ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ராப் என்ற சொல்லிசை வடிவத்தைக் கேட்டிருப்போம். ஆனால் எதிலும் வணிகப் போக்கில் இருக்கும் தமிழ்த் திரைச்சூழலில் சொல்லிசையும் அப்படித்தான் ஆனது. அவற்றில் இருந்து மாறுபட்டு, அடி மேல் அடி வைத்து, இராவண்ணன், என்று வேறு திசையில் மக்களை இழுத்துச் சென்ற கலைஞர் சுஜீத்ஜீ. தனது யார் யார் பெரியார் பாடல் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான லண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜீத்ஜீயுடன் உண்மைக்காக உரையாடினோம். (முழுமையான நேர்காணல்)
கேள்வி: இசைத்துறை, சமூக சிந்தனை இவற்றில் சுஜீத்தின் பின்னணி என்ன-?
பதில்: புலம் பெயர்ந்து வந்த பிறகு என்னுடன் இருந்த ஏதோ ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தால் பத்திரிகை ஒன்றில் சேர்ந்து ஆசிரியர் குழுவில் ஒருவனாய் இருந்து எல்லாளன் என்ற பெயரில் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். பாடல் எழுதுகிற பழக்கமும் இருந்தது. பாடல்கள் எல்லாமே கணினிக்குள்ளேயே இருந்ததே தவிர வெளியில் வரவில்லை. எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. சங்கீதம் கற்றக்கொண்டு பாடல் எழுதலாமென்றால் விடிந்துவிடும். ஆகவே, இந்த சொல்லிசை நல்ல விசயமா பட்டுச்சு. ஏனெனில் மற்ற பாடல்களிலிருந்து இது வித்தியாசமாய் இருக்குமென்று எனக்குப் பட்டது. மேற்கத்திய நாடுகளில் இதற்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. 2005க்குப்பிறகு சமூகம் சார்ந்த தேடல்கள் அதிகரித்தது. ஈழம் சார்ந்த பாடல்களை எழுதத் தொடங்கினேன். முதலில் சிங்கிள்ஸ் ஆல்பம் வெளியிட்டோம். அதன்பிறகு, ஈழத்திற்கு வெளியே, மனித சமுதாயம் என்று பார்வை விரிந்த பிறகு எனது பாடல்களும் அதைச் சார்ந்ததாக வெளிவந்தது. முதல் ஆல்பத்திற்கும் அடுத்து வந்த அடிமேல் அடி வைத்துப் பாடலுக்கும் நிறைய மாற்றம் இருக்கும். எனது சமூகப் பார்வை மாறியிருக்கிறது. இதைத்தான் எனது பின்னணியாக சொல்ல முடியும்.
கேள்வி: இன்றைய புலம்பெயர் தமிழர்களின் சூழல், அதில் காட்சி ஊடகத்தின் பங்களிப்புகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: புலம் பெயர் மக்களில் இப்போது இருப்பது இரண்டாம் தலைமுறை. அவர்களுக்கு அறிவு அதிகம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முக்கிய பிரச்சினை என்னவென்றால், காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரையில் ஒரு சிறு பகுதியினர்தான் சமூகம் பற்றி அக்கறையோடு நினைக்கிறார்கள்; குறும்படங்கள், ஆவணப்படங்கள் என்று திடமான, ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் தமிழ்நாடு சினிமா படங்களைப்போல இருந்தால்தான் எடுபடும் என்று தவறாக நினைத்து இயங்குகிறார்கள். நான் சினிமாவை தவறாக சொல்லவில்லை. கதை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெரும்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கேள்வி: சொல்லிசை என்பது (Rap) மக்களிடம் கருத்தைக் கொண்டு போய் சேர்க்கிறதா? வெறும் கூச்சலாக, உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருக்கக் கூடும் என்று சொல்கிறார்களே. அதுபற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: அது உண்மைதான். ஆனால், முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், வழமையான எங்களுடைய இசைவடிவம் இவ்வளவு வேகமானது கிடையாது. பேசுகிறபோது இசையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம். அது சாதாரண விசயம். ஆனால் பழமையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்குத்தான் சொல்லிசை. அதில் கட்டைகளுக்குள்ளேதான் பாடல் வரவேண்டும். இது அப்படி அல்ல, இதற்கு கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது. சில பாடல்கள் அப்படி இருந்தாலும், எல்லா பாடல்களையும் அப்படிச் சொல்ல இயலாது. உணர்ச்சி வசப்படுத்துகிறது என்பது பொய். அது பாடல்களைப் பொறுத்து இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், நான் 2009லே எழுதிய பாடல்கள் அப்படித்தான் இருந்தது. அதற்கான தேவை இருந்தது. அதுவும் உணர்ச்சி வசப்படுத்துவது என்பதைவிட உடனடி உந்துதலை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். ஆனால், இப்போது ஊரில் இருக்கிற ஒரு பிரச்சினையைப் பற்றி எழுதியிருந்தேன். அது உணர்ச்சிவசப்படுத்தவில்லை. ஒரு எழுத்தாளன் கட்டுரை எழுதியதுபோல, நான் பாடல் எழுதினேன் அவ்வளவுதான்.
கேள்வி: இதுவரை நீங்கள் தயாரித்த பாடல்கள் பற்றி...
பதில்: இதுவரை கிட்டத்தட்ட 60 பாடல்கள், 4 இசைத் தொகுப்புகளிலும் தனியாகவும் வெளிவந்திருக்கிறது. கடைசியா வந்தது இராவண்ணன் தொகுப்பு. 2009-இல் போர்க்காலத்தில் அணையாது என்ற பெயரில் ஒன்று வெளியிடப்பட்டது. இராவண்ணன் என்று பெயர் வைக்கும்போது, ஏன் வில்லன் பெயரை வைக்கிறாய் என்றுதான் ஈழத்தமிழர்களே கேட்டார்கள். ஒரு தெலுங்கு நண்பர்தான் ஏன் தீபாவளியை உங்கள் ஈழத்தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டார். ஈழத்தமிழர்களின் விளக்கம் நரகாசுரன் என்றுதான் இருந்தது. அங்கால, நான் அதுபற்றி அறிந்துகொண்ட போதுதான் இராவண்ணன் பிறந்தது. ஆரிய திராவிடரைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது. என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய திறமையை சமூகம் சார்ந்த விடயங்களில் பயன்படுத்தோணும் என்கிற ஆர்வம். அதைத்தான் இப்ப வருகிற பாடல்களில் நீங்கள் பார்ப்பீங்கள்.
கேள்வி: சரி, உங்கள் சிந்தனைப் போக்கில் பெரியார் எங்கே வருகிறார்? எப்பொழுது பெரியாரைப் பற்றி பாடல் எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: ஏற்கனவே நான் சொன்னது மாதிரி, சமூகத்தினுடைய பிரச்சினைகள் அல்லது சமூகத்துக்காக பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிற போது,குறிப்பாக தமிழ் சமூகம் என்று சொல்கிற போது, பெரியாரை நான் மறக்க முடியாது. இதில் என்ன கிடக்கிறது எண்டால் இராவணன் பற்றி அறிந்து கொள்கிற போது, அதற்கப்பால் பெரியாரைப் பற்றிய முழுமையான பார்வை எனக்குக் கிடைத்து. மனுசனை மனுசன் மதிக்க வேணும் சாதியெல்லாம் கிடையாது என்று பெரியார் சொல்லுவதை அறிகிற போது நானும் அதில் ஒற்றுமையானேன். அப்படியிருக்கிற போது இயல்பாகவே இந்த மனிதரை(பெரியாரை)ப் பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்கிற ஆசை வந்து சேர்ந்தது. இது தமிழ்நாட்டில் எப்படி போகுமென்று எனக்குத் தெரியாது. வழமை போலே புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தலேதான் பெரியார் பற்றிய பாடல் எழுதி வெளியிட வேணும் என்றுதான் இருந்தேன். பெரியார் சொன்னதைப்போல புரட்டிப் போட வேணும் என்பதற்கேற்ப ஒரு துள்ளல் இசையோட அந்தப் பாடல் வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேணும்.
கேள்வி: பெரியாரைப் பற்றி நீங்கள் எழுதிய பாடலில் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டு எழுதியிருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இது உங்களுக்கு எப்படி வாய்த்தது?
பதில்: பெரியாரைப் பற்றி எனக்கு சிறிதளவுதான் தெரியும். அப்பொழுது ஈழத்தமிழர் சம்பந்தமாக தமிழ்நாட்டில் இருக்கிற ஒருவர் எழுதிய பாடலைக் கேட்டேன். அந்தப் பாடலை நான் ஒரு ஈழத்தமினாக இருந்தபடியே கேட்டேன். எந்த அளவுக்கு அது இருந்ததென்றால், தட்டி தட்டி கொண்டுபோய்க் கொண்டிருந்தார். அவதானமாக இருந்தது என்று உணர்ந்தேன். அந்தப் பிழையை நான் செய்துவிடக் கூடாது எண்ட எண்ணம் எனக்கு வந்தது. அதற்காக வேண்டி பெரியாரை வாசிக்க வேண்டி வந்தது. அப்படித்தான் நான் பெரியாரை அறிந்து கொண்டேன். அதற்கு இணைய தளங்களும், பெரியார் திடல் தோழர் பிரின்சு போன்றவர்களும் உதவினார்கள்.
கேள்வி: இன்றைய சூழலில் பெரியார் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்-? அதை தமிழ்ச் சமூகம், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எப்படி உணர்ந்துள்ளது?-
பதில்: சமூக அக்கறை கொண்ட பெரியார் என்ற மனிதனின் தேவை இன்னும் இருக்கிறதா என்று கேட்பதே பிழையான கேள்வி. பெரியாருடைய காலத்தில் இருந்த அணுகுறைக்கும் இன்றைக்கு இருக்கிற அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால், பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைய காலத்தில் மிகவும் ஆக்ரோசமாக பேசினார் எண்டால், அன்றைய காலம் அப்படி. அவன் அடக்கிறான் எண்டால் நீ ஏன் அவனுக்கு அடங்கிறே அப்படிங்கிற கேள்வி வந்தது. ஆனால், இன்றைக்கு அப்படி இல்ல எண்டாலும் பிரச்சினை ஏதோ ஒரு வடிவத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அய்யாவின் அணுகுமுறை இன்றைக்கு தேவையா என்றால் தேவை இருக்கிறது. அன்றைக்கு இருந்த ஜாதிப் பிரச்சினை இன்றைக்கு வேறுவடிவில் நாகரிகமாக இருக்கிறது. பார்ப்பனர்களின் பணி அன்று வெளிப்படையாக இருந்தது. இன்று மறைமுகமாக இருந்து வருகிறது. பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை இருந்துகொண்டிருக்கிற வரையில், பெரியாரின் தேவை சகல விதங்களிலும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
கேள்வி: கார்ப்பொரெட் சாமியார்களுக்கு பெருந்தொகைப் பணம் புலம்பெர் தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது.இந்நிலையில், பகுத்தறிவு சார்ந்த விசயங்களில் ஈழத்தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது? தேவை இருக்கும் பட்சத்தில், அதற்கான பிரச்சாரத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பது பற்றி ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?
பதில்: இருளுக்குப் பயந்த மனிதன் பகலைத் தர சூரியனைக் கண்டபோது வணங்கினான். பின்னர் சந்திரனை வணங்கினான் பின்னர் அபூர்வங்கள் எல்லாவற்றையும் வணங்கினான். ஆகக் கடவுள் என்பதன் தோற்றமே பாதுகாப்பின்மையால்தானே ஆரம்பிச்சுது.
ஈழத்தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருசமா இந்தப் போராட்டத்தில் மாட்டுப்பட்டு போயிருந்தார்கள் இல்லையா? நம்ம குடும்பம் சந்தோசமாய் இருக்க வேணும். பிள்ளைகள புடிச்சுட்டு போயிடக் கூடாது. சுட்டுபோட்டுடக் கூடாது என்று கவலைப்படுகிற சூழலில் இருந்தவர்கள்தான் இன்றைக்கிருக்கிற புலம் பெயர்ந்த தமிழர்கள். அப்படிப்பட்டவங்களுக்கு இன்றைக்கு பயம் இருக்கோ இல்லையோ அந்தப் பழக்கம் இருக்கு. அவங்களுக்கு பகுத்தறிவு தேவை. ஆனால், இளைய சமுதாயத்திற்கு இந்தக் கதவு திறக்குமானால், அது ஒரு நல்ல விசயமாக இருக்கும். போன தலைமுறையை விடுங்க. அது போயிடுச்சு. இரண்டாம் தலைமுறைக்கு பகுத்தறிவு தேவை எண்டு தெரிகிறது. ஆனால், இன்றைய சூழலில் அது சிக்கலாகத் தெரிகிறது. என்னுடைய பாடல்கள், குறும்படம் போன்ற மற்ற பணிகள் இதைச் சுற்றித்தான் இயக்குகின்றன. என்னைச் சுற்றி இருப்பவர்கள் சிலரும் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெரியார் என்றால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு நாத்திகவாதி அவ்வளவுதான். பெண்ணுரிமை பற்றி அவர் பேசியது தெரியாது. ஜாதி பற்றிய அவர் கருத்துகள் தெரியாது. பகுத்தறிவு பற்றி தெரியாது. நேரே அந்த மனுசன் கடவுள் இல்லையெண்டு சொல்கிறார். அவ்வளவுதான் தெரியும். இந்த எண்ணம் மாற்றப்படும் எண்டாலே பல விசயங்கள் உள்வாங்கப்படும். அதற்கு ஊடகங்கள்தான் உதவோணும். பெரும்பாலும் வணிகம் சார்ந்தே இருக்கிற ஊடகங்கள் கொஞ்சம் இதிலும் கவனம் செலுத்தினால் நிலைமை மாறும்.
கேள்வி: பெரியாரைப்பற்றி ஒரு பாடல் செய்தீர்கள். இராவண்ணனைப் பற்றி ஒரு பாடல் செய்தீர்கள். அடுத்து உங்கள் பணி எதைப்பற்றியதாக இருக்கும்?
பதில்: பெரியாரைப்பற்றி ஒரு முழு ஆல்பம் பண்ண வேண்டும். அது இன்னும் முழுமை அடைய கொஞ்ச காலம் ஆகும். அதுக்கு முன்பு பம்பல் எண்டு செய்யறோம். அதாவது பம்பல் எண்டு சொன்னால் களியாட்டம் மாதிரி. ஒரு வீதியில பத்து பேரு சந்தோசமாக பேசிக் கொண்டு இருப்போம். அதை பம்பல் எண்டு சொல்லுவோம். அந்த வழக்கை மறக்கக் கூடாது என்பதற்காக அதில் ஒரு பாடல் செய்ய வேண்டும். அங்காலே சமூக பிரச்சினைகளை இப்படியாக சொல்ல வேண்டும் என்கிற ஒரு நோக்கம் இருக்கிறது. அதைவிட, அண்மையில், பொய் என்றொரு பாடல் எழுதினேன். காதல் தோல்வியடைந்த இளைஞர்களுக்காக வழமையாக எழுதப்படும் பாடல்கள் சோகத்துடன் இருக்கும். இப்பாடல், வாழ்க்கை என்பது அப்படி இல்லடா என்று சொல்வது போல இருக்கும். மற்றபடி எனக்கு ஜெர்மன் தெரியுது, பிரெஞ்சு தெரியுது. தாய்மொழியும் தெரியுது. தாய்மொழிகூட தெரியாம சிலர் இருகாங்க. அந்த நிலையை உடைக்க கலைஞர்கள் நாங்கள் ஏதாவது செய்யவேண்டும். இந்த மாதிரி நாங்கள் இருக்க வேண்டும் என்று ஒரு ஆசை. மற்றபடி, இங்கால இருக்கிற தமிழ் மக்கள் தமிழை எழுதப் படிக்க தெரியாதென்டாலும் பரவாயில்லை. பேசவாவது தெரிந்து கொள்ளணும். அப்பொழுதுதான் தங்கள் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள முடியும். தமிழனுக்கு தமிழ் தெரியாது என்பது ஒரு ஊனம் மாதிரிதான். அதிகபட்சமாக தமிழர்கள் பலவற்றை இழந்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் தாய்மொழியையாவது இழக்காமலிருக்க வேண்டும். அது இந்தியத் தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என்று கூறவில்லை. பொதுவாக எனது ஆசையை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் வெளியிட்டிருக்கிற கடவுள் பற்றியும் பாடல் உருவான விதம் குறித்து கூறுங்கள்?
பதில்: என்னைப் பொறுத்தவரையில் மக்களுக்கிருக்கிற பாதுகாப்பின்மை உணர்வுதான் கடவுளுக்கான காரணம். பிறகு, அது ஒரு டீலிங் போல மாறிப் போனது. இதைக் கொடுத்தால் இதைத் தரவேண்டும் என்று ஆனது. பாதுகாப்பு இன்மைக்கு அங்கால கடவுள் பற்றி ஒரு பாடல் செய்ய வேண்டும் என்று யோசிச்சுக் கொண்டு இருந்தோம். முழுக்கவும் மேற்கத்திய இசையாகவும் இருக்கக்கூடாது. முழுக்கவும் தமிழ் மாதிரியும் இருக்கக்கூடாது. இடையில ஒரு பீட்ஸ்போட்டு அனுப்புங்கள் என்று கேட்டிருந்தேன். அவர்கள் அனுப்பியிருந்தார்கள். என்னுடைய ஒன் லைன் கடவுள்னா காவல்காரன். இராவண்ணன் என்று சொல்லும்போது ஆரிய, திராவிட சிந்தனைகளை வைக்கிற மாதிரி இதுக்கு என்ன செய்யறது என்று யோசிக்கிற பொழுது இது காவல்காரன் தொடர்பான விசயம். காவல்காரன்னா இரவு, இருட்டு, இல்லேன்னா அதிகாலை. ஊர் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் அதனால, ஒரு கோழி கூவி, நாயெல்லாம் குலைக்க வச்சு, கூர்க்காக்காரன் கூக்கூ என்று தட்ட வச்சு காட்டினோம். அதாவது, மனுசன் வந்து சமூகம், மனிதாபிமானம் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ போயிட்டான். அதனாலதான், எது கடவுள்னு இன்னும் யாருக்கும் தெரியல. அதாலதான் அன்பே கடவுள்னு ஒரு வார்த்தை பாட்டில வைச்சேன். என்னோட பார்வை என்னன்னா ஏதோ கடவுள கும்பிட்டு போறான்னு விட்டுடலாம். யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லேன்னா, ஏதோ சின்னப் பிரச்சினை ஏதோ அவங்கட்ட disorder-னு விட்டுடலாம். இது மத்தவங்களுக்கு பரவாது. ஆனா இதுக்காண்டே சண்டை! இவர் சரியா? அவர் சரியா? அதைத் தந்தியா? இதைத் தந்தியா? என்று பிரச்சினை. இப்ப அதெல்லாம் விட்டுட்டு சாதாரணமா வரணும். அன்பா வரணும், அன்புதாண்டா கடவுள், அப்பிடிங்கிற போக்கை கொண்டு வரணுமுங்கிறதுக்காக இந்தப் பாடல் கடவுள் சம்பந்தமான, சமயம் சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கோணும், அல்லது பிரச்சினைகள்இல்லாம பண்னோனும். கடவுள வச்சுக்கொண்டு அங்க அடிப்பான், இங்க அடிப்பான் மாறி மாறி அடிப்பான். வளர்ச்சியடைந்த மக்கள் அப்படி இருக்கக் கூடாது அப்படிங்கிறதுக்குத்தான் இந்தப் பாட்டு.
கேள்வி: தமிழ்திரைத்துறையில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறது?
பதில்: தமிழ் சினிமா என்பதில் பாடல்கள் கொஞ்சம் இந்தப் பக்கம் (சமூக நலப் பார்வையில்) இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். 5 பாட்டுல 4 பாட்டு வியாபாரம்தான். ஒன்றாவது சமூகத்திற்குப் பயன்படோயும் என்று நாம ஆசைப்படலாம். ஆனா, அங்கே இருப்பவர்களுக்கு, ’இங்க வந்து பாரு, இணையத்திலே பேசலாம், செய்யலாம்’ என்று தோன்றலாம். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ’இது வியாபார உலகம். இங்கு இப்படித்தான் இருக்க முடியும்’ என்று பதில் வரும். அதனால், இதுவரைக்கும் என்னுடைய பார்வை திரைத்துறையில் இல்லை. உண்மையாக, வெளிப்படையாகப் பேசினால், திரைத்துறையில் என்னால் நிலையாக நிலைத்திருக்க முடியாது. நிலைத்திருக்க வேண்டும் என்றால், இந்தியாவிலேயே நான் இருந்தால்தான் அதற்கான வாய்ப்பு இருக்கும். கடந்த காலத்தில் திறமைசாலி என்பதைத்தாண்டி போட்டியும் குறைவாகத்தான் இருந்தது. இன்று அப்படியல்ல. ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிறகு, நிலைமை மாறிப்போச்சு. அந்தக் குரலைப் பாடவைக்கலாமா? இந்தக் குரலைப் பாடவைக்கலாமா? என்று வந்துவிட்டது. நானும் வந்தேன் எண்டால் புதிய குரல் என்பதற்காக ஒரு நான்கு பாடல்கள் பாடலாம். அவ்வளவுதான். ஆனால், நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த மாதிரி பாடல்களை திரையில் நீங்கள் கேட்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால், எதுவும் சமூகம் சார்ந்து இருக்க வேண்டும். காதல் பாடல்கள் எழுத ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்த மாஸ் மீடியாவிற்காக சும்மா டண்டனக்கா என்று பாடல் படிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாகை சூடவா படத்தில் வருகிற காதல் பாடல் அழகானது. அந்த மாதிரி என்றால் சரி. அதாவது சமூகம் சார்ந்த, தமிழ் உணர்வு சார்ந்த பாடல்கள் படிக்க ஒரு ஆசை. இந்த முயற்சிகளை நான் செய்யவும் இல்ல. அது நம் இலக்கும் இல்ல. ஆனாலும் பாட்டு வரும்.
தெளிவாகப் பேசுகிறார் சுஜீத்ஜீ. அவரிடம் இன்னும் நாம் எதிர்பார்க்க நிறைய இருக்கிறது.
நேர்காணல்: இளையமகன்
உதவி: உடுமலை, செல்வா
No comments:
Post a Comment