- அய்.அய்.டி.யின் தரம் குறைந்து விட்டதா? யாரை - எதை மனதில் வைத்து நாராயணமூர்த்தி கூறுகிறார்?
- தகுதி திறமை என்பது வெறும் கிரேடுதானா?
மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்களில்
அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டாமா?
இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி - ஒடுக்கப்பட்ட மக்களே எதிர்த்துக் குரல் கொடுப்பீர்!
இடஒதுக்கீடு அமல்படுத்தத் தொடங்கப்படும் இந்தக் கால கட்டத்தில் அய்.அய்.டி.களின் தகுதி குறைந்து விட்டது என்று இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்திகள் குரல் கொடுப்பதை புரிந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்த நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பே தொழில் நுட்பக் கல்வி - உயர் கல்வி அளிக்கும் வகையில், ஜெர்மன் அரசின் பொருளாதார உதவியுடன், பல முக்கிய பெரு நகரங்களில் இந்தியத் தொழில் நுட்ப உயர்கல்வி நிறுவனம் (Indian Institute of Technology (I.I.T) அமைப்புகளை, மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிட்டு, துவக்கி நடத்தி வருகின்றது.
அய்.அய்.டி. எனும் கர்ப்பக்கிரகம்!
இந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வெளியேறிய மாணவர்கள் எல்லாம் மிகவும் அறிவுக்கூர்மையும், தகுதி - திறமை அளவுகோலில் முன்னணியில் இருந்தவர்கள் என்றெல்லாம் கூறி, இதில் சேருவதற்கே தகுதி, திறமை அடிப்படை மட்டுமே; சமூகநீதிக்கே இங்கே இடம் கிடையாது. அரசின் சட்ட விதிகளையும் நுழைய விட மாட்டோம். இது எங்களது அக்கிராகர - உயர்ஜாதிவர்க்க, அல்லது உயர்மட்ட (Elite) வகுப்பின் கர்ப்பகிரகம் (கருவறை) என்பதுபோலவே பல ஆண்டுகளாக நடந்து வந்தது - இப்போதும் பெரிதும் நடந்தும் வருகிறது!
தந்திரங்கள் - சூழ்ச்சிகள்!
இடஒதுக்கீடு கொள்கை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை நடத்தி, சமூகநீதிப் போராளிகள், திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் தொடர்ந்து இடைவிடாது குரல் கொடுத்து வந்தன, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்குக் கதவு திறக்க மனமின்றி சூழ்ச்சிகளை தந்திரமாக செய்தனர் - ஆளும் ஆதிக்க ஜாதியினரும் அதனைச் சார்ந்த அதிகாரவர்க்கமும்.
எடுத்துக்காட்டாக, 27 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு என்றால் அதனைத் தராமல் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகள் கழித்தே தருவதாகவும், அதே அளவுப் பொதுப் போட்டியில் இடங்களை அதிகப்படுத்தி முன்னேறிய ஜாதியினருடன் வாய்ப்புகளைக் குறையாமல் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறி, மிகப் பெரிய தடைகளை, மிகவும் இலாவகமாக செய்து, இன்றும் SC, ST, OBC போன்றவர்களுக்கும் கிராமப்புற பின்னணியிலிருந்து வந்து சேர விரும்பும் மாணவர்களுக்கும் இடம் தராது, வடிகட்டல் முறைகளையெல்லாம் கையாளும் கொடுமையினைப் புரிந்து கொண்ட மக்களோ மிகவும் சொற்பம்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறுகிறார்
இந்நிலையில், இன்ஃபோசிஸ் (Infoysys) அமைப்பினை உருவாக்கிய பிரபல கணினிக் கம்பெனி நிறுவனர் திரு. நாராயணமூர்த்தி என்ற பார்ப்பனர் கூறுகிறார்: அய்.அய்.டி.கள் எல்லாம் இப்போது தனிப் பயிற்சி பெற்று சேரும் மாணவர்கள் காரணமாக மிகவும் தரமிழந்து வரும் நிலை உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்பது போல சில நாள்களுக்கு முன் பேசியுள்ளார்.
உயர்ஜாதி ஊடகங்களோ இத்தகையவர்கள் கொட்டாவி விட்டால்கூட அதை விளம்பரப்படுத்திடத் தயங்க மாட்டார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டு நிலை என்ன?
அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (SC, ST) சரியாக செய்ததில்லை, ஏதோ ஒப்புக்குத்தான் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று காட்டும் வகையில் பல்வேறு தடை ஓட்டப் பந்தய சோதனைகள் வேறு.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு OBC இடஒதுக்கீடு என்றவுடன் இந்த உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டத்திற்கு வேப்பங்காய் கடித்தது மாதிரி வெறுப்பை உமிழும் நிலைதான் என்பது - நாடறிந்த ஒன்றுதானே?
இடஒதுக்கீட்டை வெளியேற்ற சதி
அதனால் இந்த மேலாண்மை மேதாவிகள் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூப்பாடு போட்டு எப்படியாவது இடஒதுக்கீடு அய்.அய்.டி. என்ற (கல்வி) அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று தவஞ் செய்யத் துவங்கி விட்டனர்!
திரு. நாராயணமூர்த்தி போன்ற அறிஞர் பெருமான்களுக்கு நாம் சில சந்தேகங்களை முன் வைக்கிறோம். பதில் அளிக்கட்டும்!
யார் வீட்டுப் பணம்?
அனைத்து மக்களது வரிப் பணத்தில் தானே அய்.அய்.டி.களும் மத்திய கல்வி நிறுவனங்களும் நடைபெறுகின்றன? நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுக (Indirect Tax Payers) வரி செலுத்துவோராக ஏழை எளிய பாட்டாளி; கிராம, நடுத்தர மக்கள் உட்பட பலரும் உள்ள நிலையில் மக்கள் அரசின் கடமை, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டாமா?
இன்னும் ஒருபடிமேலே சென்று கேட்கிறோம். பசியேப்பக்காரனுக்கு முன்வரிசை பந்தியும், புளியேப்பக்காரனுக்கு கடைசி பந்தியில் பரிமாறலும் நடத்தப்படுவதுதானே நியாயம் - சமூகநீதி?
முதல் தலைமுறையில் படித்து வரும் மாணவர்கள் அய்.அய்.டி.யில் பயிற்சி பெற்று வந்து சேருவதால் கெட்டுப் போவது என்ன?
அய்.அய்.டி.யில் படித்தவர்கள் இதுவரை சமூகத்திற்குச் செய்தது என்ன?
இதுவரை அய்.அய்.டி.யில் படித்து தகுதி திறமையில் மிஞ்சி தேர்வாகி வெளியேறிய அறிவின் உச்சங்கள் - இந்தநாட்டில் தங்கி, தங்களை வரி செலுத்திப் படிக்க வைத்த சமுதாயத்திற்கு, நாட்டிற்கு நிர்வாகத்திற்கோ, கல்வி அறிவைப் பரப்புவதற்கோ, தொண்டூழியம் என்ற வகையில் ஏதாவது பங்களிப்புச் செய்துள்ளனரா?
எல்லாம் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சொகுசு பதவி வாழ்க்கையில்தானே உள்ளனர் அந்த மேதாவிகளால் இந்திய சமூக அமைப்பு பெற்ற பலன்தான் என்ன?
தகுதி திறமை என்பது வெறும் கிரேடுகள்தானா?
தகுதி திறமை என்பது வெறும் கிரேடுகள்தானா?
பயிற்சிமூலம் வருபவர்களால் அய்.அய்.டி.களில் கல்விதரம் (Quality Education) கெட்டுப் போகிறது என்று கூறும் நிபுணர்களே, உங்களைக் கேட்கிறோம். தகுதி, திறமை என்று நீங்கள் கூறுவதற்கு வெறும் கிரேடுகளும், மார்க்குகளும்தான் அளவுகோலா அல்லது வாழ்வில் புதிய சிந்தனைகள் - வாகை சூடிய வெற்றிகள் - இவைகள் அளவுகோலா?
ஆப்பிள் நிறுவனர் அய்.அய்.டி.யில் படித்தவரா?
எடுத்துக்காட்டாக, உலகமே கண்ணீர் விட்டு கதறும் மறைந்த ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற அறிவு மேதை - சரித்திர சாதனையாளர் - கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் நின்று போன ‘Dropout’ தானே!
அவரை அய்.அய்.டி. பரிட்சை எழுதச் சொன்னால் வெற்றி பெற்றிருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ், திரு. நாராயணமூர்த்தியை விட பணத்தில் அறிவில் அதைவிட அறக்கொடை செய்வதில் மிஞ்சியவர்; அவர் எவ்வளவு படித்து தகுதி, திறமை - (அய்.அய்.டி. அளவுகோலில்) உள்ளவர்? அவரும் ‘Dropout’ தானே!
சமூகத்தின் அடித்தளத்திலிருந்து தட்டுத் தடுமாறி வருபவர்களை தட்டிக் கொடுக்காமல், குட்டி வெளியே அனுப்புவது அசல் பழைய பார்ப்பன ஆசிரியர்கள் கையாண்ட மனுதர்ம முறை அல்லவா?
நவீன துரோணாச்சாரிகள், ஏகலைவன்களின் கட்டை விரலை தட்சணையாக வெட்டிக் கேட்டு பெற்று, வில்லை எடுக்காது சூழ்ச்சி செய்தது போலவே இப்போதும் துரோணாச்சாரியார்கள் புதுப்புது ரூபத்தில் வருகின்றனர்!
ஒடுக்கப்பட்டேரே! விழிப்போடு இருந்து எதிர்ப்புக் குரல் கொடுங்கள் - முளையிலே இந்த சூழ்ச்சியைக் கிள்ளி எறியுங்கள்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாங்கள் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா?
- காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் அரசு எடுக்கும் நல்முயற்சிக்கு ஒத்துழைப்போம்!
- இந்தியக் கடற்படைக்கு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது
- விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் இடையில் இரண்டே மாதங்கள்!
- மகத்தான கொள்கை மாவீரர் எஸ்.எஸ். மணியம் வாழ்க! வாழ்கவே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- உள்ளாட்சித் தேர்தலிலும், திருச்சி மேற்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க.விற்கு ஆதரவு!
- விடுதலையை வாங்கிப் படியுங்கள் இனமானக் கேடயத்தை ஓங்கிப் பிடியுங்கள் புதிய அம்சங்களோடு விடுதலை வெளிவரும்!
- 2ஜி அலைக்கற்றை வழக்கு : உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை வழக்கில் சேர்க்கத் துடிக்கும் பின்னணி என்ன?
- திருச்சி கட்டுமான நண்பர்கள் நேபாள விமான விபத்தில் பலியானதற்கு இரங்கல்
- பெரியாரே நம் ஒளி! விழி!! வழி!!!
Comments
http://www.ndtv.com/article/india/poor-quality-of-students-entering-iits-narayana-murthy-138260
I disagree with his views on english and of letting go of government control. But he has not said anything related to reservation. As he says, one can get into IIT by knowing how to write answers to some types of questions without any deep knowlege just by going to coaching classes which just give out ready made formulas. Most students including brahmins get into IIT this way only. Thats his main criticism which I feel was not wrong.
Why is his caste unnecessarily dragged and made an issue?. Perhaps, old prejudices die hard.
Aanaal IIT staff and faculty reservation when will be implemented