Monday, December 5, 2011

கடல் கடந்தும் பெரியார் வாழ்கிறார் - தமிழர் தலைவர்

சிங்கப்பூரில் பெரியார் பணி
- முனைவர் பேராசிரியர் மங்களமுருகேசன்

பெரியார் கடல் கடந்தும் வாழ்கிறார் என்று தமிழர் தலைவர், மனித பண்பாளர் - ஆம்! சிங்கப்பூர்த் தமிழர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர் - நம் ஆசிரியரை - அவர் குறிப்பிட்டார். அந்த வாக்கு பொய்யல்ல என்பதை அமெரிக்கா வாழ் தமிழர் சோம.இளங்கோவன் மெய்ப்பித்து விடுவது போல் சிங்கப்பூர் தமிழர்கள் மெய்ப்பித்து வருவதுதான் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்வின் பொருட்டு வெளிவந்துள்ள விழா மலர் பெரியார் பணி என்னும் மலர் சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தின் மலர்.
முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டையின் முன்பக்கம் வரை பகுத்தறிவு மணம் வீசிப் பாராட்டைப் பெறுகிறது பெரியார் உணர்வு.

சிங்கப்பூரில் உள்ள பெரியார் சமூகசேவை மன்றமானது மனித குல வளர்ச்சிக்கு அடித்தளமான கல்வியறிவை, மனித நேயத்தைப் பற்றிய பல நல்ல கருத்துகளை மக்களிடையே பரப்பிடும் நற்பணியினைத் தன்னுடைய பணிகளில் முக்கிய, முதன்மைப் பணிகளாகக் கொண்டுள்ளது.

இம்மன்றம் 95 ஆண்டுக்காலம் தம் வாழ்நாள் முழுமையும் மனித நேயத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்த தந்தை பெரியாரின் பெயரில் அவர் கண்டு, வென்ற வாழ்வியல் தத்துவங்கள் குறித்தும், மேலும் பல சிறப்பான வாழ்வியல் குறித்தும், இக்கால கல்வியறிவிற்கு ஏற்ப அறிஞர் பலரின் சிந்தனைகள் சிங்கப்பூர் வாழ் நம் தமிழ் மக்களிடம் சென்று பயன்பெறும் வகையில் பெரியார் கண்ட வாழ்வியல் எனும் பொதுமக்கள் விழாவை 2007ஆம் ஆண்டு தொடங்கி ஈராண்டிற்கு ஒருமுறையென 2009இல் நடத்தி 2011இல் முன்னெடுத்து சென்றதன் விளைவுதான் பெரியார் பணி எனும் விழா மலர். பெரியார் பணி முடிக்கச் சிங்கப்பூர் தமிழர்கள் கண்ட பகுத்தறிவு மணம் வீசும் பெரியார் பாசறைமலர் இது.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்களின் பணி வெறும் பாராட்டுக்குரிய பணி மட்டுமல்ல - போற்றுதலுக் குரிய பணி. 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று பெருமிதம் கொள்ளும், இறும்பூது எய்தும் வீ.கலைச்செல்வம் நம்நாட்டின் எதிர்கால இளைய சமுதாயம் புத்தாக்க சிந்தனை களைப் படைத்து ஒழுக்கம், தொண்டு மனிதநேயம், இன நல்லிணக்க உணர்வுடன் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திட திருவள்ளுவர் திருக்குறளிலே குறிப்பிட்டது போல பெரியாரைத் துணைக் கோடல் ஒன்றுதான் புதிய சமுதாயம் மலர வழிகாட்டும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடுகையில் மகிழ்வின் எல்லைக்குச் செல்கிறோம். அவர் கூறுவது, அவர் வாழும் நாட்டு இளைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, நம் தமிழ்நாட்டு இளைய தலைமுறைக்கும் தான்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் அவர்களுக்கு முனைவர் மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர் தமது வாழ்த்தினை அனுப்பியுள்ளார் அவர்,  தம் வாழ்த்தில்,

1940 முதல் 60களில் எப்படிப் பெரியாரின் சமூக சிந்தனைகள் தமிழகத்தில் ஒரு சமூக விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தியதோ, அப்படிப்பட்ட விழிப்புணர்ச்சி கொண்ட மக்களை, சமுதாயத்தை உருவாக்கி ஒரு வளமான நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறத் தூண்டு கோலாக உங்கள் முயற்சி அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை விடப் பெரிய வாழ்த்து வேறு என்ன வேண்டும்?

பெரியார் கண்ட வாழ்வியல் என்னும் சிறப்பானதொரு நிகழ்ச்சியை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என 2007ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் - அம்மா மணியம்மையார் வழியில் மனித நேயப் பண்பை வளர்க்கும் ஆசிரியர் அவர்களை பெரியார் கண்ட வாழ்வியல் எனும் மக்கள் விழாவிற்கெல்லாம் அழைத்துச் சிறப்பித்த பெருமையைக் காண்கிறோம், பேருவகை அடைகிறோம். ஆசிரியர் அவர்களின் பின்னே இருந்து அவர்தம் தொண்டுக்கு உறுதுணையாக விளங்கி வரும் அவருடைய வாழ்விணையர் திருமதி. மோகனா அவர்களும் பங்கேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த மன்றத்தின் கடந்த கால ஏட்டைப் புரட்டிப் பார்க்கையில் தந்தை பெரியாரின் வழியில் நடைபெற்று வரும் பாங்கைப் பார்க்கிறோம்.

2007ஆம் ஆண்டு தமிழறிஞர் சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி ஆகியோர்களை அழைத்து பெரியார் கண்ட வாழ்வியல் எனும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாவை முதன்முதலில் நடத்தியுள்ளார். அதுவே மன்றத்தின் அறிமுக நிகழ்ச்சியுமாம் அடுத்த பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்வு நடைபெற வேண்டிய ஆண்டு 2009 எனினும் 2008இல் விருந்தோம்பலுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று அதிலும் தமிழர் தலைவரை பங்கேற்க அழைத்துள்ளனர்.

2009இல் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்க்கத் தமிழ்ப் பேச்சுப் போட்டி நடத்தி பரிசும் வழங்கினர் என்பதோடு தமிழர் தலைவர், அமெரிக்காவிலிருந்து டாக்டர் சோம.இளங்கோவன், டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் இலக்குவன் தமிழ், சிங்கப்பூர் விரிவுரையாளர் ரத்தினகுமார், தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன் எனப் பெருமக்கள் பலரும் பங்கேற்ற விழாவில், மன்றத்தின் சார்பாக வழங்கப்படும் முதல் பெரியார் விருதினை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் மூத்த அலுவலரான திருமதி. புஷ்பலதா அவர்களுக்குத் தமிழர் தலைவர், பாராட்டி வழங்கச் செய்தனர். இப்போது பெரியார் மணி என்று வெளியிடப்படும் மலர் முதல் மலர்  பெரியார் சேவை என்னும் பெயரில் வழங்கப் பெற்றது.

நம் மக்களிடத்தில் தமிழ்மொழி உணர்வு மனிதநேய சிந்தனை, கல்வியறிவு ஆகிய சிந்தனைகளை ஊக்கப்படுத்திச் சிறப்பான வாழ்வினை வாழ்ந்திடல் வேண்டும் எனும் சேவை நோக்குடன் பலப்பணிகளையும், விழாக்களையும் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் தொடர்ந்து நடத்தி வருவதன் தொடர்ச்சியாக 13.11.2011 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் வள்ளல் வெ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் மா.அன்பழகன் வரவேற்க, வீ.கலைச்செல்வன் தலைமையில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான விக்ரம் நாயர் பங்கேற்க அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவனும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் வாழ்த்துரை வழங்கினர்.

பெரியார் சமூக சேவை மன்றச் செயலாளர் க.பூபாலன் நன்றியுரை நிகழ்த்திய இவ்விழாவில் சிறப்புரையினைத் தமிழர் தலைவர் அவர்கள் நிகழ்த்தியதோடு தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களுக்குப் பெரியார் விருதும் வழங்கினார்.

இவ்விழாவில் வெளியிடப் பெற்ற சிறப்பு மலர்தான் பெரியார் பணி என்பது.
இம்மலர், வரலாற்றுத் தகவல்கள் பல கொண்ட மலராக திகழக் காண்கிறோம். சிங்கப்பூர் கொள்கை மறவர்கள் உருவாக்கிக் கொள்கை மறவர் கையில் தவழும் ஏடாகவும் விளங்குகிறது என்பதுதான் அதன் சிறப்பு.

தமிழக  கவிஞர்களுக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்லர் என்பதைப் போல் பெரியாரைக் கவிதையிலும் தூக்கிப் பிடித்து நிறுத்துகிறார் அந்நாட்டு வெண்பாச் சிற்பி, விபூதி பூசும் வி.இக்குவனம், அவர் 160க்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதி தந்தை பெரியார் வெண்பா அந்தாதி என்றே புத்தகமாக எழுதியவர் என்பது கூடுதல் தகவல்.

வள்ளுவம் காட்டிய பெரியார் என்று சுப.திண்ணப்பம் எழுதி கட்டுரையில் வள்ளுவர் காட்டிய பெரியார் வாழ்க்கைக்கு ஒளி விளக்கு பெரியார் என்று கூறுகிறார். இந்தக் கட்டுரையின் பக்கத்திலே பேராசிரியர் க.அன்பழகன் கூறும்  திருக்குறளைப் பிரபலப்படுத்தியவர் தந்தை பெரியார் எனும் செய்தியை 1940க்கு முன்னர் அறிஞர்கள் மட்டுமே படிக்கும் நூலாக திருக்குறள் இருந்ததை மாற்றிச் சாதாரண மக்களும் திருக்குறளைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டிய பெருமை பெரியாரையே சாரும் என்னும் வரிகள் பொருத்தமாக அமைத்திடக் காண்கிறோம்.

ஓய்வெடுத்து உறங்குகின்ற வெண்தாழ் வேந்தே நீங்கள்
ஒருமுறை இங்கு வாருங்கள் ஒட்டியிருக்கும் மூடப்பழக்கம்
துப்புரவாய்த் துடைத்தொழிந்து தொண்டறம் நிலைத்து வாழ
மாற்று மருந்தைத் தந்து ஆற்றுப்படுத்தி போங்கள்
என்று கவிதையிலே பெரியாருக்கு அழைப்பு விடுக்கிறார் மா.அன்பழகன்.

டிசம்பர் 25, 1929இல் சிங்கப்பூர் வந்த பெரியார் 1930இல் 16.1.1930 சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட செய்தி, தந்தை பெரியாரின் பச்சை அட்டை குடிஅரசு ஏட்டைச் சிங்கப்பூர் தமிழர்கள் படிக்கத் தூண்டும் வகையில் முகவராக இருந்து சந்தா சேர்த்து அனுப்பிய மலேசியாவின் தந்தை தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களுக்கும் தந்தை பெரியாருக்கும் இடையேயான நல்லுறவை வெளிப்படுத்துகிறது எம்.இலியாசின் கட்டுரை.

சிங்கப்பூரில் பெரியார் இன்றும் வாழ்கிறார் என்று கூறத்தக்க ஆதாரங்கள் ஏராளம். தந்தை பெரியார் கடல் கடந்தும் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் தந்தை பெரியார் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள். 1954-55இல் மலேசியா சிங்கப்பூருக்கு இரண்டாம் முறையாக வந்த போது பல சீர்திருத்தத் திருமணங்களை நடத்தியிருக்கிறார். ஜனவரி 7ஆம் நாள் பாசிர் பாஞ்சாதிக் கண்ணுச்சாமி - இந்திராணிக்கு வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து உரையாற்றிய செய்தி 9.1.55இல் சிங்கப்பூர் தமிழ் முரசில் இடம் பெற்றுள்ளது. தந்தை பெரியார் வழியில் 1989, 1995இல் தமிழர் தலைவர் தலைமையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. நாம் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவது போல் சிங்கப்பூரில் 1940ஆம் ஆண்டுதந்தை பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்து செப்.22, 1940இல் ஹேப்பி வேர்ல்டு ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடினர். இதில் பாரிஸ்டர் எஸ்.பி.ஆதித்தன், அ.சிகப்பய்யா, கோ.சாரங்கபாணி, ஆதித்தனாரின் மாமனார் உ.ராமசாமி நாடார், ஜெனாப் முக்தர், சீனப்பிரமுகர் ஸிஎஸ்ஸி பங்கேற்ற வரலாற்று நிகழ்வினைப் பெரியார் பணி பதிவு செய்கிறது.

இந்தவிழாவில் ஸி.எஸ்.சி. என்ற சீனப்பிரமுகர் பேசிய பேச்சு தமிழ்முரசு 24.8.1940, 24.9.1940 ஆகியநாள்களில் தமிழ்முரசில் வெளிவந்தது.

தமிழர்களை மட்டும் கவரவில்லை தந்தை பெரியார், சீனர்களின் இதயத்தில் இடம் பெற்று இருக்கிறார். உண்மை இது புகழ்ச்சி இல்லை. வீண் பெருமை இல்லை. அவர் சொல்கிறார் பெரியாரைத் தமிழர்கள் நன்று அறிந்து கொள்வில்லை என்றே நம்புகிறேன்.  காரணம் சீனர்களைப் போலவே தமிழர்களும் அந்நிய ஆதிக்கத்தில் விழுந்து உண்மையை அறியத் தவறியதால். ஆனால் உலகைச் சுற்றியவன் என்ற முறையில் பெரியார் செய்துவரும் வேலைகள் மகத்தானவை என்று நிச்சயமாகச் சொல்லுவேன். பெரியார் இங்கிலீஷ் படிக்கவில்லை என்று எனது நண்பர் சொன்னார். இங்கிலீஷ் படித்திருந் தால் அவரது பெருமை காந்தி, தாகூர் , போஸ் இவர்களை போலவே உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பது உண்மை எனினும் இங்கிலீஷ் படிக்காமலேயே பல தலைவர் தங்கள் நாட்டு மொழியில் அநேகச் சிறந்த காரியங்களை செய்து வருவது உங்களுக்கு தெரியும். இப்போது பெரியார் செய்து வரும் தொண்டுக்குப் பதில் நீங்கள் செய்ய வேண்டியது அவரது கருத்துகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு உலகம் எங்கும் பரப்புவதால் இந்தியாவில் உள்ள தலைவர்கள் பெரியார் கொள்கையைப் பின்பற்றினால் தங்கள் செல்வாக்கு குறையும் என்று நினைக்கிறார்கள் என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த மட்டில் பெரியார் கொள்கையைப் போன்ற சிறந்த கொள்கைகளுக்கு மெதுவாகத்தான் வெற்றி கிடைக்கும்

சிங்கப்பூரில் கல்வித்துறையிலும் பெரியார் வாழ்கிறார். சிங்கப்பூரில் தமிழர்கள் நல்ல கல்வியறிவுடன் தமிழ்மொழியிலும் சிறந்து விளங்க வேண்டுமெனப் பெரியார் தொண்டர்களும், தமிழ் ஆர்வலர்களும் 1940-50களிலேயே 40க்கும் மேற்பட்ட தமிழ்பாடசாலைகளை நிறுவியுள்ளனர். அப்போது நடைபெற்ற பாடசாலைகள் சில.

1. பெரியார் ஈ.வெ.ரா. சமதர்ம தமிழ்பாடசாலை (1948)
2. ஈ.வெ.ரா தமிழ்பாடசாலை (கவிஞர் போஸ்)
3. ஈ.வெ.ரா தமிழ் பாடசாலை
4. நாகம்மையார் தமிழ் பாடசாலை
5. பாரதிதாசன் தமிழ்பாட சாலை

தந்தை பெரியாரை மறக்காத, நன்றி மறவாத தமிழ்க் கூட்டம் இன்றும் சிங்கப்பூரில் வாழ்கிறது அன்றும் வாழ்ந்தது. 1978இல் அய்யா மறைந்தாலும் அவர் நினைவு மறையவில்லை என்பதன் அடையாளமாக சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்க ஏற்பாட்டில் சிங்கப்பூரில் தந்தை பெரியார் அய்யாவின் நூற்றாண்டு விழா, கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி எனப் பல போட்டிகளுடன் 2 நாள்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு இவ்விழாவிற்காகப் பெரியார் கண்காட்சி ஏற்பாடு செய்து 2 நாள்கள் நடத்தி யுள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந்திரனும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 2011இல் நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் சிங்கப்பூர் குடியரசில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞரும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் சுப.திண்ணப்பன் அவர்களைப் பாராட்டிப் பெரியார் விருது வழங்கினார் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள்.

திண்ணப்பன் ஒன்றாம் வகுப்பு மாணவர் தொடங்கி நாட்டின் அதிபருக்கே தமிழ் கற்றுக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். டாக்டர் சோம.இளங்கோவன், அமெரிக்க நாட்டுப் பன்னாட்டு மன்ற இயக்குநர் பெரியார் சமுதாயப் பணிமன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்களுக்கு, சமூக நீதிக்கான வீரமணி விருது எனும் விருதினை வழங்கினார். பெரியார் விருது போலவே இந்த ஆண்டு அறிமுகம் ஆகும் புதிய விருது பெரியார் பெருந் தொண்டர் விருது.

இந்த ஆண்டு தந்தைபெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்று வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திச் சிங்கப்பூருக்கும், சிங்கப்பூர் தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றி வரும் 79வயது நிரம்பி இன்றும் சிங்கப்பூரில் தொண்டாற்றி வரும் இனமான நகைச்சுவை நடிகர் திரு.ஆரூர் சபாபதி, முதுபெரும் சமூகத் தொண்டர் ஆகிய இருவரையும் பாராட்டி தமிழர் தலைவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம்நாயர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். 1929இல் தந்தை பெரியார் சிங்கப்பூர் சென்றார். அதன்பிறகு 1954-55இல் இரண்டாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் பெரியார் இன்றும் அங்கே மனித நேயத்தின் சின்னமாகக் கடல் கடந்தும் வாழ்கிறார். தமிழர் தலைவர் சிங்கப்பூரில் 2009இல் குறிப்பிட்டது போல பெரியார் கண்ட வாழ்வியல் ஒரு நாட்டுக்கோ, ஓர் குளத்துக்கோ சொந்தமானது கிடையாது. மனிதகுலம் முழுவதற்கும் சொந்தமானது. எனவே முதலில் பெரியாரைப் படியுங்கள். ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன். பெரியாரை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்த கொள்ளவில்லை என்றால் அது உங்களுடைய தவறே தவிரப் பெரி யாருடைய தவறு அல்ல. பெரியார் ஒரு பேரங்காடி (சூப்பர் மார்க்கெட்) அதில் உங்களுக்கே தேவையான வைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...