன்று - 2011 டிசம்பர் 24.

அய்யாவின் நினைவு நாள் என்பது பகுத்தறி வாளர்களாகிய நம்மைப் பொறுத்து அது ஒரு வரலாற் றுக் குறிப்பு நாளே தவிர, மற்றபடி ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல.

தந்தை பெரியார் மறையவில்லை - மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை;
ஆனால் இப்போதோ, மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்பதைத் தாண்டி, உலகம் முழுவதும் விரைந்தார் என்ற நிலை உருவாகி வளர்ந்து வருகிறது!

தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா.

அது மட்டுமா? பெரியார் என்பது தளராத ஒரு தத்துவம்; மானத்தோடும், உரிமையோடும், பகுத்தறி வோடும் வாழ நினைக்கும் மாந்தர்களுக்குத் தேவைப்படும் நிற்கக் கூடாத மகத்தான மூச்சுக்காற்று!

அந்த மூச்சின்றி சமுதாயத்தில் பேச்சில்லை. அவரது இயக்கம் - அவர் காலத்தை விட அதிகமான எதிர்நீச்சல், இருட்டடிப்பு, திரிபுவாதத்தைச் சந்தித்துச் சமர்க்களத்தில் போராடும் இயக்கமாக, அவர் தந்த துணிவோடு களம் காணுகிறது. அலுப்பில்லை; சலிப்பில்லை. பதவியாசை, புகழாசை இல்லாமல், நன்றியை எதிர்பார்க்காதது மட்டுமல்ல பொதுவாழ்வில் மானத்தையும் கூடப் பாராது உழைக்கும் மாமணிகளைத் தனது கட்டுப்பாடு மிக்க வீரர்களாக்கிய பாசறையாக அவரது இயக்கம் இன்று வீறு நடை போடுகிறது!

சபலங்கள் ஒதுங்கி விட்டன. எனவே சலனங்களுக்கு இடமின்றி ஜீவநதியாக அது ஓடிக் கொண்டே உள்ளது!

அவர் தந்த அறிவாயுதங்களில் இனமானக் கருத்துப் போர்வாள்தான் விடுதலை நாளேடு! எத்தனையோ சூறாவளிகளையும், சுனாமிகளையும், அடக்குமுறைகளையும், எண்ணக் குறையாத துரோகங் களையும் சந்தித்தும் சாயாத நாணலாக, கோணல் இல்லா கொள்கை லட்சியங்களின் பதாகையாக வளர்ந்தோங்கி, இயக்கவீரர்கள், வீராங்கனைகளின் கட்டுப்பாடு, ஓய்வறியாத் தொண்டு காரணமாக, உலக சாதனை போல் ஒரே மூச்சில் விடுதலைக்கு பல்லாயிரக்கணக்கான சந்தாக்களை அதற்குத் திரட்டி இயக்கத்தின் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்பதுடன் 77 வயதிலும் அக்கொள்கை நாளேடு வாலிபத்துடனும், வசந்தத்துடனும் தனது அயராப் பணியை அசராமல் தொடருகின்றது என்பதே இந்த நினைவு நாளில், திராவிடர் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு மூலம் கிடைத்துள்ள நற்செய்தி!

பெரியாரின் மண்டைச் சுரப்பை
உலகு தொழுகிறது (பின்பற்றுகிறது)
என்று காட்ட உறுதி யெடுத்து
உழைக்கச் சூளுரை ஏற்போம்!
பெரியார் என்ற தத்துவம் தனது
உலகச் சுற்றுப் பயணத்தை தடைகளைத் தாண்டி
தொடங்கிவிட்டது! அது
தொடரும்! தொடரும்!!
தொய்வின்றித் தொடரும்!
தோழர்களே, தோழியர்களே, இந்தப் பயணத்தில் பங்கேற்பதையே உங்கள்
உயிர்க் கடமையாகக் கொள்வீர்!
வெற்றி நமதே!
புதியதோர் உலகை பேசு சுயமரியாதை
உலகாகப் படைப்போம்! வாரீர்! வாரீர்!!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...