Saturday, September 3, 2011

முன்னே-ஹசாரே-பின்னே-யார்


அப்பழுக்கற்ற அண்ணாவின் பெயரை நினைவுப்படுத்தும் ஆபத்தான அன்னா ஒருவர் புதிதாகக் கிளம்பியுள்ளார். ஊழல் ஒழிப்பு என்ற 2010ஆம் ஆண்டு ஃபேஷனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் பணியாளர்களான அய்.டி.சம்பளக்காரர்கள் இந்த ஹசாரேவைக் காந்தியாக வருணிக்கிறார்கள். (காந்தியைப் பற்றி முழுமையாகப் படிக்காதவர்கள் அப்படித்தான் நினைக்க முடியும்). தேசியக் கொடிக்கு கிராக்கி ஏற்பட்டு விட்டதாம். தேசபக்த வியாபாரிகளின் புளகாங்கிதம் ஒரு பக்கம். நான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்று நான் சொல்லும் ஜன் லோக்பாலைத்தான் சட்டமாக்க வேண்டும் என்று சர்வாதிகாரம் செய்கிறார்; தேவைப்பட் டால் ஆயுதம் ஏந்தவும் தயார் என உண்ணாவிரதத்தில் பேசியுள்ளார் இந்த மனிதர். இவரைத்தான் அகிம்சாவாதி என்கிறார்கள். இந்திய ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக மணிப்பூரின் மனித உரிமைப் போராளி அய்ரோம் சர்மிளா உண்ணாவிரதம் இருந்து கொண்டிருப்பதை எழுதாத, பேசாத ஊடகங்கள், கங்கையைக் காக்க உண்ணாவிரதம் இருந்த  சாமியார் நிகாமானந்தா செத்தபோது வாய் மூடியிருந்த ஊடகங்கள் ஹசாரேவுக்குக் கொட்டிமுழக்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரரான ஹசாரேவுக்குக் கூட்டம் சேர்ப்பவர்கள் சங் பரிவார்கள்தான் என்கிற செய்தியும் வெளியாகி யுள்ளது. ஆர்.எஸ்.எஸின் அபிமானப் பாடலான முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் பட்டினிப் போராட்டம் வளாகத்தில் பாடப்படுகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் செலவழிக்கப்படுகிறதாம். ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாகச் செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான கபீர் மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது.

ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் கபீர் அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தைக் கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்குப் பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்ப்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு டையவர். இவை ஒருபுறம் இருக்க, இவரது இன்னொரு முகம் என்ன என்பதை சமூக நீதியாளர்களும், சமூக ஆர்வலர்களும் படம் பிடித்துக் காட்டுகின்றனர். அன்றைய முந்திரா ஊழல் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியின் ஆயுதபேர ஊழல் வரை காணாமல் போயிருந்த ஹசாரே இப்போது ஏன் திடீரென ஊழல் எதிர்ப்பு முழக்கமிடுகிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால், நீண்ட காலமாக சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் போராடிவரும் சில சமூக ஆர்வலர்களின் கருத்துகள் இதோ:

காஞ்சா அய்லய்யா (ஆந்திராவைச் சேர்ந்த தலித் சிந்தனையாளர்):
ஹசாரேயின்  இயக்கம் சமூக நீதிக்கு எதிரானதும், மனுதர்மத்தை ஆதரிப்பதும் ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

அனூப் கேரி (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வியில் உதவும்  இன்சைட் ஃபவுன்டேஷன் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்):
ஹசாரே இயக்க ஆதரவாளர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்கள் தெளிவாக ஒரு ஜாதிய உணர்வைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் மொழி, அடையா ளங்கள் இயல்பாகவே உயர்ஜாதி இந்துத் தன்மையைத் தெளிவாக எதிரொலிப்பதாகவே இருக்கின்றன. ஊழலுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரையும் தூண்டிவிடுவதற்கு வலதுசாரி இந்து தேசப்பற்று பயன்படுத்தப்படுகிறது. ஊழல் என்பது வெறும் கையூட்டு, லஞ்சம் மட்டுமே அல்ல; எங்களைப் பொறுத்தவரை ஜாதிவெறிதான் ஊழல், ஜாதிவேறுபாடு காட்டப்படுவதுதான் ஊழல்; அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இட ஒதுக்கீட்டுக்கான பல இடங்களை நிரப்பாமல் இருப்பதுதான் ஊழல்; இவைபற்றி எல்லாம் பேசுவதற்கு ஹசாரேயின்  குழு தயாராக இருக்கிறதா? ஊழலுக்கு எதிராகப் போரிடுவதில், அதனை ஒரு சமூகப் பிரச்சினையாகக் காண்பதற்கும் மேலாக, ஒருங்கிணைந்த சமூக விவாதங்களை, கலாச்சார மாற்றங்களை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். ஆனால், அரசியல்வாதிகள் மட்டுமே ஊழல் பேர்வழிகள் என எல்லா மக்களும் நம்பவேண்டும் என்று இவர்கள் விரும்பு கிறார்கள். இது ஒரு தவறான ஊகமாகும். பிறரைக் குற்றம் கூறி தாங்கள் தப்பித்துக் கொள்ளும் இந்த வழி நமது ஜனநாயக நடைமுறைக்கு ஆபத்தானது.

ராஜேஷ் பாஸ்வான்  (ஜவஹர்லால்  நேரு பல்கலைக்கழகம்)

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்களிடையே  இந்த இயக்கம் அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்தில் தங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்ற இத்தகைய வழிகள் கடைபிடிக்கப்படலாம் என்பதே தாழ்த்தப்பட்டவர் என்ற முறையில் எங்களது அச்சம்.
அருணா ராய்
(முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலர், தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணமானவர். "லோக்பால்" எனும் கருத்தை முதலில் முன்னெடுத்ததே இவர் தலைமையிலான தகவல் அறிவதற்கான மக்கள் உரிமை தேசியப் பிரச்சார அமைப்புதான்): ஹசாரேவின் லோக்பால் உண்மையில் ஜனநாயகத்துக்குக் கேடுசெய்யும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளைக் கொண்ட அமைப்பிடம் உச்சபட்ச அதிகாரத்தை அளிப்பது மிகப்பெரிய கேடாகவே முடியும். அதிகாரம்தான் ஊழலை உண்டாக்குகிறது. உச்சபட்சமான அதிகாரம் என்பது உச்சபட்சமான ஊழலையே உருவாக்கும். இந்தியாவில் 'நீதித்துறை, நிருவாகத்துறை, நாடாளுமன்றம் - இவற்றுக்கு இடையே ஒரு அதிகார சமநிலை உள்ளது. ஒரு அமைப்பு தவறு செய்தால், மற்றொரு அமைப்பு தட்டிக்கேட்க முடியும். ஆனால், வெறும் தன்னிச்சையான அதிகாரிகள் சிலரை இதற்கு மேலாகக் கொண்டுவர முயல்வது ஜனநாயகத்தைக் கொலை செய்வதாகும் என்று கூறும் அருணா ராய் நர்மதா அணை எதிர்ப்புப் போராட்டத் திற்கு இதைவிடப் பெரும் கூட்டம் கூடியது, அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்கிறார்.
அருந்ததி ராய் (இலக்கியவாதி, சமூக ஆர்வலர்):
ஹசாரே உண்ணா விரதம் இருக்கும் அதே சமயத்தில்தான் தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக பத்தாயிரம் பேர் உண்ணாவிரதம் இருக்கி றார்கள். அதுகுறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாதது ஏன்? ஹசாரேவின் வீடியோ செய்தி திகார் சிறைக்கு உள்ளே பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. வேறு எந்த ஒரு போராட்டத்திலாவது போராடுபவர் சிறைக்கு உள்ளே இருந்து தொலைக்காட்சியில் பேசமுடியுமா? அன்னா ஹசாரே போராட்டம் சமூகத்தின் மேல்தட்டு மக்களின் போராட்டம். மாவோயிசப் போராட்டம் என்பது அடித்தட்டு மக்களின் போராட்டம். ஆக, அநீதிக்கு எதிராகப் போராடுவது முக்கியமல்ல, யார் போராடுகிறார் என்பதுதான் ஊடகங்களுக்கு முக்கியம் என்கிறார் அருந்ததி ராய்.

நிலத்தையும் வாழ்வாதாரங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழக்கும் மக்கள் எவ்வாறு வந்தே மாதரம் என்றும் பாரதமாதாகீ ஜே என்றும் எப்படிப் போராட முடியும்? ஹசாரே ஆதரவாளர்கள் "நீங்கள் எங்களை ஆதரிக்காவிட்டால், நீங்கள் உண்மை இந்தியர்களே இல்லை" என மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். "தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஊடகங்களை யும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்" என்கிற இந்த ஒரு கோரிக்கையைக் கேட்டால் அன்னா ஹசாரே கூட்டம் ஓடி ஒளிந்துவிடும். ஏனெனில், போராட காசு கொடுப்பதும் ஓசியில் விளம்பரம் கொடுப்பதும் அவர்கள்தானே!

தொகுப்பு: அன்பன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...