முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை கேரள மாநில அரசின் வல்லடி வழக்கினால், தேவையில்லாத பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் நினைத்திருந்தால், இதற்கு ஏற் கெனவே முற்றுப் புள்ளியை வைத்திருக்க முடியும்.
142 அடி அளவுக்கு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று இதே உச்சநீதிமன்றம்தானே ஆணை பிறப்பித்தது?
அதனை கேரள அரசு செயல்படுத்தியதா? உச்ச நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தி விட்டு, அதற்குப் பிறகு நீதிமன்றம் வரவேண்டும்; உச்சநீதிமன்ற ஆணை யைச் செயல்படுத்திட மறுப்பது - நிச்சயம் நீதிமன்ற அவதூறு என்று உச்சநீதிமன்றம் கேரள அரசின் காதைத் திருகியிருந்தால், இந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகி இருக்குமா?
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒரு சட்டத்தை கேரள மாநில சட்டமன்றம் எப்படி இயற்றலாம் என்ற வினாவைத் தொடுத்திருக்க வேண்டாமா?
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அணை பலமாக உள்ளது - உடைந்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறுதியிட்டுச் சொன்ன பிறகு, 120 அடிக்குள் தண்ணீரைத் தேங்க வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்வதும், நிலநடுக்கத்தால் அணை உடைய வாய்ப்புண்டு என்று கேரள மாநிலம் சொல்லுவதை அலட்சியப்படுத்தி விடமுடியாது என்று இப்பொழுது உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதும் வினோதமாகவே உள்ளன.
கேரள மாநில அரசாக இருந்தாலும் சரி, உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, அணை பாதுகாப்பானதா - இல்லையா என்பதை முடிவு செய்யும் தகுதி - தொழில் நுட்பம் - பொறியியல் துறையைச் சார்ந்தது என்பதை அறிந்திருக்க முடியும்.
ஏற்கெனவே மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்ட எழுவர் கொண்ட நிபுணர் குழு, திட்ட வட்டமாகவே தெரிவித்து விட்டது - அணை பலமாக உள்ளது - உடையும் அபாயம் ஏதுமில்லை என்று சொல்லி விட்டதே! அத்தோடு அதனை ஏற்றுக் கொண்டு 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இதே உச்சநீதிமன்றமும் கறாராக தீர்ப்பு அளித்துவிட்டதே!
இதற்குப் பிறகும் கூட ஓடி விளையாடு பாப்பா என்ற குழுப்பாட்டு ஏன், ஏன்? இந்தப் பிரச்சினை இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதலை
உண்டாக்கும் அளவுக்கு முற்றிவிட்டதே - இது நல்லதுதானா - தேவையானதுதானா?
மக்களை வெறி உணர்ச்சியின் பக்கம் தள்ளி விட்டால், பிறகு அதனைச் செய்தவர்களே எவ்வளவு முயன்றாலும் எதிர்தாக்குதலைத்தான் சந்திக்க நேரும்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் (விடுதலை 13.12.2011) கேரளாவுக்கு எச்சரிக்கை ஒன்றைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 43 லட்சம் மலையாளிகள் வாழ்ந்து வருவதாக தமிழ்நாடு மலையாளிகள் சங்கம் 2007 இல் அறிவித்தது. இப்பொழுது அந்தத் தொகை மேலும் அதிகரித் திருக்கக் கூடும். தேநீர்க் கடை முதல் பல்வேறு தொழில்களை நடத்தித் தமிழ்நாட்டில் சுமுகமான ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து வரு கிறார்கள். இந்த நல்லுறவைப் பாதிக்கச் செய்யும் ஒரு வேலையில் கேரளம் நடந்து கொள்ளப் போகிறதா என்று தெரியவில்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாரே - அதனை மீண்டும் நினைவூட்ட வேண்டிய அளவுக்கு நிலைமைகள் நாளும் கூர்மையாகி வருவது நல்லதல்ல.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்புவது, தமிழக எல்லைக்குள் வந்து ஆர்ப்பாட்டம் செய்வது, கொடியை நட்டுச் செல் லுவது, தமிழர்களைக் கண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று கேரள மாநிலக் காவல்துறை அதிகாரி பொறுப் பில்லாமல் பேசுவது - இவையெல்லாம் ஒரு சார்பாக நின்று விடுமா என்பதை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
கேரள மாநில மக்களுக்கு மின்சாரம் முதல் காய்கறி கள் வரை தமிழ்நாட்டிலிருந்துதான் அன்றாடம் செல்லு கிறது என்பது கேரள அரசுக்குத் தெரியாதா? தமிழர் களின் பெருந்தன்மையினை பலகீனமாகக் கணக் கிடலாமா?
ஒரு இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இடக்கு செய்யலாமா? இதனால் எவ்வளவு பேர் அடிபடுவார்கள்? எவ்வளவு பேர் உயிர்களைப் பலி கொடுப்பது என்ற வினாவை முன்னாள் தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் பழுத்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் சொல்லும் அறிவுரையை கேரள முதல்வர் சீர்தூக்கிப் பார்த்தால், அதற்கேற்ப நடந்து கொண்டால், இரு மாநிலங்களுக்கும் நல்லது!
குதிரை காணாமற் போனதற்குப் பிறகு இலாயத்தை இழுத்துப் பூட்டுவது புத்திசாலித்தனமா?
No comments:
Post a Comment