Sunday, September 18, 2011

தந்தை பெரியார் - மறைமலை அடிகள் - திரு.வி.க. அடிகளும் ஈ.வே.ராவும்


இருபதாம் நூற்றாண்டைப் புத்தூழி பூத்த காலம் என்று கூறிவிடலாம். உலகெங்கும் உரிமை உணர்ச்சி வெள்ள மாய்ப் பெருக்கெடுத்ததும், தொழிற் பெருக்கமும், அதனால் நேர்ந்த எண் ணிலா மாற்றங்களும் உலக மக்களிடையே புத்தம் புதிய கருத்துக்களை - வாழ்க்கை முறைகளை உண்டாக்கியதும், மொழி, சமயம், கலை, நடை உடை பாவனைகளில் மாறுபாடுகள், மறுமலர்ச்சிகள் தோன்றி யதும், வாழ்க்கை இன்பங்களை நுகரும் பேராவலும், அதற்கான வாய்ப்புக்கள் மிக்கதும் இக்காலமேயாகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாகப் போற்றி வந்த- மாற்றமில்லாப் பலவகையான பழக்க வழக்கங்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நற் கருத்துகளை நாட்டிடைப் பரப்பப் பற்பல கிளர்ச்சிகளும், எழுச்சிகளும் ஏற்படக் காரணமாகவிருந்த இந்நூற்றாண்டை வாழ்த்துதல் வேண்டும். நன்மையில் தீமையும், தீமையில் நன்மையும் விளைதல் மாற்றரிய விதிகளாகும்.

இவ்வெண்ணங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அடிகளுக்கும், ஈ.வெ.ரா. என்னும் பெரியார் ராமசாமி நாயக்கருக்கும் நேர்ந்த தொடர்புகளையும், நட்பின் இனிமைகளையும் இங்கு ஆராய்தல் வேண்டும். அப்போதுதான் உண்மையான செய்திகளை உணர இயலும். அடிகளைப் பற்றிய தன்மைகளை இதுகாறுங் கண்ட அவர் வரலாற்றால் நாம் உணர்ந்து கொண்டிருப்போம். ஆனால், நம் கண்ணோட்டத்தில், பெரியாரைப் பற்றிய தன்மைகளில் முதன்மையான சிலவற்றை இங்குக் கூறியாக வேண்டும். அவற்றால் அடிகள்- பெரியார் தொடர்பு களை நன்கறிதல் கூடுமன்றோ!

ஈ.வே.ரா.

கோயம்புத்தூர் சீமையைச் சார்ந்த ஈரோட்டிலே உயர்வுற்றதோர் குடியிலே பெருஞ்செல்வராய் வைணவத்தில் ஆழ்ந்த பற்றுடையராய் விளங்கிய வேங்கடசாமி என்பாரின் புதல்வராய்த் தோன்றியவரே ஈ.வே.ரா. இவர் தாய்மொழி கன்னடம். உடற்கட்டும், ஆன்ற உடலமைப்பும், இளமை வளமும், எழில் வடிவமும், கூர்த்த மதியும், போராட்ட உணர்ச்சியும் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தன.  அன்பும், அரிய நற்பண்புகளும் மிக்க இவர்பால், இளமையில் அடங்காத் தன்மைகளும், முரட்டுக் குணங்களும், பிடிவாதமும் ஏராளமாம். பள்ளிப் படிப்பில் இவர் ஆர்வம் கொள்ள வில்லையாயினும் தமிழிலக்கியங் களை, அதுவும் வைணவம் தொடர்பான நூல்களைத் தமது காளைப் பருவத்தில் இவர் ஓரளவு கற்றுச் சுவை கண்டவர்.

செயற்றிறனும், ஆட்சி வன்மையும், தாம் மேற்கொண்ட பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றும் ஆற்றலும் இவற்றிற்கேற்ற தோற்றமும் சான்ற இவர் ஈரோடு நகரசபைத் தலைவராயமைந்து நகருக்காற்றிய நற்பணிகளைத் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்கள் என்ற கோட்பாட்டைத் தமது திறமான ஆட்சி முறைகளால் சுக்கு நூறாக்கிய செம்மலரிவர்.

பொதுப் பணியில் ஆர்வங் கொண்ட இவர், அக்காலத்து நிகழ்ந்த நாட்டுரிமைக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு உண்மையுடன், ஊக்கத்துடன் அரியபணிகள் பல புரிந்தார். அதனால், தமிழ் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அந்நிலையத்தைச் செப்ப முறச் சீர்திருத்தி விடுதலைப் போருக்குப் பெருங் கிளர்ச்சி செய்தார். காந்தியடிகள் வழிநின்று அப்போரில் ஈடுபட்டார். காற்றெனப் புயலெனத் தமிழகமெங்கும் உலவித் தம் அரிய பெரிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளால் உரிமைக் கிளர்ச்சித் தீயை எங்கும் மூட்டினார்.  பன்முறை சிறை சென்றார்.

இத்துடன் தீண்டாமை விலக்கு, மது விலக்கு, கதர் பரப்பு, மாதர் முன்னேற்றம், சாதியொழிப்பு, மூடப் பழக்கங்களை ஒழித்தல் முதலிய பல பணிகளிலும் சிறந்த தொண்டாற்றினார். இவர் உண்மைப் பணி, தியாகம், அஞ்சாமை, ஆன்ற பண்புடமை கண்டு அன்றைய தமிழகம் இவரைத்தன் தலைசிறந்த தொண்டராகத் தலைவராக ஏற்றுக் கொண்டாடி மகிழ்ந்தது.

பெரியார் மாற்றம்

1924 வரையில் மேலே கூறியவாறு தேசத் தொண்டுகளில் ஈடுபட்டு அரும் பணிகளாற்றி உயர்ந்த பெரியார், பின்பு, பார்ப்பனரல்லாதார் பக்கம் நின்று அவர் உயர்வுக்காகப் பாடுபடலானார். அதனால் கடுமையான பிராமணர் எதிர்ப்பில் இறங்கிவிட்டார். எதிலும் மிக முற்போக் காளராய் முனைந்து நிற்கும் இவர் இவ்வியக்கத்தின் முன்னணியில் நின்று தொண்டாற்றலானார். அதனால், பார்ப் பனரல்லாதார், தம் குடும்பச் சடங்குகளில் பார்ப்பனர்களைக் குருமார்களாகக் கொள்ளலாகாது, அவர்கட்கு எவ் வகையிலும் உதவி செய்தல் கூடாது, அவர்கட்கு ஆக்கந்தரும் காங்கிரசை ஒழித்தல் வேண்டும். தமிழ் தன்னுரிமை பெறவேண்டும். தமிழ்ப் புலவர்களைப் போற்றல் வேண்டும். வடமொழியினும் தமிழே சிறந்தது. ஆரிய நாகரிகம், மக்களை அடிமை உணர்வில் ஆழ்த்தும்; தமிழ் நாகரிகம் மக்களை வாழ்விக்கும்; ஆரியராம் பிராமணர் ஆதிக்கம் உடனே தொலையவேண்டும் - அப்போதுதான் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து -தன்னுரிமை பெற்று வாழ்வர் என்று எங்கும் வீரமுழக்கஞ் செய் தார்.

திருக்கோயில்களில் பார்ப்பனராதிக்கம் ஒழிய வேண்டும். அங்குத் தமிழ் மறைகளே முழங்கப்படல் வேண்டும். தமிழ்ப் பழக்க வழக்கங்கள் பரவல் வேண்டும். ஆரியப் பழக்க வழக்கங்களை - வர்ணாஸ்ரம தர்மங்களை அடியுடன் அறுத்தெரிய வேண்டும் என்றெல் லாம் எங்கெங்குஞ் சென்று முரசு கொட்டினார். இவற்றுடன் காங்கிரஸ் கொள்கைக்கு மாறுபட்ட பொது உடைமைக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைந்தார்.

அடிகள்பால் கவர்ச்சி

இவ்வாறு காங்கிரசிலிருந்து பிரிந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் முனைந்து நின்ற பெரியார், மேற்கூறிய கருத்துக்களைத் (அரசியற் கருத்துக்கள் தவிர) தமக்கு முன்பே பல்லாண்டுகளாகத் தனித்து நின்று முழங்கிவந்த அடிகள்பால் ஆன்ற அன்பும்,  மதிப்பும் கொண்டார். தம் தமிழர் முன்னேற்றக் கருத்துக்களுக்கு அடிகள் தலைவராய் விளங்கும் அருமை பெருமைகளை உணர்ந்தார்.

திரு.வி.கவும், ஈ.வே.ராவும்

நட்பில் திரு.வி.க.வும், பெரியாரும் ஓருயிர் ஈருடல் போன்றவர்கள். இருவரும் ஒருவர்பால் மற்றவர் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கொண்டவர்கள் கருத்து வேற்றுமைகள் இவர்கள் நட்பின்முன் தலைகாட்டுவதில்லை. ஆம் உயர்ந்தோர் தன்மை இவைதாமே! சென்னையை வாழிடமாகக் கொள்ளும் முன்பெல்லாம், ஈ.வே.ரா., சென்னை போதருங் காலெல்லாம் திரு.வி.க.வுடன்தான் தங்குவார். சென்னையில் எவ்வளவு அலுவல்கள் இருந் தாலும் திரு.வி.க.வை அன்றாடம் பார்க்கத் தவற மாட்டார். இரவில் அவருடன்தான் தங்குவார்; அளவளாவுவார், உறங்குவார். அவர்கட்கு வசதியான இடம் இராயப் பேட்டையிலுள்ள குகானந்த நிலையமாகும்.

இருவரும் அளவளாவுங்கால் தமக்குள் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றி வழக்கிடார்; ஒற்றுமைப்பட்ட கருத்தின் இனிமைகளைப் பேசி இன்புறுவர். உலகத்திலுள்ள அரசியல் கள், தனிப்பட்ட தலைவர்கள் - தொண்டர்கள் பற்றி எல்லாம் பேசுவார்கள். சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுவர். நாட்டுக்குத் தேவையான நலங்கள் பற்றி எண்ணுவர். தமிழிலக்கியங்கள் பற்றி ஆராய்வர். சமயங்கள் பற்றிப் பேசுவர். இந்நிலையில் அடிகள் பேச்சு வந்துவிடும். திரு.வி.க. அடிகள்பால் அளவி றந்த பித்தரல்லவா? அடிகள் பெருமையையும்,  புலமையையும் ஒன்றுக்கு ஆயிரமாக ஈ.வே. ராவுக்குக் கூறுவார். அடிகள் கருத்துக்கள் பல ஈ.வே.ரா. கருத்துக்கு அரணாயிருப்பதை விளக்குவார்.

திரு.வி.க.விடம் ஈ.வே.ரா.வுக்கு எல்லை யில்லா அன்பும், மதிப்பும் உண்டு. இதனை மேலேயும் கூறினோம். தம்மாற் பெரும் புலவரெனப் போற்றப் பெறும் திரு.வி.க.வே அடிகளை மிகமிக உயர்த்திப் பேசுவதைக் கேட்க அவர்க்கு அடிகள்பால் மேலும் அளவில்லா அன்பும், மதிப்பும் உண்டாவ தற்குக் கூறவா வேண்டும்?

அதனால், பெரியார் அடிகள் நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படிக்கலானார். அடிகள் நூல்களில், பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் என்ற நூல் அவர்க்கு வேதமாயிற்று. தாம் பேசுமிடங் களிலெல்லாம் அடிகள் கருத்துக்களை எடுத்துக் காட்ட அடிகளை வானளாவப் போற்றுவராயினார். இவ்வாறு அடிகளிடம் பேரன்பும் பெருங் கவர்ச்சியும் கொண்ட ஈ.வே.ரா. அடிகளை நேரிற் கண்டு பேச வில்லை; அதற்கு முற்படவும் இல்லை. நான் ஒரு போது அவர்களை, அய்யா!, தாங்கள் ஏன் பல்லாவரம் வரக்கூடாது? தங்களைப் பார்க்க அடிகளுக்க விருப்பம் உண்டே! என்றேன். அதற்கு அவர்,

என்ன சாமி! சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர். அவருடன் நான் பேச என்ன இருக்கிறது! என்றார். ஆனால், அவர்க்கு அடிகளைப் பார்த்துவிட வேண்டு மென்னும் ஆவல் மட்டும் மிகுதியாகயிருந்தது. அதற்கோர் வாய்ப்புக் கிடைத்தது.

அடிகளைக் காணல்

முற்கூறியாங்குத் தஞ்சையில் - கருந் தட்டான் குடியில் கரந்தைத் தமிழ்ச் சங்க விழா அடிகள் தலைமையில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, விழாவுக்கு முன்பாகவே ஈ.வே.ரா. வந்துவிட்டார். நான் அவரிடம், வாருங்கள் அய்யா! அடிகளிடம் உங்களை அறிமுகப் படுத்துகின்றேன் என்று வற் புறுத்தி அழைத்தேன். அடிகள் அப்போது மேடை மீது தலைமை இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். நாணத்தால் அவர் மறுத்து விட்டார். நான் மேடைக்குச் சென்று அடிகட்கு அவரைச் சுட்டிக் காட்டினேன்.

விழாவின் இடை நேரத்தில் அடிகள் மேடையினின்றும் இறங்கி சற்றே வெளி யிடஞ் சென்று மீள நேர்ந்தது. அடிகள் கூட்டத்திடையில் மேடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அடிகள் தம்மருகில் வருவதற்கு முன்பே ஈ.வே.ரா. எழுந்து நின்று அடிகளை அன்போடு வணங்கி நின்றார். நான் அடிகளுக்கு அவரை அறிமுகஞ் செய்து வைத்தேன். ஈ.வே.ரா. ஒன்றும் பேசாது இரு கைகளையும் கூப்பியபடி இருந்தார். அடிகள் அவரைத் தம்முடன் மேடைக்கு வந்து அமரும்படி அழைத்தார். அவர் அதற்கு இசையவில்லை.

ஆன்ற மதிப்பு

ஈ.வே.ரா. அடிகளோடு அளவளாவுதற்கு மறுத்த காரணம், அடிகள்பால் அவர் கொண்ட ஆன்ற மதிப்பேயாம். இதற்கு ஈண்டொரு நிகழ்ச்சியை எடுத்துரைத்தல் இனிமை யாகும். அஃதாமாறு - 1925இல் சென்னை யில் சுரேந்திரநாத் ஆரியா வீட்டில் ஈ.வே.ரா. தங்கியிருந்தார். அக்காலத்தில் காங்கிரஸ் தலைவராய்ப் பெரும் புகழ் படைத்தவராய் அவர் விளக்கமுற்றிருந்தார். நாட்டாள்கள் (பத்ரிகைகள்) வழியாக இவர் பெரும் புகழை யான் நன்கறிந்திருந்தேன். ஆரியாவின் எதிர்வீட்டில் யான் ஓர் நண்பரைக் காணச் சென்றிருந்தேன். அவர் எதிர் வீட்டில் ஈ.வே.ரா. இருப்பதை அறிவித்தார். என் நண்பருக்கு ஆரியாவின் நண்பர்.

என் நண்பரிடம் யான், ஈ.வே.ரா.வைப் பார்க்க விரும்புவதைத் தெரிவித்தேன். அவரென்னை அங்கழைத்துச் சென்றார். எனக்கப்போது பதினெட்டு ஆண்டு. உட்கார்ந்திருந்த ஈ.வே.ராவுக்கு யான் அறிமுகப்படுத்தப்பட்டேன். உடனே, அவர் திடுமெனத் தம்மிருக்கையை விட்டு, ஆ! அடிகள் புதல்வரா? என்றெழுந்து நின்று வணங்கினார். சிறுவனாகிய யான் நாணத்தினாலும், வியப்பினாலும் திகைத்து மெய்மயிர் சிலிர்த்து நின்றேன். ஆ! மாபெருந்தலைவர்.

எவ்வளவு பணிவாக இருக்கிறார்! சிறுவனாகிய என்னை எழுந்து நின்று வணங்கி நிற்கின்றாரே! என்ன வியப்பு என்றெல்லாம் மயங்கி நின்றேன்  சில நொடிகள். அப்போதவர், என்னை இருக்கையில் உட்காரச் சொன் னார். நான் குழறிக் குழறித் தாங்கள் பெரியவர்கள். தாங்கள் உட்கார்ந்த பிறகே நான் உட்காருவேன் என்றேன்.  அதற்கவர் தாங்கள் அடிகள் புதல்வரல்லவா! அடிகளைப் போலப் பெரும்புலவர் யாருளர்? அவர்கள் எங்கள் தலைவர். அவர் புதல்வராகிய தாங்கள்தான் முதலில் அமரவேண்டுமென்று சிறியனாகிய என்னை வற்புறுத்தி உட்கார வைத்து விட்டுப் பிறகே அவர் உட்கார்ந்தார் என்பதாம்.

சுயமரியாதை இயக்கம்

காங்கிரஸ் இயக்கத்தினின்று பிரிந்த பின் சில ஆண்டுகள் ஈ.வே.ரா. சீர்திருத்தக் கருத்துகளை விளக்கப்படுத்திக் கொண் டும், தமிழின - நாகரிக மறு மலர்ச்சிக்குப் பணியாற்றிக் கொண்டுமிருக்கையில் வேறோர் திசையில் நாட்டங்கொண்டார். அவர் கருத்துப்படி, ஆரிய நாகரிகமாம் வர்ணாஸ்ரம தர்மப் பிடியிலிருந்து - அவ்வாரியஆதிக்கப் பிராமணர்களின் பிடியிலிருந்து தமிழினம் விடுதலை பெறவேண்டும். அதற்குத் தமிழர்கள் தம் சுயமரியாதையை உணர்தல் வேண்டும். உணர்ந்து பிராமணர்கள் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறவேண்டும். அதற்கு; கிளர்ச்சி செய்து தமிழ் மக்கள் பயன்பெற ஓர் இயக்கம் வேண்டுமென்று கருதினார். கருதியவாறே சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை (அடிகள் கொண்ட மகிழ்ச்சி)

கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமய நுல்களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத் தொண்டராம் அடிகள் தாம் பரப்பவிருந்த தமிழ் இன நாகரிக, மொழி சீர்திருத்தக் கருத்துக்கள் யாவற்றையும் ஈ.வே.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார். யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொது மக்களிற் சிறந்தார் சிலருக்குகே பயன் தருகின்றன. ஆனால், ஈ.வே.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர், பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன. என்னோக்கம் எனக்கு வருத்தம் தருதலின்றி எளிதே முற்றுரு கின்றன. ஆதலால், ஈ.வே.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க! என்று தம்மைக் காண வருவோரிடமெல்லாம் அடிகள் கூறவே, ஈ.வே.ராவை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தார்.
(நூல்: மறைமலை அடிகள் வரலாறு ஆசிரியர் மறை.திருநாவுக்கரசு.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...