Tuesday, December 6, 2011

எந்த மாதிரியான இசை பாம்பை மயக்க வல்லது ?



எந்த இசையைப் பற்றி யும் பாம்புகள் கவலைப் படுவதில்லை. எல்லா இசையுமே அவைகளுக்கு ஒன்று போன்றவைதான்.
 
பாம்பாட்டி மகுடி ஊதி பாம்பை  ஆடவைக்கும் காட்சி களில் பாம்பு மகுடியைப் பார்த்து தான் ஆடுகிறதே அன்றி அதன் ஒலியைக் கேட்டு அல்ல.

பாம்புகள் செவிடு அல்ல என்றாலும், பொதுவாக அவை இசையைக் கேட்பதில்லை.  அவைகளுக்குக் வெளிக்காது மடல்களோ அல்லது செவிப்பறை களோ கிடையாது. என்றாலும் ஒலி அதிர்வுகளை அவைகளால் உணர முடியும்.  தரையில் இருந்து வரும் ஒலி அதிர்வு அலைகள் அவைகளின் தாடைகள் வழியாக வயிற்று தசைகளை அடைகின்றன. காற்றில் எழும் ஓசைகளையும் அவைகளால் ஓர் உட்காதின் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.

பலத்த ஓசைகள் பாம்புகளை சலனப்படுத்துவதில்லை என்பதால், அவைகளால் ஒலியைக் கேட்கமுடியாது என்றே கருதப்பட்டு வந்தது. என்றாலும் பாம்புகளால் நுட்பமாகக் கேட்க முடியும் என்பதை பிரின்ஸ்டனில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு காட்டியுள்ளது.

இதில் முக்கியமான கண்டுபிடிப்பே என்னவென்றால், பாம்பின் உட்செவி எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான். வோல்ட் மீடர்களுடன் பாம்புகள் வயர்கள் மூலம் இணைக்கப் பட்டன. காற்றில் ஏற்படும் ஒலி அவற்றின் மூளை மீது ஏற்படுத்தும் பாதிப்பு அளவிடப்பட்டது. பெரிய மிருகங்கள் நகரும்போது எழும் ஓசைகள் மற்றும் அதிர்வுகள் எந்த அலைவரிசையில்  உள்ளனவோ, அந்த அலைவரிசை யிலேயே பாம்புகளின் கேட்கும் சக்தியும் அமைந்துள்ளதாக தோன்றுகிறது. எனவே இசை என்பது அவற்றைப் பொருத்த வரையில் அர்த்தம் அற்றது.

மயக்கப்படும் பாம்புகள் அச்சுறுத்தப்படும்போது நேராக எழுந்து நிற்கும். இசைக் கருவி எப்படி நகர்கிறதோ அதன் படி பாம்பும் நகரும். மகுடியின் மீது பாம்பு கொத்தினால், பாம்பு தன்னையே காயப்படுத்திக் கொள்ளும். அதனால் அவை ஒரு முறைக்குப் பின் மறுபடியும் அவ்வாறு செய்யாது. பெரும்பாலான நாகப்பாம்புகளின் விஷப் பற்கள் நீக்கப்பட்டிருக்கும். என்றாலும் தங்களின் நீளம் எவ்வளவோ அந்த அளவு தூரம் வரைதான் அவற்றால் தாக்க முடியும். உங்கள் கைமுட்டியை ஒரு மேசை மீது வைத்துக் கொண்டு  கையினால் கீழ்நோக்கித் தாக்குவது போன்றதுதான் அது.

நாகம்பாம்பின் இயல்பான குணம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே அன்றி,  மற்றவர்களைத் தாக்க வேண்டும் என்பதல்ல.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...