மிகவும் நன்றாகப் படித்து பட்டம் பெற்ற ஓர் இளைஞர் பிரபலமான ஒரு பெரிய கம்பெனியின் உயர் நிர்வாகப் பதவிக்காக நேர்காணலுக்குச் சென்றார்.
முதல் கட்ட நேர்காணலில் வென்றார் அவர்; இறுதியான இரண்டாம் கட்ட நேர்காணல் தேர்வுக்கு முக்கிய இயக் குநர் ஒருவர் முன் இவர் (இவரது வெற்றி வாய்ப்பை உறுதியாக்கிடும்) நேர் காணலுக்குச் சென்றார்.
அந்த இயக்குநர் இந்த இளைஞனின் (CV) எனப்படும் வாழ்க்கைச் சாதனை வரலாற்றுக் குறிப்பினை படித்துப் பார்த்தார். உயர்நிலைக் கல்வியிலிருந்து மேல்பட்டப் படிப்பு வரை எல்லா நிலை களிலும் இந்த இளைஞர் சாதனை முத்திரை பதித்து முன்னேறிய இளை ஞனாகவே இருந்தது கண்டு வியப் படைந்தார்.
இந்த இளைஞனைப் பார்த்து நீங்கள் ஏதேனும் ஸ்காலர்ஷிப் - உதவித் தொகையை - பள்ளியில் பெற்றீர்களா என்று கேட்டார்.
இல்லை என்றே பதில் கூறினான் அவன். அப்படியானால் உனது தந்தை உனக்குச் சம்பளம் கட்டி, படிக்க வைத்தாரா? என்று மேல் கேள்வி போட்டார் அந்த இயக்குநர்! நான் பிறந்து ஓராண்டு ஆன நிலையிலேயே எனது தந்தை இறந்து விட்டார்; எனது தாயார் தான் என்னைச் சம்பளம் கட்டிப் படிக்க வைத்தார் என்று கூறினார் அவ்விளைஞர்.
உங்கள் தாயார் எங்கு வேலை செய்கிறார்? என்று கேட்டார். அதற்கு இந்த இளைஞன் எனது தாயார் துணி களைச் சலவை செய்யும் பணியாளராக வேலை பார்க்கிறார் என்று கூறினார்.
உடனே அந்த இயக்குநர், உன் இரு கைகளையும் விரித்துக் காட்டு என்றார்.
இயக்குநர் இவரது கைகளைத் தடவிப் பார்த்தார்; மிகவும் மிருதுவாக - சொர சொப்பின்றி - அழகாகக் காட்சி யளித்தன.
நீங்கள் எப்போதாவது, அந்தத் துணிகளை அவர் அலசிப் பிழிந்து தூய்மையாக்கும் வேலை செய்யும் போது - வீட்டில் - உதவியது உண்டா? என்று கேட்டார் இயக்குநர்.
அதற்கு அந்த இளைஞர், எனது தாயார் என்னை எப்போதும் நீ நன்றாகப் படிக்க வேண்டும்ப்பா, ஏராளமாகப் படி, நன்றாகப் படி என்றே சொல்லுவார். அதோடு அவர் துணிகளை வேக வேகமாக வெளுத்து சுத்தப்படுத்துவார் என்னைவிட மிக வேகமாக அதைச் செய்யக் கூடியவர் என்று பதில் கூறினார்.
நான் ஒரு வேண்டுகோள் வைக் கிறேன் உனக்கு; இன்று வீடு திரும்பி, உன் தாயார் கையில் எடுத்துத் துவைக்கும் துணிகளை வாங்கி உதவி செய், தூய்மைப்படுத்து நாள் முழுவதும்! மறுநாள் வந்து என்னைப் பார் என்று கூறி அனுப்பி விட்டார்!
வீடு திரும்பிய இந்த இளைஞர் இந்த வேலை நமக்குக் கிடைத்தால் மிகப் பெரிய வாய்ப்பாகவும் வாழ்க்கையில் உயர முன்னேற சிறப்பான படிக்கட்டாக அமையுமே என்று எண்ணிக் கொண்டே, அவனது தாயாரின் கைளைப் பார்த்தார்.
தான் உதவுவதாக துணிகளைக் கேட்டு வாங்கித் துவைத்து அம்மாவுக்கு உதவி யாக இருந்தார்; அன்று. தாயுக்கோ ஒரே ஆச்சரியம்! என்னப்பா இது? என்று கேட்டு பயங்கலந்த குழப்பத்தோடு - மனதிற்குள் மகனின் இந்த மாற்றம் குறித்து எண்ணினார் அந்த அம்மையார்!
கடைசியாக தனது தாயின் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்யும் போதுதான், அதன் சுருக்கங்களையும், காப்பு காய்ச்சிய தடித்த இடங்களையும், காயங்களையும்கூட தடவிப் பார்த்துக் கண்ணீர் விட்டான்!
இந்தக் காயங்களினால் துணிகளைப் பிழியும்போது அவரது தாயின் உடல் நடுநடுங்குவதையும் கண்டவுடன் அவர் மனம் மிகவும் வலித்தது!
தனக்குப் பள்ளிச் சம்பளம் கட்டுவ தற்காக நாளும் துணிகளைச் சலவைச் செய்து, இப்படி அல்லற்பட்டு தனது தாய் உழைத்த நிலை கண்டு ஆற்றாது அழுது கண்ணீர் விட்டான்; தான் பட்டம் வாங்குவதற்கு ஆக தனது தாயார் செய்த அருந்தியாகத்தை - என்ன கடுமையான விலை கொடுத்துள்ளார் என்பதை அறிந்து உணர்ந்து எண்ணி எண்ணி, ஒருபுறம் தனது படிப்பில் முத்திரை பதித்தபோது, வெற்றி வாகை சூடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, தாயின் கஷ்ட நஷ்டம் அதற்குரிய விலை என்பதை அறிந்து மிகவும் நெகிழ்ந்தவனானார்!
பிறகு தாயின் கைகளை அலம்பி விட்டுவிட்டு, அன்றைய தினம் துணி களை இவனே சலவை செய்யும் முழுப் பொறுப்பைத் தாயிடமிருந்து தானே வாங்கி பாக்கியுள்ள துணிகளை முடித்து வைத்து மகிழ்ந்தார்.
அந்த ஓர் இரவில் அவனும் தாயும் மிகவும் நீண்ட நேரம் தாய் அருகில் அமர்ந்து உணர்ச்சி பொங்க ஒருவருக்கொருவர் உரையாடினர் - கண்ணீர்த் துளிகளுக்கிடையே,
அடுத்த நாள் காலை இயக்குநர் அலுவலகம் சென்றார் அவ்விளைஞர்.
இயக்குநரைச் சந்தித்தார். இயக்குநர் கேட்டார்: நீங்கள் நேற்று என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் என்பதை சொல்ல முடியுமா? என்று.
இந்த இளைஞனின் கண்கள் கசிந்தன. கண்ணீர் பொலபொலவெனக் கொட்டியது.
நான் எனது தாயாரின் கைகளி லிருந்து துணிகளை வாங்கி துவைத்து சோப்பிட்டு கசக்கி, பிழிந்து, உலர்த் தினேன். பாக்கியுள்ள எல்லாத் துணி களையும் நானே வெளுத்து அன்று அம்மாவை ஓய்வு எடுக்க வைத்து உதவி னேன்.
இயக்குநர் கேட்டார்: இப்போது சொல்லுங்கள் உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கின்றன? இதற்கு அந்த இளைஞன் அளித்த பதில்கள்:
முதலாவது, ஒருவர்பற்றி உணர்ந்து தெளிதல் பாராட்டுதல் - மகிழ்தல் என் றால் என்னவென்று புரிந்து கொண்டேன்.
இரண்டாவது, என்னுடைய தாயோடு நான் இணைந்து உடன் வேலை செய்தபோதுதான் அவர் தினமும் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக் கிறார்; பருவம் பார்த்து பணியாற்றுகிறார், அது எவ்வளவு கடினமான பணியாக உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!
மூன்றாவதாக, எனது குடும்ப உறவின் அவசியத்தையும், முக்கியத்துவ முதன்மை யையும், என்னால் நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
உடனே, நேர்காணலுக்கு அழைத்த அந்த கம்பெனியின் இயக்குநர் சொன் னார்:
தம்பி, நான் ஏன் உன்னை வீட்டிற்குச் சென்று ஒரு நாள் உன் தாயாருடன் வேலையில், உதவி பிறகு திரும்பு - இன்று போய் நாளை வா என்று சொன்னேன் என்பது புரிந்து விட்டதா?
இப்படிப்பட்ட பெரிய பதவி - பொறுப் புக்கு வருகின்றவர்கள் - தேர்வு செய்யப் படுபவர்கள் - தனது சக ஊழியர்களின் உதவியை, அவர்கள் படும் துன்பங்களை துயரங்களை, உணர்ந்து அதற்கேற்ப மனிதாபிமானத்துடன் அவர்களை நடத்துபவராக எனது நிருவாகி அமைய வேண்டுமே தவிர, வேறு பணம் பெருக்கித் தருவதையே தனது வாழ்வின் இலக்கு என்று கருதிடும் இயந்திர, தன் முனைப்பு மேலோங்கிய மனிதனாக அமையக் கூடாது என்பதாகவே அளவுகோல் வைத்துள்ளோம்.
நீங்கள் அதனைப் பூர்த்தி செய்து விட்டீர்கள்!
உங்களை அப்பதவிக்கு மகிழ்ச்சியுடன் நியமிக்கிறேன், பொறுப்பேற்றுக் கொள் ளுங்கள் என்றார்!
என்ன கற்றுக் கொண்டோம்? - நாம் சிந்திப்போமா?
No comments:
Post a Comment