Wednesday, October 5, 2011

அந்தோ தேசிய ஒருமைப்பாடே!



கேரள மாநிலத்தில் ஆளும் கட்சிகள் மாறி னாலும் முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழ் நாட்டுக்கு எதிராகச் செயல்படுவதில் மட்டும் மாற்றம் இல்லை.

142 அடி உயரத்திற்கு அணையில் தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்ள கேரள அரசு தயாராகவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காது தனக்குத் தானே அணை பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டது கேரள அரசு.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் சட்டம் இது. கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில், உச்சநீதி மன்றம் கடுமையான வகையில் தீர்ப்பினைக் கொடுத்திருக்கவேண்டாமா?

மற்ற மற்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் இப்படித்தான் நடந்துகொள்கிறதா?
புதிதாக இன்னொரு குழுவை அமைத்து அணையின் பலத்தை ஆராயச் சொல்லுகிறது! ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு என்ன மரியாதை?

குடி தண்ணீருக்காக, விவசாயத்துக்காகத் தவிக்கிறது தமிழ்நாடு.

முல்லைப் பெரியாறு நீர்ப் பாசனத்தால் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் நிலத்தின் அளவு 2 லட்சம் ஏக்கராவாகும்.

136 அடியாக தண்ணீர் குறைக்கப்பட்டதால் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாகும் பரிதாப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டதே!
இரு போக சாகுபடியாக இருந்த நிலை மாறி ஒரு போக சாகுபடியான நிலத்தின் அளவு 86 ஆயிரம் ஏக்கராகும். இதன்மூலம் விவசாய உற்பத்தியில் ஏற்படும் நட்டம் ரூ.55.80 கோடியாகும்.
ஆண்டு ஒன்றுக்கு மின் உற்பத்தி இழப்பு ரூ.75 கோடியாகும்.

ஆனால், கேரளாவுக்கு என்ன நஷ்டம் - கஷ்டம்? பாசன வசதி பாதிப்பா? குடிநீர் பாதிப்பா? அரபிக் கடலில் தண்ணீர் விழுந்து நாசமாகிறது.

ஒரே ஒரு காரணத்தை திருப்பித் திருப்பிச் சொல்லி கட்டி அழுகிறது. அணை பாதுகாப்பாக இல்லை. ஒரு நூறு ஆண்டு காலம் ஆகிவிட்டது அணை கட்டப்பட்டு; அணை பலமாக இல்லை. அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் செத்து மடிவார்கள் என்று ஓலமிடுகிறது.

136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது என்பதற்குக் கேரள அரசு சொன்ன காரணங்கள் பன்னிரெண்டு. அந்தக் காரணங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றையும் நியமித்தது. கேரளா கூறும் 12 காரணங்கள் அத்தனையும் உண்மைக்கு மாறானது என்று அறிக்கை கொடுத்தது வல்லுநர் குழு.

அணையில் நிமிடம் ஒன்றுக்கு 49 லிட்டர் தண்ணீர் கசிகிறது என்று காரணம் கூறப்பட்டது.

1972 இல் கேரளாவில் கட்டப்பட்ட குட்டியாடி அணையின் நீர் கசிவு என்ன தெரியுமா? நிமிடம் ஒன்றுக்கு 249.77 லிட்டராகும். 1966 இல் கட்டப்பட்ட பம்பா அணையின் நீர் கசிவு நிமிடம் ஒன்றுக்கு 96 லிட்டராகும்.

கேரளா சொல்லும் எந்த ஒரு காரணமும் அறிவுக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும் உகந்ததல்ல.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது - மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

மத்திய அரசு என்பதன் பொருள் என்ன? என்ற கேள்விதான் எழுகிறது.

தேசிய நீரோட்டம் பேசும் கட்சிகள் நதிகள் நீரோட்டத்தில் எப்படி நடந்துகொள்கின்றன என்பது முக்கியம் அல்லவா? தேசிய நீரோட்ட அணையை அநேகமாக இந்த நதிகள் நீரோட்டம்தான் உடைக்கும் என்று தோன்றுகிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனி தனைக் கடித்த கதைபோல தமிழகத்தை முற்றாக வஞ்சிக்கும் வகையில் புதிய அணை ஒன்றைக் கட்டப் போகிறதாம் கேரள காங்கிரஸ் அரசு. அந்தோ தேசிய ஒருமைப்பாடே, - உன் கெதி அதோ கெதிதானா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...