அடடா, நம் மக்களின் வறுமைக் கொடுமையை விட மிகமிகப் பெருங் கொடுமை இந்தியாவின் வறுமைக் கோட்டு அளவீடு - மதிப்பீடு பற்றிய தகவல்தான்!
நகர்ப்புறத்து மக்களுக்கு 32 ரூபாய், கிராமத்து மக்களுக்கு 26 ரூபாய் என்ற அளவுகோலை எப்படி அளந்து முடிவு செய்தனரோ என்ற பிரச்சினை நாட்டிலேயே மிகப் பெரிய சர்ச்சையாகி, பிறகு ஒரு வகையாக அதை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது நமது திட்டக்குழு!
நமது திட்டக்குழு துணைத் தலைவர், உறுப்பினர்கள் பெரிதும் நுனிநாக்கு ஆங்கிலப் புலமையும், ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்ட் படிப்பும் கொண்ட, வறுமை, பசி, ஏழ்மை என்பதையே வாழ்வில் அனுபவித் தறியாத வல்லுநர்கள்.
பிரஞ்சுப் புரட்சியின்போது, அந்த அரசி வம்சத்தைச் சேர்ந்த மேரி அன்டாய்னெட் என்பவரிடம் மக்களுக்கு ரொட்டி கிடைக்காமல் பசியால், பஞ்சத்தால் அவதியுறுகிறார்கள் என்று சொன்னவுடன், அந்த அம்மையார் மிகவும் இரக்கப்பட்டு, அப்படியானால் அவர்களை கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்கள் என்றாராம்.
அவரின் சகோதரர்களே பல உறுப்பினர் பெருமக்கள்; கொள்ளைச் சம்பளம். திட்டக் கமிஷனே ஒரு வெள்ளை யானை.
வண்டியின் அய்ந்தாவது சக்கரம் என்ற கருத்தும் துவக்கத்திலிருந்தே பலரால் சொல்லப்படுவதாகும்.
இதுவரை செலவழிக்கப்பட்ட பல லட்சம் கோடிகளால் ஏற்பட்ட பலனை மதிப்பீடு (ஹளளநளள) செய்ய வேண்டிய தருணம் இது.
பட்ஜெட், பல்குழுக்கள் என்று உள்ளதற்கு ஆகும் செலவை மிச்சப் படுத்தினாலே பல ஆயிரம் மக்களுக்கு உணவும், கல்வியும் தரலாமே!
சம்பள விகிதங்கள் எவ்வளவு? விவசாயி பெறும் வருவாய் எவ்வளவு? ருடிசபயளைநன ளநஉவடிச அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பெறும் வருமானம் - தினக்கூலி எவ்வளவு?
வீடு கட்டுபவருக்கு வீடு உண்டா? நகை செய்பவருக்கு நகை நட்டு உண்டா? துணி நெய்துதருபவருக்கு அணிய ஆடை உண்டா? பட்டுப் புடவைக்குத் தறியும் நெசவுப் பாவும் செய்பவர்கள் வீட்டுப் பெண்களுக்கு குறைந்தபட்சம் ஓரிரு பட்டுப் புடவையாவது உண்டா? வறுமைக் கோட்டை, பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் தேடிக் கொண்டுள்ள கனதனவான்கள், ஆள்வோரில் அறிவு ஜீவிகள் கொஞ்சம் கூழுக்கு உப்பு தேடும் உழவர்களைப்பற்றி எண்ணட்டும்! பிறகு தெளிவாகிவிடும்.
ஏன் நக்சல்பாரிகள் முளைக் கின்றனர்? வறுமை, பசி, வேலையின்மை தானே மக்களை கலவரம் செய்யத் தூண்டுவது, மலைவாழ்மக்கள், கிராம மக்களின் கனிம வளம் மற்றும் மண்ணுரிமையைப் பறிமுதல் செய்து, புதிய கோடீஸ்வரர்கள் தங்க நாற்காலி போட்டு அமருகின்றனர். அதைவிட திருப்பதி, குருவாயூரப்பன், சபரிமலை அய்யப்பனாகிய கல் முதலாளிகள், திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமிகளின் திறக்கப்படாத அறை உள்பட எவ்வளவு தங்கம் முடக்கம்!
வறுமையை விரட்ட என்ன செய்ய வேண்டும்? இங்கெல்லாம் கல்லுக்கும், கல் நெஞ்ச முதலாளித்துவ சுரண்டல் காரர்களுக்கும் பாதுகாப்பு அளித்து விட்டு, வறுமைக்கோட்டை வரைய பூதக்கண்ணாடியைத் தேடி ஓடினால் என்ன பயன் விளையும்? வாக்கு வங்கியை ஏமாற்றிடத்தான் இந்த முதலைக் கண்ணீரில் மிதக்கும் முத்தண்ணாக்கள் பாடங்களைக் கற்பார்களா?
No comments:
Post a Comment