Thursday, November 10, 2011

நெஞ்சுப் பொறுக்குதில்லையே!



மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பீடத்தில் ஏறிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  செல்வி ஜெயலலிதா அவர்கள் அரசு ஊழியர்களைப் பழி வாங்கும் பணியில் வழக்கம்போல் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் ஒடுக்கப்பட்ட பெரும்பாலும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தவர்களான சாலைப் பணியாளர்கள் பத்தாயிரம் பேர்களை ஒரு பச்சை மை கையொப்பத்தில் வீட்டுக்கு அனுப்பினார் (7.9.2002).
பத்தாயிரம் பேர் வேலை இழப்பு என்றால் பத்தாயிரம் குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன என்று பொருள். எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்தனர்; மொட்டை அடிப்புப் போராட்டம், பிச்சை எடுக்கும்  போராட்டம் வரை நடத்தினார்கள். 80 பேர் தற்கொலை செய்து கொண்டனர். நத்தம் வீரப்பன் என்பவர் புத்தி பேதலித்தார் என்று தகவல்கள் அலைஅலையாக வந்தபோதுகூட ஆட்சிக் கிரீடத்தைத் தலையில் சூட்டிக் கொண்ட அம்மையார் கிஞ்சிற்றும் சட்டை செய்யவே இல்லை.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பல அறிக்கைகளை விடுத்தார். விடுதலை பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. முதல் அமைச் சரிடம் கழகத் தலைவர் வலியுறுத்தியதும்கூட உண்டு.
அந்தத் தொழிலாளர்கள் திராவிடர் கழகத்  தலைமை நிலையத்துக்கு, பெரியார் திடலுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள் அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் விடுதலைக்கும் கழகத் தலைவ ருக்கும்  அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண் டிருந்தனர்.
கடைசியில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில்  (3.2.2006) அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்புக் கிட்டியது.
இப்பொழுதோ  மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு இவர்களை வெளியேற்றுவதும், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதும் என்பதெல்லாம் தொடர் கதையாகவே ஆகிவிட்டது.
கலைஞர் அவர்கள் செய்ததோ மனிதநேயம்! அம்மையார் செய்வதோ மனித உரிமைக்கு, உணர் வுக்கு விரோதம்!
அதே போல உதவி மக்கள் தொடர்பு அலுவலர் 11 பேர் இந்த ஆட்சியில் திடுதிப்பென்று வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசு என்றால் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கடமையை உடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியோ வேலையில் ஏற்கெனவே இருப்பவர் களைக்கூட வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது; தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்.
வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை வன்முறைப் பக்கம் கொண்டு சேர்க்கிறது என்று சமூகவியலார் கூறுகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்து.
வேலை  வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்குக என்ற முழக்கம் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும் இக்கால கட்டத்தில், பணியில் இருக்கிறவர்களையும் காலி செய்வது என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்தப்படவே முடியாத ஒன்றாகும்.
வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் கதறுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது கல்லும் கரையும் - கண்ணீரும் விடும்! அத்தகைய பரிதாபக் காட்சி அது!
ஆட்சியைப்பற்றிக் குறிப்பிடும்போது மக்கள் நல அரசு (Welfare State) என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் இன்றைய
ஆட்சியோ மக்கள்குறை ஆட்சியாக அல்லவோ நடக்கிறது!
நீதிமன்றம் குட்டுவதற்குமுன்பே, இந்தப் பிரச்சினையில் மறுபரிசீலனை செய்வது இவ் வாட்சிக்கு நல்லது என்று வலியுறுத்துகிறோம்.
அஇஅதிமுக ஆட்சியில் பாதிப்புக்கு ஆளாவோர் அத்தனைப் பேரும் பார்ப்பனர் அல்லாதார்; பலன் பெறுவோர் அனைவரும் பார்ப்பனர்களாகவே இருந்து வருகின்றனர். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் ஒருக்காலும் இதனை அனுமதிக்காது என்பதனை நினைவூட்டுவதும் நமது கடமையாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...