Monday, October 10, 2011

கட்டவேண்டியவை பாலங்களே தவிர சுவர்கள் அல்ல!


கட்டவேண்டியவை பாலங்களே தவிர சுவர்கள் அல்ல!

அண்மையில் நியூமென் என்ற அறிஞர் ஒருவரின் பொன்மொழி - அறிவுரை ஒன்றைப் படித்தேன்.

மனிதர்களில் பலர் அய்யோ எனக்கு (உதவிடவோ தன்னிடம் அன்பு, பாசம் காட்டவோ) என்று யாரும் இல்லையே என்று அங்க லாய்ப்பதைப் பார்க்கிறோம். அந்த ஆதங்கம் அவர்களை நொந்து நூலாக்கிவிடவும் கூடச் செய்கிறது. ஆனால் அவர்கள் அந்நிலை ஏன் என்று தங்களைப் பற்றிய ஒரு சுய பரிசோதனையைக் கூடச் செய்வ தில்லை என்பதுதான் அவர்களின் முக்கிய குறைபாடு (குற்றம் அல்ல).

மேற்காட்டிய அறிஞர்தம் பொன் மொழி இவர்களைப் போன்றவர்களது நோயை நன்கு பரிசீலித்து அதற் குரிய சிகிச்சை முறையையும் கூட தந்திருப்பதாகவே நமக்குப் புரிந்தது!

மனிதர்களில் பலர் தாங்கள் தனித்தே விடப்பட்டுள்ளோமே, யாருமே நம்மைப் பற்றிக் கவலைப் படவோ, அக்கறை எடுத்துக் கொள் ளவோ முன்வரவில்லையே என்று நினைப்பதற்கு மூல காரணம் வேறு யாருமல்ல; அவர்களே!  வியப்பாக இருக்கிறதா  இந்த விடை உங்க ளுக்கு?

அந்த அறிஞர் அற்புதமாகச் சுட்டிக் காட்டுகிறார் அங்குள்ள நிலையை. அத்தகைய தனிமனிதர்கள், தங்கள் உள்ளத்திற்குள் பாலங்களைக் கட்டுவ தற்குப் பதில் மதில் சுவர்களைஅல்லவா எழுப்பி இருக்கிறார்கள். பிறகு இவர் களுக்கு மிஞ்சுவது மதில் சுவர்களுக் கிடையேயான சிறைவாசம்தானே!

சுவருக்குப் பதில், பாலம் கட்டியி ருந்தால் துண்டாக தீவாக இருந்தவர்கள், இணைக்கப்பட்டு இவருக்கு மகிழ்ச்சியும், நட்பும் பெருகி, பாசமழையில் இவர் குளித்து மகிழ்பவராக இருப்பாரே! அதைச் செய்ய ஏன் இவர் தவறினார்? தவறியது கூட அல்ல, தனித்தே இருக்கும் நிலைக்கு மதில் சுவரும் அல்லவா கட்டிக் கொண்டு நிற்கிறார்.

பின்எப்படி இவர் நல்ல நட்புறவுத் தென்றலை அனுபவிக்க முடியும்?

தங்களது நண்பர்கள், சுற்றங்கள், பழகுபவர்களிடம் தன்முனைப்போடு பேசி, அவர்களின் பாசத்தைப் பெறுவதற்குப் பதிலாக வெறுப்பையும், ஆத்திரத்தையும் சம்பாதித்துக் கொண்டால், இவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது நண்பர்கள், சுற்றத்தினர், அய்யோ, அந்த மனுஷனா? என்று ஒதுங்கிட ஆரம்பித்து விடுவார் களே!

யாரையும் துச்சமாகக் கருதுவது, தேவையில்லாமல் பொதுஇடங்களில் தனது உற்ற நண்பர்களைக் கூட கேலி, கிண்டல், நையாண்டி செய்து, தனது அறிவின் மேதாவிலாசத்தை அரங்கேற்று வது, பிறகு தனக்குரிய நியாயமான இடத்தைக் கூட இழந்து, ஆதரவற்ற அனாதையாகி தன்வாழ்வைமுடித்துக் கொள்ளும் பரிதாபம் போன்ற நிலைக்கு மற்றவர்களா காரணம்? சமூகமோ, ஊரோ, உற்றாரோவா காரணம்? இல்லையே - இந்த குணம் கொண்டவர் தானே!

என்னிடம் நண்பர்களாக இருந்த சிலரை நான் படித்ததுண்டு.

புத்தகங்களைப் படிப்பதை விட மனிதர் களைப்  படிப்பது நமக்கு மிகவும் பயன்படும் - பாடம் பெற்று நாம் அந்தத் தவறு செய்யாதவர்களாக, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் பாடபுத்தகங்களாகவும் கூட இருப்பார்கள் - இருந்திருக்கிறார்கள்!
சிலருக்கு அடங்கிப்போகும் சுபாவம் இயற்கையிலே உண்டு. அத்தகையவர்களை நாம் கேலிக்குரியவர்களாக ஆக்கி மகிழ்தல் மிகப் பெரிய துன்புறுத்தும் கொடுமை அல்லவா?

அவர்களுக்கும் மனம் உண்டு, வருத்தங்கள், கோபதாபங்கள், வேதனை, துயரம் என்ற உணர்ச்சிகள் உண்டு என்பதை நாம் மறந்துவிட்டு, நமது பாதை ஒரு வழிப் பாதை என்று கருதியா உரிமை எடுத்துக் கொண்டா செல்வது?

அப்படிப்பட்டவர்களை நாம் எப்படி நடத்திட வேண்டும்?  மதில் சுவருக்குள் அவர்களையும் அடைத்து, அவர்களைத் தாக்கும் கொடூரம் மிகுந்தவர்களைப் போல நாம் நடந்து கொண்டால், நாம் மனிதர்களிடையே பாலங்கள் கட்டுவ தற்கு, பந்த பாசங்களை வரவழைப்பதற்கு பதிலாக, மதில்களைக் கட்டி அவர்களை மட்டுமல்ல, நம்மையும் சிறைக் கைதி களாக்கிக் கொண்டு விடுதலை பெறாத ஆயுள் கைதிகளாக வாழலாமா?

எனவே எவரையும் அன்பால் கட்டிப் போடுங்கள் - அதிகாரத்தால், ஆணவத் தால்,  அடக்குமுறை எல்லைகளால் பணிய வைக்க நினைக்காதீர்கள்!

நம்மிடம் பணியாற்றுபவர்களிடம் கூட நாம் இந்த இலக்கணத்தோடு நடந்து கொண்டால், அவர்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள மதில் சுவர்கள்-மனங்களால் எழுப்பப்பட்டவை இடிந்து விழும்; பாலங்கள் கட்டப்பட்டு, பாசப் பயணம் இனிதே நடைபெறும் இல் லையா? சற்று நிதானித்து யோசி யுங்கள்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...