Thursday, November 10, 2011

மகத்தான கொள்கை மாவீரர் எஸ்.எஸ். மணியம் வாழ்க! வாழ்கவே!


திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், உழைப்பால் உயர்ந்து நிற்கும் சுயமரியாதை வீரருமான மானமிகு  எஸ்.எஸ். மணியம் அவர்களுக்கு இன்று 96ஆவது வயது!

நம்  அறிவு ஆசானைவிட கூடுதலான வயது;  கொள்கை வழி லட்சியப் பணி முடிக்கும் பணியாற்றி, வயதில்  அய்யாவையும் மிஞ்சி வாழ்வது கண்டு நாம் மிகப் பெரும் பூரிப்பும் பெருமையும் கொள்கிறோம்!

வேதாரண்யம் அருகில் உள்ள ஆயக்காரன்புலம் மானமிகு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் க. சுந்தரம் அவர்கள் 100 வயதைத் தாண்டியும் இன்று வாழ்கிறார்!

சிதம்பரம் பெரியார் பெருந்தொண்டர் என்.வி.ஆர். என்று அன்போடு அழைக்கப்படுகிற மானமிகு சுயமரியாதை வீரர் அய்யா என்.வி. இராமசாமி அவர்கள் 101, 102இல் வாழுகிறார்!

கடவுள் மறுப்பாளர்கள் இவர்கள்! அதுபோலவே புதுவை பெரியார் பெருந்தொண்டர் மறைந்த ப. கனகலிங்கம் அவர்களது வாழ்விணையர் அம்மா திருமதி வள்ளியம்மாள் அவர்கள் 101 வயது வரை வாழ்ந்தே மறைந்தார்.

கடவுள் ஆசி பெற்ற பலர், சில சங்கராச்சாரியார்கள், போப்புகள், மதக்குருக்கள், மத நிறுவனர்கள் பலரும் மிகக் குறைந்த வயதிலேயே மறைந்தவர்களாகிய வரலாறு உண்டு.

இதிலிருந்து மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் என்ன?

கடவுள் நம்பிக்கைக்கும், வாழ்க்கை நீளுவதற்கும் (Longivity)  துளியும் சம்பந்தம் இல்லை என்ற பாடம் அல்லவா?

திருவாளர் எஸ்.எஸ். மணியம் அவர்கள் சிறுவயதிலேயே மலாய் நாடு, சிங்கப்பூர் சென்று அனுபவ அறிவையும், ஆழ்ந்த தொழில் நுட்பத்தையும் கற்று, பெரியார் பெருந்தொண்டராக மாறியதால் ஏற்பட்ட அளவற்ற தன்னம்பிக்கை, கடின உழைப்பு இவைகளுக்குச் சொந்தக்காரராகி, சுயசிந்தனை, சுய அனுபவம் காரணமாகவே ஒரு தொழிலதிபர் என்ற நிலைக்கு உயர்ந்தவர்.

பெரியார் தொண்டரானதால் அவர் வெறும் முதலாளியாக உயராமல், எடுத்துக்காட்டான தோழமையோடு தொழில் துறை உட்பட அனைவரிடமும் உறவு கொண்டாடும் கொள்கைச் செம்மலாக மலர்ந்தார்.

அவருக்குப் பெருந்துணை அவரது வாழ்விணையரான அம்மா ராசலட்சுமி மணியம் அவர்களாவார். அவர்களது பிரிவு குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம் கொள்கைக் குடும்பமாம் இயக்கத்திற்கே மிகப் பெரிய இழப்பு என்பதை கருப்பு மெழுகுவத்திகளான திராவிட விவசாயப் பெருங்குடி மக்களான இருபாலரும் இன்றும் நினைத்து ஏங்குகின்றனர்.

எனது தொண்டர்கள் - தோழர்கள் - துறவிகளை விட மேலானவர்கள் என்றார் தந்தை பெரியார். ஆம் துறவி களுக்கு மோட்ச ஆசை உண்டு. பெரியார்தம்துறவோராகிய மேலான கருஞ்சட்டையினரோ மோட்சத்தை முடிச்சு மாறிகள் சூழ்ச்சி என்று முழங்குபவர்கள் ஆயிற்றே!

அய்யா எஸ்.எஸ். மணியம் அவர்கள் நல்ல உடல் நலம் காத்து, மேலும் பல்லாண்டு வாழ்ந்து, நம் இயக்கம், கொள்கைக்கு தரு நிழலாய், நிழல் கனிந்த கனியாகி வாழ்வதோடு, பெரியார் கொள்கையாளர்கள் எங்கும் எப்போதும் தோற்கமாட்டார்கள், வெற்றி வாகை சூடியே வீர வெற்றி உலா வருவர் என்று காட்டும் வண்ணம் வாழ வேண்டுமென உலகம் முழுவதும் பரந்துள்ள பெரியார் குடும்பமான பகுத்தறிவாளர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

வாழ்க பெரியார்! வாழ்க மணியனார்! வளர்க பகுத்தறிவு!
கி. வீரமணி
தொண்டர்களின் தோழன்,
தொண்டன்

குறிப்பு: தொலைபேசியில் இன்று காலை நானும் எனது வாழ்விணையரும் அவருக்கு வாழ்த்துக் கூறினோம்.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...